Published:Updated:

`மன உளைச்சலை நீக்கும்; தனிமை முகாம்களில் உள்ள அனைவருக்கும் புத்தகம்!' - அசத்தும் தூத்துக்குடி ஆணையர்

புத்தக வாசிப்பு
புத்தக வாசிப்பு

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள தனிமை முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைப் போக்கும் வகையிலும், தனிமை நாள்களை பயனுள்ள வகையில் கழிக்கும் வகையிலும் வாசிப்பதற்காக புத்தகங்களை வழங்கிட உத்தரவிட்டுள்ளார் ஆணையர் ஜெயசீலன்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 5வது கட்டமாகத் தொடரும் ஊரடங்கில் மண்டலங்களுக்குள் பொதுப் போக்குவரத்திற்கு அனுமதி, வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி.. எனப் பல்வேறு தளர்வுகளை அளித்துள்ளது. இருப்பினும், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் ஒருபுறம் அதிகரிக்கத்தான் செய்கிறது.

புத்தக வாசிப்பு
புத்தக வாசிப்பு

இந்நிலையில், தற்போதைய ஊரடங்கு காலத்தில் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு வருவோர், அங்கு அமைக்கப்பட்டுள்ள தனிமை முகாம்களில் தங்க வைக்கப்படுகின்றனர். அவர்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அதில், ’நெகட்டிவ் ரிசல்ட்’ வந்தால், வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ’பாசிட்டிவ்‘ வந்தால் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

இதனால், அவர்கள் ஓரிரு நாள்கள் மட்டுமே தனிமை முகாம்களில் தங்க வேண்டும். அதேநேரத்தில் வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்குக் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்தாலும், 7 நாள்கள் இம்முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர். இதுபோன்ற முகாம்களில் தனி அறையில் தனிமையில் தங்க வைக்கப்படுவதால், பலருக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது. இதைப் போக்கிடவும், தனிமை நாள்களை பயனுள்ளதாகக் கழிக்கும் வகையிலும், வாசிப்பதற்காக தூத்துக்குடியிலுள்ள தனிமை முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பல்வேறு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஜெயசீலன் - மாநகராட்சி ஆணையர்
ஜெயசீலன் - மாநகராட்சி ஆணையர்

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் முனைவர்.ஜெயசீலனிடம் பேசினோம், ``தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியைப் பொறுத்தவரையில் அரசு பொறியியற் கல்லூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அன்னாம்மாள் கல்வியியல் தனியார் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிகளின் விடுதிகளில் தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளி மாவட்டம், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தூத்துக்குடிக்கு வருவோர் என தினமும் சராசரியாக 150 முதல் 200 பேர் வரை தங்கவைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகின்றனர்.

தனிமையில் இருப்பதால், அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலைப் போக்கிடும் வகையிலும், தனிமை நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவிடும் வகையில் வாசிப்பதற்காக புத்தகங்களை வழங்கி வருகிறோம். இதற்காக சிறுகதை, நாவல், தன்னம்பிக்கை, வரலாறு, இலக்கியம் எனப் பல்வேறு தலைப்புகளில் 150 புத்தகங்களை வாங்கியுள்ளோம். ’துப்பாக்கித் தோட்டாவை விட வீரியமானது புத்தகம்’ என்பார்கள். புத்தகவாசிப்பு நம்மைப் புதிய பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

புத்தக வாசிப்பு
புத்தக வாசிப்பு

ஒரு மனிதனுக்கு சுவாசிப்பு எவ்வளவு முக்கியமோ, அதேபோல வாசிப்பும் முக்கியம். வாசிப்புதான் ஒரு மனிதனைக் கூர்மையாக்கும். எனவே வாசிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில்தான் இதை ஏற்பாடு செய்துள்ளோம். வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும் அவர்களுக்கு மருத்துவக் கண்காணிப்பாளர்கள் மூலம் எடுத்துரைக்கப்பட்டு வருகிறது. பலரும் ஆர்வத்துடன் படிக்கிறார்கள். புத்தக வாசிப்பால் தனிமை எண்ணத்தை மறந்து மனஅமைதியுடன், புத்துணர்ச்சி பெற்று மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கருத்து கூறுகிறார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு