Published:Updated:

`இ-பாஸ் தானே... பணத்த கொடுங்க, வாங்கித் தர்றேன்!’ -தேனியில் சிக்கிய கார் உரிமையாளர்

காட்டுரோடு சோதனைச் சாவடி
காட்டுரோடு சோதனைச் சாவடி

போலி இ-பாஸ் மூலம், கோவையிலிருந்து தேனி வந்த காரை பறிமுதல் செய்த போலீஸார், கார் உரிமையாளரைக் கைது செய்தனர்.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சுகுமார் என்பவர், கோவையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், சொந்த ஊர் திரும்ப திட்டமிட்ட சுகுமாரை அணுகிய கார் உரிமையாளர் ஒருவர், `என்னிடம் பணம் கொடுங்கள். உங்களுக்கு இ-பாஸ் ரெடி செய்து தருகிறேன்’ எனக் கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பி, இ-பாஸை கையில் வாங்கிக்கொண்டு அவரது காரில் ஏறி வந்துள்ளார் சுகுமார்.

போலி இ-பாஸ் வழக்கில்  பறிமுதல் செய்யப்பட்ட கார்!
போலி இ-பாஸ் வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார்!

தேனி மாவட்ட எல்லையான, காட்டுரோடு சோதனைச் சாவடியில், வாகனங்களை சோதனை செய்த போலீஸார், சுகுமார் வந்த காரையும் சோதனை செய்து, இ-பாஸ் கொடுக்கும்படி கேட்டுள்ளனர். டிரைவர், இ-பாஸை கொடுக்க, அதை ஆய்வு செய்த போலீஸார், அது போலியானது என கண்டுபிடித்துள்ளனர்.

போலி இ-பாஸ்!

விசாரணையில், போலி இ-பாஸ் ரெடி செய்து கொடுத்தது தொடர்பாக, சுகுமார் மற்றும், கார் ஓட்டுநர் முருகேசன் ஆகியோருக்கு எந்தத் தகவலும் தெரியவில்லை என்றும், அனைத்திற்கும், கார் உரிமையாளர் வெம்மாண்டசாமிதான் காரணம் என்பதும் தெரிய வருகிறது. மேலும், பழைய இ-பாஸில், தேதி, பெயர் மாற்றம் செய்து பிரின்ட் எடுத்து சுகுமாரை அனுப்பியதும் தெரியவந்தது. கார் ஓட்டுநர் முருகேசன், கார் உரிமையாளர் வெம்மாண்டசாமி ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்த தேவதானப்பட்டி போலீஸார், கார் உரிமையாளர் வெம்மாண்டசாமியை பெரியகுளம் கோர்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர். கார் ஓட்டுநர் முருகேசன் மற்றும் சுகுமார் ஆகிய இருவரும் தனிமைப்படுத்தும் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல, கடந்த மாதம், போலி இ-பாஸ் மூலம் மும்பை தாராவியிலிருந்து தேனிக்கு பயணிகளை ஏற்றிவந்து கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கட்டப் பஞ்சாயத்து..கடத்தல்! - தேனி பேராசிரியருக்கு 3 மாதங்களாக நடந்த கொடுமை
அடுத்த கட்டுரைக்கு