Published:Updated:

குப்பை அள்ளும் வண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள்! - இது விழுப்புரம் அவலம்

குப்பை அள்ளும் வண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள்
News
குப்பை அள்ளும் வண்டிகளில் தூய்மைப் பணியாளர்கள் ( தே.சிலம்பரசன் )

தூய்மைப் பணியைச் செய்வதற்காக அழைத்துவரப்பட்ட தூய்மைப் பணியாளர்களை, குப்பை அள்ளும் வண்டிகளில் கூட்டமாக அழைத்துச் சென்ற அவலமான சம்பவம் விழுப்புரத்தில் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விழுப்புரம் நகராட்சியிலுள்ள 42 வார்டுகளில் நேற்றும் (28.12.2021) இன்றும் (29.12.2021) 100% தூய்மைப் பணிகள் நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தூய்மைப் பணியைச் செய்வதற்காக... திண்டிவனம், கோட்டகுப்பம் ஆகிய இரு நகராட்சிகளிலிருந்தும், வளவனூர், செஞ்சி, விக்கிரவாண்டி, மரக்காணம், அனந்தபுரம், திருவெண்ணைய்நல்லூர், அரகண்டநல்லூர் ஆகிய ஏழு பேரூராட்சிகளிலிருந்தும் 542 தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு இந்தப் பணி தொடங்கப்பட்டது.

கொடியசைத்து தொடங்கிவைக்கும் அமைச்சர் பொன்முடி
கொடியசைத்து தொடங்கிவைக்கும் அமைச்சர் பொன்முடி

இதற்காக 13 ஜே.சி.பி இயந்திரங்கள் உட்பட 53 வாகனங்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் நகராட்சியில், முதல் நாளான நேற்று (28.12.2021) 1 முதல் 21 வார்டுகள் வரையிலும், இன்று 22 முதல் 42 வார்டுகளிலும் தூய்மைப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தப் பணியின்போது, கட்டடக் கழிவுகளை அகற்றுதல், சாலைகளிலுள்ள புதர், செடி, கொடிகளை அகற்றித் தூய்மைப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்தப் பணியை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார் அமைச்சர் பொன்முடி. இந்தப் பணிக்காக அழைத்துவரப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் அனைவரும், குப்பைகள் அள்ளப்படும் வண்டிகளில் கூட்டம் கூட்டமாக ஏற்றிச் செல்லப்படும் அவலநிலை புதிய பேருந்து நிலையத்திலேயே நிகழ்ந்திருக்கிறது. தூய்மைப் பணியாளர்கள் என்ற ஒரே காரணத்துக்காக, அவர்களுக்கு உரிய மதிப்பை அளிக்காமல், தனி வாகனத்திலும் அழைத்துச் செல்லாமல்... குப்பைகள் அள்ளப்படும் நகராட்சி, பேரூராட்சி வண்டிகளில் அழைத்துச் செல்லவதை என்னவென்று சொல்வது என வருந்துகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

சம்பவ இடத்தில் நகராட்சி ஆணையர்
சம்பவ இடத்தில் நகராட்சி ஆணையர்

தற்போது கொரோனா பெருந்தொற்று... ஒமைக்ரான், டெல்மைக்ரான் எனும் விஸ்வரூபத்தை எடுத்துள்ள நிலையில், சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் இந்தத் தூய்மைப் பணியாளர்கள் நடத்தப்பட்டுள்ள விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தயுள்ளது. இந்தச் செயல்கள் அனைத்தும், விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திர ஷா முன்னிலையில் நிகழ்ந்ததுதான் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இது தொடர்பாக விளக்கம் கேட்க விழுப்புரம் நகராட்சி ஆணையரைத் தொடர்புகொண்டோம். ``நான் மீட்டிங்கில் இருக்கிறேன். சிறிது நேரம் கழித்து அழைக்கவும்" என்றார். சிறிது நேரம் கழித்து மீண்டும் அழைத்தோம். ``அது துப்புரவு வாகனங்கள் இல்லை. சிறப்பு வாகனங்களை ஏற்பாடு செய்துதான் பணியாளர்களை அனுப்பிவைத்தோம். அந்த மாதிரி துப்புரவு வாகனங்களில் யாரையும் அனுப்பவில்லை. மேலும், நான் விசாரித்துவிட்டு சொல்கிறேன்" என்றார்.

விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!