நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தற்போது குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதோடு, அ.தி.மு.க-வில் அமைப்புச் செயலாளராகவும் பதவி வகித்துவருகிறார். இந்த நிலையில், இவரின் வீடு, உறவினர்கள் வீடு, அலுவலகம், தொழிற்கூடங்களில் கடந்த டிசம்பர் மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், கணக்கில் வராத, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக இவர்மீது குற்றம்சாட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் பதவியில் இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக தங்கமணி, அவரின் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இதன் அடிப்படையில், அப்போது 69 இடங்களில் நடைபெற்ற சோதனையில் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து அது குறித்து விசாரணை நடந்துவந்த நிலையில், சொத்து ஆவணங்கள் குறித்து விசாரணை செய்து அதை மதிப்பிடும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தங்கமணி வசித்துவரும் பள்ளிபாளையத்தை அடுத்துள்ள கோவிந்தபாளையத்தில் இருக்கும் அவரின் பூர்வீக வீட்டையும் வீட்டிலுள்ள பொருள்கள், அதற்கான ஆவணங்கள் குறித்தும் ஆய்வுசெய்தும், அவற்றை மதிப்பீடு செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். ஆனால், `தங்கமணி வீட்டில் மீண்டும் ரெய்டு' என்று புரளி கிளம்பியதால், அங்கு அ.தி.மு.க-வினர் குவிந்தனர். ஆனால், ஏற்கெனவே நடைபெற்ற சோதனையைத் தொடர்ந்து, அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து, வீடு மற்றும் பொருள்களை மதிப்பீடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய தங்கமணி,
"கடந்த 15.12.2021-ல் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் என் வீடு சோதனை செய்யப்பட்டதன் அடிப்படையில், கிட்டத்தட்ட 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு கட்டடத்தை ஆய்வு செய்வதற்காகவும், அளப்பதற்காகவும், அதன் மதிப்பீட்டை எடுப்பதற்காகவும் பொதுப்பணித்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை, வருவாய்த்துறை ஆகிய மூன்று துறை அதிகாரிகளும் வந்திருக்காங்க.

காலையிலருந்து என்னோட வீடு, அலுவலகம், தொழிற்சாலை ஆகிவற்றை அளவீடு செஞ்சுருக்காங்க. தொழிற்சாலையை பொறுத்தவரை, நான் பிறப்பதற்கு முன்பே கட்டப்பட்டது. ஆனால், வேண்டுமென்றே அதை இன்று அளவீடு எடுத்து, பொதுமக்கள் மத்தியில் எனக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கையை அரசு எடுத்திருக்கிறது. இதைச் சட்டப்படி சந்திப்போம்" என்றார்.