Election bannerElection banner
Published:Updated:

தஞ்சாவூர்: கொரோனா தடுப்பு நடவடிக்கை; டீக்கடைக்கு ரூ.5,000 அபராதம்! -வியாபாரிகள் அதிர்ச்சி

தஞ்சாவூர் கடைவீதி
தஞ்சாவூர் கடைவீதி ( ம.அரவிந்த் )

`டீ குடிக்கிறதால கொரோனா பரவிடும்னு சொல்லி பணம் கேட்டு எங்க வயித்துல அடிக்கிறீங்களே!' என அபராதம் வசூல் செய்யவந்த போலீஸிடம் கேட்டிருக்கிறார். 

தஞ்சாவூரில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி போலீஸார் டீக்கடை உள்ளிட்ட பல கடைகளில் ரூ.5,000 வரை வசூல் செய்துவருவதாக வியாபாரிகள் வேதனையுடன் புலம்பிவருகின்றனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும்  நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழக அரசு கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த 26-ம் தேதி புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதன்படி தியேட்டர்கள், பெரிய சூப்பர் மார்கெட்டுகள் மூடப்பட்டுள்ளன. ஹோட்டல் மற்றும் டீக்கடைகளில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மாஸ்க் அணியாமல் வரும் நபர்களிடம் அரசின் சார்பில்  ரூ.200 அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் தஞ்சாவூரில் பல்வேறு இடங்களிலுள்ள கடைகளில் ரூ. 5,000 வரை அபராதம் வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

போலீஸ் வசூல் செய்த அபராதம்
போலீஸ் வசூல் செய்த அபராதம்

இது குறித்து நம்மிடம் பேசிய கடை உரிமையாளர்கள் சிலர், ``கொரோனா பரவிவருவதைத் தொடர்ந்து அனைத்துக் கடைகாரர்களும் வியாபாரரீதியாக  பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய கடமை எங்களுக்கும் உண்டு என்பதை உணர்ந்தே நாங்கள் கடைகளை நடத்திவருகிறோம். இந்தநிலையில், கடந்த இரண்டு தினங்களாக தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய போலீஸ் டீக்கடைகளுக்கு வந்து ரூ. 5,000 வரை அபராதம் வசூல் செய்கின்றனர்.  டீக்கடை உரிமையாளர் ஒருவர், `என்ன சார் இது அநியாயமாக இருக்கு? எங்களுக்கு ஒரு நாள் வியாபாரமே அந்த அளவுக்கு ஆகாது. நீங்க 5,000 அபராதம் போடுறீங்க. டாஸ்மாக் கடைகள்ல கூட்டம் கூடுது. கூட்டமாக நின்னு மது வாங்கிட்டுப் போறாங்க, குடிக்கிறாங்க.

சமூக இடைவெளி என்பது சுத்தமாகக் கடைப்பிடிக்கபடுவதே இல்லை. அங்கெல்லாம் கொரோனா பரவாதா... சிலர் நின்னு டீ குடிக்குறதுல கொரோனா பரவிடும்னு சொல்லி பணம் கேட்டு எங்க வயித்துல அடிக்கிறீங்களே!' எனக் கேட்டிருக்கிறார். அதற்கு `இதை நீங்க முதல்வர்கிட்டதான் கேட்க வேண்டும். அபராதப் பணத்தை கட்டலைன்னா கடைக்கு சீல் வெச்சுடுவோம்!'  என போலீஸ் தரப்பில் கூற, வேறு வழியில்லாமல் அபராதம் செலுத்தியுள்ளனர்.

இதுபோல் பத்துக்கும் மேற்பட்ட கடைகளில் வசூல் செய்துள்ளனர். அதற்குரிய பில்லையும் கொடுக்கின்றனர். ஒரு டீக்கடைக்காரர் கோடிக்கணக்குலயா லாபம் சம்பாதிக்கப்போறார். இதேபோல் பானி பூரிக்கடை, பெட்டிக்கடை, சூப்கடை எனப் பல கடைகளில் அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொள்ளாமல் அபராதம் வசூலித்துள்ளனர். பூட்டியிருந்த கடை ஒண்ணுல ரூ.400 வாங்கிட்டு போய்ட்டாங்கன்னா பார்த்துக்கோங்க  இதை எங்க போய் சொல்ல... தஞ்சை நகரத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் இது போன்று போலீஸாரால் அபராதம்  வசூல் செய்யப்படுகிறது. இந்தக் கொடிய நேரத்தில் எங்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டிய அரசே மன உளைச்சலுக்கு ஆளாக்கும் செயலைச் செய்கிறது’’ என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

கொரோனா விதிமுறை
கொரோனா விதிமுறை

இது குறித்து போலீஸ்  தரப்பில் பேசினோம். ``சில டீ கடைகளில் கூட்டமாக நின்று டீ குடிப்பதைப் பார்த்து கடை உரிமையாளர்களிடம் எச்சரித்துவிட்டுச் சென்ற பிறகும் அவர்கள் கொரோனா விதிகளைக் கடைப்பிடிக்கவில்லை. அது போன்ற கடைகளுக்கு அபராதம் வசூல் செய்யப்பட்டது” எனத் தெரிவித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு