Published:Updated:

தாயை இழந்த சிறுவனின் துயரம்; கவனப்படுத்திய விகடன்; உதவிக்கரம் நீட்டிய அரசு!

நிவாரணம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன்
நிவாரணம் வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன்

``மழைக்கு வீடு இடிஞ்சதுல அம்மா இறந்துபோயிட்டாங்க. அன்னைக்கு நைட்டு நான் சித்தப்பா வீட்டுலையே படுத்துக்கிட்டேன். விடிஞ்சு பார்த்தப்போ, அம்மா மண்ணுக்குள்ள புதைஞ்சுபோய்க் கிடந்தாங்க’’- சிறுவன் ராகுல்காந்தி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகிலிருக்கிறது கிரிசமுத்திரம் அருந்ததியர் காலனி. இந்தப் பகுதியில் மண் சுவரால் எழுப்பப்பட்ட கூரை வீட்டில் தனது 14 வயது மகன் ராகுல்காந்தியுடன் வசித்துவந்தார் கணவரை இழந்த அண்ணியம்மாள். கடந்த ஆண்டு ஜூலை 10-ம் தேதி இரவு அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. கொட்டித் தீர்த்த மழைக்கு இடையிடையே மின்னலின் சீற்றமும் பொத்தல் கூரைக்குள் தாண்டவமாடியது. மகனை இறுகப் பிடித்திருந்த அண்ணியம்மாள் விபரீதம் நடந்துவிடுமோ என்று பதறியிருக்கிறார்.

புதையுண்ட நிலையில் கிடக்கும் அண்ணியம்மாள் சடலம்
புதையுண்ட நிலையில் கிடக்கும் அண்ணியம்மாள் சடலம்
கைவிடாத  தஞ்சை கலெக்டர், கண்ணீரைத் துடைத்த விகடன்; நெகிழும் சிறுவன்!

முந்தானையால் மகனின் தலையைப் போர்த்திக்கொண்டு அருகிலுள்ள உறவினர் வீட்டுக்கு ஓடியிருக்கிறார். ``என் வீடு ஒழுகுது. இன்னைக்கு நைட்டு மட்டும் என் புள்ளைய உங்க வீட்டுல படுக்கவெச்சுக்கோங்க’’ என்று கெஞ்சிக் கேட்டு தன் மகனை விட்டுச் சென்றிருக்கிறார். அண்ணியம்மாளுக்கு ஒதுங்க இடம் கிடைக்காததால், கூரைக்குள்ளேயே உயிரைப் பற்றிக்கொண்டு சுவரின் ஓரம் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். நள்ளிரவு நேரம் ஊரே நிசப்தமாக உறங்கிக்கொண்டிருந்தது. திடீரென அண்ணியம்மாளின் வீட்டு மண் சுவர் இடிந்து தரைமட்டமானது. மண் சுவர் மழைக்குக் கரைந்ததால், இடிபாடுகளுக்குள் சிக்கிய அண்ணியம்மாள் மண்ணுக்குள் உயிருடன் புதைந்தார்.

எழ முயன்றும் அவரால் முடியவில்லை. மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். மறுநாள் பொழுது விடிந்ததும் அண்ணியம்மாளின் வீடு சேற்றுக் குவியலைப்போல் இடிந்து விழுந்திருப்பதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். அண்ணியம்மாளின் உடல் முழுவதும் மண்ணுக்குள் சிக்கியிருந்தது. தலை மட்டும் வெளியில் தெரிந்ததைப் பார்த்து ஊர்மக்கள் கலங்கி நின்றனர். உறவினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் ராகுல்காந்தி தாய் இறந்த செய்தியைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்தான். ‘அம்மா... அம்மா...’ என்று கதறி அழுதபடி ஓடிவந்தவன் கண்ணீர் பெருக... தாயின் சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

