Published:Updated:

”என் படிப்பைவிட தங்கச்சிகளோட பசிதான் முக்கியம்!” - டோல்கேட்டில் முந்திரி விற்கும் மாணவி வசந்தி

மாணவி வசந்தி

”தினமும் சாயந்திரம் 5 மணிக்கு டோல்கேட்டுக் போய் நைட் 10 மணி வரைக்கும் வியாபாரம் பார்ப்பேன். ஒருசில நாள் சுத்தமா வியாபாரம் இருக்காது. அந்த மாதிரி நாள்ல விடிய விடிய நின்னு வியாபாரம் பண்ணுவேன்” – மாணவி வசந்தி

”என் படிப்பைவிட தங்கச்சிகளோட பசிதான் முக்கியம்!” - டோல்கேட்டில் முந்திரி விற்கும் மாணவி வசந்தி

”தினமும் சாயந்திரம் 5 மணிக்கு டோல்கேட்டுக் போய் நைட் 10 மணி வரைக்கும் வியாபாரம் பார்ப்பேன். ஒருசில நாள் சுத்தமா வியாபாரம் இருக்காது. அந்த மாதிரி நாள்ல விடிய விடிய நின்னு வியாபாரம் பண்ணுவேன்” – மாணவி வசந்தி

Published:Updated:
மாணவி வசந்தி
”வீட்டில் கஷ்டம். அதனால் அப்பா, அம்மாவுக்கு உதவியா டோல்கேட்டில் முந்திரி விக்கறேன். டிப்ளமோ ( இ.சி.இ ) செகண்ட் இயர் படிச்சிட்டிருந்தேன். ஃபீஸ் கட்ட முடியல. அதனால் கல்லூரிக்கு போகல…!”

கையில் முந்திரி பாக்கெட்டுகளுடனும், முகத்தில் வெட்கம் கலந்த புன்னகையுடனும் வசந்தி என்ற இளம்பெண் பேசும் இந்த வீடியோ கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் வைரல். வசந்தியின் சிரிப்பில் ஒளிந்திருந்த வலியை அறிய அவரை தேடிச் சென்றோம். உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் இருந்து சில மீட்டர் தூரத்தில் இருக்கிறது வசந்தியின் இருப்பிடம். குடிசை வீட்டிற்கான குறைந்தபட்ச தகுதிகள் கூட இல்லாமல், மூன்று சிறிய சுவர்களை தார்ப்பாய்கள் போட்டு மூடி வைத்திருக்கிறார்கள். கதவுகள் இல்லாத அந்த குடிசையில் அடுப்பு தொடங்கி பாத்திரம் வரை அவர்களின் வறுமை பிரதிபலிக்கிறது. அதே புன்னகையுடன் நம்மிடம் பேச ஆரம்பித்தார் வசந்தி. “எங்கள் சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பவழங்குடி. இப்போ உளுந்தூர்பேட்டையில் இருக்கோம்.

மாணவி வசந்தி
மாணவி வசந்தி

அப்பா அம்மா இங்கதான் விவசாய வேலை செஞ்சிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு கூடமாட ஒத்தாசையா இருக்கேன். கடலூர் மாவட்டத்தில் இருக்கற தனியார் கல்லூரிலதான் டிப்ளமோ ( இ.சி.இ) இரண்டாமாண்டு  படிச்சிக்கிட்டிருந்தேன். ஒரு வருஷத்துக்கு ரூ.22,000/- ஃபீஸ். அப்பா அம்மா எனக்கு ஃபீஸ் கட்ட ரொம்ப சிரமப்பட்டாங்க. அதேபோல தினமும் மூனு பஸ் பிடிச்சிதான் கல்லூரிக்கு போகனும். அதுக்கும் நிறைய செலவாகும். அதனால் கல்லூரிக்கு போகல. இப்போ அப்பா அம்மாகூட கூட டோல்கேட்டில் முந்திரி வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கேன். பலாப்பழ சீசன்ல பலாப்பழமும், கொய்யாப்பழ சீசன்ல கொய்யாப்பழமும் விற்பேன். முந்திரியை வெளியில் இருந்துதான் வாங்கிட்டு வருவோம். அப்புறம் அதை சுத்தப்படுத்தி பாக்கெட்ல போட்டு விற்போம். இதுக்கு யாரும் என்னை யாரும் வற்புறுத்தல.

அப்பா அம்மா கஷ்டத்தைப் பார்த்து நானே விரும்பித்தான் இந்த வேலையை செய்யறேன். தினமும் சாயந்திரம் 5 மணிக்கு டோல்கேட்டுக்கு போய் நைட் 10 மணி வரைக்கும் வியாபாரம் பார்ப்பேன். ஒருசில நாள் சுத்தமா வியாபாரம் இருக்காது. அந்த மாதிரி நாள்ல விடிய விடிய நின்னு வியாபாரம் பண்ணுவேன். ஒரு பாக்கெட் வித்தா நூறு ரூபாய் கிடைக்கும். அதுவும் சாதாரணமா கிடைக்காது. கார், பஸ்ஸுனு எல்லாத்துக்கு பின்னாலயும் ஓடி ஓடி விற்கனும். ஒரு நாளைக்கு ரெண்டு இல்லைன்னா மூனு பாக்கெட் விற்கும். இரவு நேரத்தில் நின்னு வியாபாரம் பார்க்கும்போது ஒருசிலர் தப்பா பேசுவாங்க. ஆனால் அதையெல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். அதேசமயம் ஏன் படிக்காம இந்த வேலை செய்றனு பல பேர் அனுதாபமும் படுவாங்க. அவங்களுக்கு என் குடும்ப சூழல் தெரியாது. என் படிப்பைவிட என் தங்கச்சிகளோட பசியும், படிப்பும் முக்கியம்” என்கிறார் சிரித்துக்கொண்டே.

குடும்பத்தினருடன் வசந்தி
குடும்பத்தினருடன் வசந்தி

“எங்களுக்கு மூனு பெண் பிள்ளைங்க. வசந்திதான் பெரியவ. எங்களுக்கு சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பவழங்குடி. எங்க மாமியார் வீட்டில் எங்க வீட்டுக்காரருக்கு எந்த சொத்தும் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. சம்பாதிச்சுப் போட்டதெல்லாம் எங்க வீட்டுக்காரருதான். ஆனால் அவங்க ஏன் அப்படி நடந்துக்கிட்டாங்கன்னு தெரியல. அதனால் வீட்டுக்காரரும், நானும் தற்கொலை பண்ணும் முடிவுக்குக் கூட போனோம். அப்புறம் என்னை நம்பி நீ வந்துட்ட. நீ ஏன் சாகணும். வா எதாவது வேலை பார்த்து பொழைக்கலாம்னு இங்க கூட்டிக்கிட்டு வந்தாரு. எட்டு வருஷமா இங்கதான் விவசாய வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்.

வர்ற வருமானம் எங்களோட அன்றாட தேவைக்குதான் போதுமானதா இருக்கும். அதனால்தான் பாம்பும், தேளும் இருக்கும் இந்த இடத்துல புள்ளைங்களோட கெடக்கறோம். ஆனாலும் கடன் வாங்கி, பணம் கட்டி இவளை படிக்க வச்சோம். ஆனால் இரண்டம் வருஷம் ஃபீஸ் கட்ட முடியல. அதுமட்டுமில்லாம பஸ்சுக்கே ஒரு நாளுக்கு 150 ரூபாய் செலவாச்சு. அதனால எங்களோட கஷ்டத்தைப் பார்த்து காலேஜுக்கு போகாம நின்னுடுச்சி வசந்தி.

 வேலைக்கு வராதனு சொன்னாலும் கேட்காது. எங்ககூட கால் வலிக்க நின்னு வியாபாரம் பார்க்கும். உடம்பு முடியாம நாங்க வீட்டில் இருந்தாலும், வசந்தி மட்டும் வியாபாரம் பார்க்க போகும். புள்ளையை படிக்க வைக்க முடியலையேன்னு நினைத்தால் அன்னைக்கு முழுக்க தூக்கமே வராது. ஆனாலும் எப்படியாவது எங்க புள்ளைங்கள படிக்க வச்சிடனும்ங்கற நம்பிக்கைலதான் ஒவ்வொரு நாளையும் ஓட்டறோம்” என்கிறார் வசந்தியின் தாய் குப்பு. சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்து வசந்தியை நேரில் அழைத்த செஞ்சி பேரூராட்சி தலைவரும், அமைச்சர் மஸ்தானின் மகனுமான முக்தியார் கல்லூரி செலவை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்திருக்கிறார். அத்துடன் இந்த வருட கட்டணத்திற்காக 25,000/- ரூபாயையும் வழங்கியிருக்கிறார்.