Published:Updated:

திருச்சி: மோசடி வேலையில் எல்பின் நிறுவனம்? ரூ.2 கோடியைத் திருப்பிக் கேட்டவரைத் தாக்கியதாகப் புகார்!

எல்பின் நிதி நிறுவனம்
எல்பின் நிதி நிறுவனம்

ராஜா பா.ஜ.க-வில் இருப்பதால், அவர்மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது என்று மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுப்பதாகத் தகவல் வருகிறது. என்னைப்போல் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

எல்பின் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தைத் திருப்பிக் கேட்ட மிதுன் சமேஸ் என்பவரைச் சரமாரியாகத் தாக்கியதோடு, அவரிடம் கொடுத்த செக்கையும் பிடுங்கிக்கொண்டதாக திருச்சி காவல்துறை ஆணையரிடம் இளைஞர் ஒருவர் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அவர்கள்மீது வழக்கு பதிவு செய்துவிடக் கூடாது என்பதற்காக பா.ஜ.க பிரமுகர் வரை அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள் என்ற தகவலும் பரவிவருகிறது.

எல்பின் நிதி நிறுவனம்
எல்பின் நிதி நிறுவனம்

திருச்சி பிராட்டியூரைச் சேர்ந்தவர் மிதுன் சமேஸ். இவர் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் மனு அளித்த பிறகு நம்மிடம் பேசுகையில், ``திருச்சி கல்லுக்குழியிலுள்ள எல்பின் என்கிற தனியார் நிதி நிறுவனம். நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் 72,82,500 ரூபாய் முதலீடு செய்தேன். பத்து மாதங்கள் கழித்து மூன்று மடங்காகத் திருப்பித் தருவதாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா, அவரின் தம்பி ரமேஷ் ஆகியோர் என்னிடம் உறுதி அளித்தனர்.

அதன் பின்னர், உங்களுடைய உறவினர்கள் யாராக இருந்தாலும் அழைத்து வாருங்கள் அவர்களுக்கும் அதிக வட்டி கொடுப்பதாகவும் என்னை மூளைச்சலவை செய்தனர். அவர்கள் சொன்னதன் பேரில் என் உறவினர்கள் 10 பேரை அந்த நிறுவனத்தில் பணம் செலுத்தவைத்தேன். ஆக மொத்தம் 2,18,98,500 ரூபாய் செலுத்தியுள்ளோம்.

ஆணையரிடம் புகார் கொடுத்த மிதுன் சமேஸ்
ஆணையரிடம் புகார் கொடுத்த மிதுன் சமேஸ்

செலுத்திய பணத்துக்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில், பணம் கேட்டுச் சென்றபோது தகாத வார்த்தைகளால் திட்டி அடித்ததோடு, அவர்கள் கொடுத்த செக்கையும் (காசோலை) பிடுங்கிக்கொண்டனர். காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்போகிறேன் என்று சொன்னபோது, `எந்த போலீஸாரும் எங்கள்மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். எங்கு வேண்டுமானாலும் போய்ச் சொல்லு’’ என்று என்னை அடித்துத் துன்புறுத்தினர்.

என்னைத் தாக்கிய ராஜா, ரமேஷ், இளங்கோவன், பால்ராஜ் உள்ளிட்ட பத்து பேர் மீது புகார் அளித்துள்ளேன். அதோடு ,ராஜா பா.ஜ.க-வில் இருப்பதால் அவர்மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது என்று மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுப்பதாகத் தகவல் வருகிறது. என்னைப்போல் பலர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும்" என்றார் பரிதாபமாக.

எல்பின் உரிமையாளர் தம்பி ரமேஷ், அண்ணன் ராஜா
எல்பின் உரிமையாளர் தம்பி ரமேஷ், அண்ணன் ராஜா

இது குறித்து எல்பின் நிதி நிறுவனம் தரப்பில் பேசினோம். ``நாங்கள் யாரையும் ஏமாற்றவில்லை. பலருக்கு நாங்கள் சொன்னதைவிட அதிகமான பணம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். இது கொரோனா காலகட்டம் என்பதால், எங்களால் பணத்தைப் புரட்டிக் கொடுக்க முடியவில்லை. எங்களுக்குத் தர வேண்டியவர்கள் இழுத்தடிக்கிறார்கள். கூடிய விரைவில் கொடுத்துவிடுகிறோம்" என்றார்.

திருச்சி போலீஸார்
திருச்சி போலீஸார்

இது குறித்து போலீஸார் வட்டாரத்தில் விசாரித்தோம். ``பொதுமக்களை ஏமாற்றுவதாக எல்பின் நிதி நிறுவனத்தின் மீது பல புகார்கள் வந்துகொண்டிருப்பது உண்மைதான். இவர்களைப் பற்றி விசாரிக்க கமிஷனர் ஒரு டீம் உருவாக்கியுள்ளார். அவர்கள் முறையான விசாரணையை மேற்கொள்வர்" என்று முடித்துக்கொண்டார்கள்.

அடுத்த கட்டுரைக்கு