சிறுவன் ராகுல்காந்தி
சிறுவன் ராகுல்காந்தி

சிறுவன் ராகுல்காந்தியின் துயரநிலையை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது. தாயின் இறுதிச்சடங்கு முடிந்த பிறகு தங்க இடமின்றியும், மாற்று உடைகளின்றியும் வீதியில் தவித்து நின்றான். அந்தநேரம், சித்தப்பா முறை உறவினரான ஞானவேலுவின் நம்பிக்கைக் கரங்கள் சிறுவனை இறுகப் பிடித்து அரவணைத்தன. ஞானவேலுவும் அதே பகுதியில்தான் மனைவி, பிள்ளைகளுடன் வசிக்கிறார். ராகுல்காந்தியையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று இதுநாள்வரை தன் பிள்ளையைப்போலவே பார்த்துக்கொள்கிறார். ஆனாலும், தாயை இழந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல் பெரும் சிரமத்தில் தவிக்கிறான் ராகுல்காந்தி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராகுல்காந்தியிடம் பேசினோம். ``நான் பக்கத்துல இருக்கிற கவர்மென்ட் ஸ்கூல்ல பத்தாவது படிக்கிறேன். எனக்கு மூணு வயசு இருக்கும். அப்பா தோல் ஷாப்புல வேலை செஞ்சுக்கிட்டிருந்தாராம். திடீர்னு ஒருநாள் நெஞ்சுவலி வந்து செத்துட்டார்னு அம்மா சொல்லியிருக்காங்க. அப்பா முகம்கூட எப்படியிருக்கும்னு தெரியாது. எனக்கு எல்லாமே அம்மாதான். வீட்டு வேலைக்குப் போய்த்தான் என்னை வளத்தாங்க. நல்ல புடவைகூட எங்க அம்மாகிட்ட கிடையாது. நான் படிச்சு பெரிய ஆளாகி அம்மாவுக்கு நிறைய செய்யணும்னு ஆசைப்பட்டேன். போன வருஷம் பெஞ்ச மழைக்கு வீடு இடிஞ்சு போச்சு. அம்மா புதைஞ்சுபோய்க் கிடந்தாங்க. இப்ப எனக்கு யாருமே இல்லை. நல்ல வீடு இருந்திருந்தா அம்மா என்னை விட்டுட்டுப் போயிருக்க மாட்டாங்க. அம்மா ஆசைப்பட்ட மாதிரி நல்லா படிக்கிறேன். எனக்கு ஐ.ஏ.எஸ் ஆகணும் ஆசை’’ என்றான் தன்னம்பிக்கையோடு!

சிறுவனுக்கு உதவியவர்கள்
சிறுவனுக்கு உதவியவர்கள்

இதையடுத்து, சிறுவன் ராகுல்காந்திக்கு உதவக் களமிறங்கினோம். வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, வளையாம்பட்டு பயிற்சி ஆசிரியை ஜீவிதா, சமூக சேவகர் தினேஷ் சரவணன் ஆகியோர் சிறுவனுக்குப் புத்தாடைகளை வாங்கிக்கொடுத்து ஆதரவுக்கரம் நீட்டினர்.

தொடர்ந்து, வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணிக்கு சிறுவனின் நிலை குறித்து அறியச் செய்தோம். உடனடியாக, ராகுல்காந்தியை நேரில் சென்று சந்தித்து ஏதேனும் குறைகள் இருக்கின்றனவா என்று கேட்டு நலம் விசாரித்தார்.

பின்னர், நம்மிடம் பேசிய கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி, ‘``அண்ணியம்மாளின் மகனுக்கு 4 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவரின் மரணத்துக்கு அரசுத் திட்டத்தில் ஏற்பட்ட முறைகேடுதான் காரணம் என அங்கிருக்கும் மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர் வசித்த இடம் ரயில்வே புறம்போக்கு நிலம். எனவே, வீடு அலாட்மென்ட் செய்ய முடியாது. சிறுவன் ராகுல்காந்திக்குத் தேவையான அத்தனை உதவிகளையும் செய்துத்தர தயாராக இருக்கிறோம். எக்காரணம் கொண்டும் சிறுவனைக் கைவிட்டுவிட மாட்டோம். இழப்பீட்டுத் தொகையும் விரைவாக வழங்கப்படும்’’ என்று உறுதியளித்தார்.

வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி
வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி

அதன்படி, மாநிலப் பேரிடர் மீட்பு நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் வழங்குவதற்கான நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி. இதையடுத்து, சிறுவன் ராகுல்காந்தியின் வங்கிச் சேமிப்புக் கணக்கில் மின்னணு பரிவர்த்தனை மூலம் ரூ.4 லட்சத்தை வரவு வைக்கும் ஆணையை திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் சிறுவன் ராகுல்காந்தியிடமே மாவட்ட வருவாய் அலுவலர் தங்கையா பாண்டியன் வழங்கினார்.

இது குறித்து, சிறுவன் ராகுல்காந்தியின் சித்தப்பா ஞானவேலு கூறுகையில், ``நிவாரணத் தொகை கிடைக்குமா என்ற சந்தேகத்தில்தான் இருந்துவந்தோம். விரைவாகக் கிடைக்க உதவிச்செய்த விகடனுக்கும், வாணியம்பாடி கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணிக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார்.

கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி கூறுகையில், ``இது போன்ற சமூகப் பிரச்னைகளை எங்களின் கவனத்துக்குக் கொண்டுவந்ததற்கு முதலில் விகடனுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு