Published:Updated:

வேலூர்: நேரலையின்போது நிருபர்மீது தாக்குதல்; வேட்பாளரின் ஆதரவாளர்கள் வெறிச் செயல்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
செய்தியாளரைத் தாக்கிய குண்டர்கள்
செய்தியாளரைத் தாக்கிய குண்டர்கள்

கடைசி நேரத்தில் பெண் வேட்பாளர் தரப்பு குண்டர்கள் வாக்குச்சாவடியை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அந்தசமயம் புதிய தலைமுறை நிருபர் செய்திச் சேகரிப்பதற்காக சென்றதால் ஆத்திரமடைந்து தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியத்திலிருக்கும் ராமாலை ஊராட்சியில் மொத்தம் 1,380 வாக்காளர்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தல்களில், இந்த ஊராட்சியில் இரண்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த முறை அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில், ஒரேயொரு வாக்குச்சாவடி (பூத் நம்பர் 61) மட்டுமே அமைக்கப்பட்டதால் வாக்காளர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். அதிலும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் ஆகிய பதவிகளுக்கான வாக்குச்சீட்டுகளை ஒரே அலுவலர் மட்டுமே கொடுத்து... விரல்களில் மை வைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதனால் ஏற்பட்ட தாமதத்தாலும் பொதுமக்கள் வாக்குச்சாவடியில் முண்டியடித்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. சமூக இடைவெளியைக் கடைபிடிக்காமல், முகக்கவசம் அணியாமலும் வாக்களிக்க வந்தனர்.

வாக்களிக்க குவிந்த மக்கள்
வாக்களிக்க குவிந்த மக்கள்

இதனால் கோபமடைந்த வாக்காளர்கள் பலரும் வாக்குச்சாவடி அலுவலரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். மாலை 5 மணியை நெருங்கிய பின்னர் பரபரப்பான சூழல் நிலவியது. கூடுதல் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படாததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது, பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தனர். வாக்குச்சாவடி மையம் அருகில் நின்றபடி புதிய தலைமுறை தொலைக்காட்சி நிருபர் குமரவேல் நேரலையில் செய்தி வழங்கிக்கொண்டிருந்தார். தொடர்ந்து, அருகிலுள்ள நடுநிலைப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த 66-வது பூத்துக்குள் சென்ற புதிய தலைமுறைச் செய்தியாளர் வாக்குப்பதிவு நிறைவடைவதை நேரலையில் வழங்கத் தயாரானார். அங்கு, வாக்குச்சாவடிக்குள் முகவராக அமர்ந்திருந்த கிராம ஊராட்சி வார்டு வேட்பாளர் பார்வதி என்பவரின் மகன் திடீரென புதிய தலைமுறை நிருபரை வெளியே போகும்படி அதட்டியிருக்கிறார்.

செய்தியாளருக்கான அனுமதி அடையாள அட்டையை காண்பித்தப் பின்னரும் குமரவேலை வேட்பாளரின் குண்டர்கள் சட்டையைப் பிடித்து வெளியே தள்ளினர். அந்த நேரத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் லைவ் ரிப்போர்ட் கொடுக்கப்பட்டிருந்தால், அந்த தொலைக்காட்சியின் செய்தியாளர் தாக்கப்படுவதும் நேரலையில் ஒளிபரப்பாகின. அந்தக் காட்சியில், கேமராவைப் பறிக்க முயல்வதும், நிருபர் குமரவேல் மற்றும் ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் ஆகிய இருவரும் தாக்கப்படுவதும் ஒளிபரப்பு செய்யப்பட்டன. பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் தாக்குதல் நடத்திய குண்டர்களை தடுத்து அப்புறப்படுத்தாமல் புதிய தலைமுறை செய்தியாளரையும், ஒளிப்பதிவாளரையும் அங்கிருந்து அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர். போலீஸாரின் ஒருதலைபட்சமான இந்தச்செயல் சக பத்திரிகையாளர்கள், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வாக்காளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாக்கப்பட்ட புதிய தலைமுறைச் செய்தியாளர் குமரவேல்
தாக்கப்பட்ட புதிய தலைமுறைச் செய்தியாளர் குமரவேல்

இருந்தபோதும், புதிய தலைமுறை செய்தியாளர் எதிர்வினையாற்றாமல் அங்கிருந்து அமைதியான முறையிலேயே நகர்ந்துச்சென்றார். குண்டர்கள் விடாமல் விரட்டி வந்து தாக்குவதிலேயே குறியாக இருந்தனர். இச்சம்பவம் குறித்து புதிய தலைமுறை செய்தியாளர் குடியாத்தம் சரக டி.எஸ்.பி ராமமூர்த்தியிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்தநிலையில், கடைசி நேரத்தில் பெண் வேட்பாளர் தரப்பு குண்டர்கள் வாக்குச்சாவடியை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அந்தசமயம் புதிய தலைமுறை நிருபர் செய்தி சேகரிப்பதற்காகச் சென்றதால் ஆத்திரமடைந்து தாக்குதல் நடத்தியிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. தாக்குதலில் குமரவேலுவுக்கு சிறிய காயம் ஏற்பட்டிருக்கிறது. ஒளிப்பதிவு கருவிகளும் சேதமடைந்திருக்கின்றன.

செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. அதோடு, தாக்குதல் நடத்திய குண்டர்களை விரைவாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு