இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. தமிழகத்தில் நேற்று மட்டும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,000-த்தை கடப்பது நேற்றுதான் முதல் முறை. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,36,793 ஆக உள்ளது. மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,232 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 60,375 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரையில் தமிழகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவலைத் தடுக்க அதிகப்படியான பரிசோதனைகள் மேற்கொண்டு பாதிப்பு உள்ளவர்களை முன்னதாகவே தனிமைப்படுத்துதல் என்பது முக்கியம்.
அதேநேரத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பலி எண்ணிக்கையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்துகளோ தடுப்பு மருந்துகளோ இன்னும் அதிகாரபூர்வமாக கண்டுபிடிக்கவில்லை என்றாலும் சில சிகிச்சை முறைகள், ஏற்கெனவே வேறு சில நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் பல நேரங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் கை கொடுத்துள்ளது. அப்படியானதுதான் பிளாஸ்மா சிகிச்சை முறை.

பிளாஸ்மா சிகிச்சை முறை என்றால் என்ன?
ஏதேனும் ஒரு வைரஸ் அல்லது பாக்டீரிய கிருமியால் நோய்த் தொற்று ஏற்பட்டு, அதிலிருந்து குணமடைந்த நோயாளியின் உடலில் இருக்கும் ரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து, அதே நோய்க் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கும் மற்றொரு நோயாளியின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கும் முறைதான் பிளாஸ்மா தெரபி.
கொரோனாவுக்கான பிளாஸ்மா சிகிச்சை வெற்றியை அடிப்படையாகக் கொண்டு முதலாவது பிளாஸ்மா வங்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூபாய் 2.34 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 30 நிமிடத்தில் 7 நபர்களிடமிருந்து தலா 500 மி.லி பிளாஸ்மாவை கொடையாகப் பெறுவதற்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
யார் யார் தானம் செய்யலாம்?
``எவ்வித பயமும் அச்சமும் இன்றி தாமாகவே முன்வந்து உயிரைக் காப்பாற்ற பிளாஸ்மாவை நன்கொடையாக வழங்கலாம்” என அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகள் 14 நாள்களுக்குப் பிறகு பிளாஸ்மா தானம் செய்யலாம். இணை நோய்கள் உள்ளவர்கள் பிளாஸ்மாவை தானம் செய்யக் கூடாது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை 400 முதல் 500 மில்லி லிட்டர் தானமாகக் கொடுக்கலாம்.

பிளாஸ்மா கொடுப்பது என்பது, நாம் ரத்த தானம் செய்யும் முறைபோன்ற ஒன்றாகும். அப்படி ரத்தத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படும் பிளாஸ்மாக்கள் தற்போது மிதமான கொரோனா பாதிப்புடன் உள்ள நோயாளிகளுக்கு செலுத்தப்படுகிறது. இதனால் மிதமான கொரோனா நோயாளிகளின் உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரித்து விரைவில் குணமடைகின்றனர்.
வரும் நாள்களில், ஒருவேளை நோய்ப்பரவல் மிகத் தீவிரமடைந்து இறப்புவிகிதம் அதிகரிக்கும் சூழலில், பிளாஸ்மா தெரபி கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் பெரும் உதவியாக இருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் தொடர்பான தகவல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. பரிசோதனை முயற்சிகள் முழுமையான அளவில் வெற்றிபெற்றாலும், மருந்துகள் முழு அளவில் பயன்பாட்டுக்கு வர கூடுதல் காலம் தேவைப்படும் என்கிறார்கள். இடைப்பட்ட காலத்தில் கொரோனாவால் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதில் பிளாஸ்மா சிகிச்சைமுறை பலன் அளிக்கும் என்றே நம்பலாம்.

இதனிடையே தமிழக அரசு கோவிட் பிளாஸ்மா வங்கிகளை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், திருச்சி, சேலம், கோவை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள் என 7 இடங்களில் புதிதாக பிளாஸ்மா வங்கிகள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.