சொத்துக்குவிப்பு; வெளிநாட்டு நிதி - மதபோதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக ரெய்டு!

கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்திவருகின்றனர்.
கிறிஸ்தவ மதபோதகர் பால் தினகரன் `இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் மத பிரசாரம் செய்துவருகிறார். மேலும், கோவையில் காருண்யா பல்கலைக்கழகம், பள்ளி, மருத்துவமனைகள், ஜெபக்கூடம் ஆகியவையும் அவரின் குடும்பத்தினருக்குச் சொந்தமாக இயங்கிவருகின்றன.

இந்நிலையில், சென்னையிலுள்ள அவர்களது இயேசு அழைக்கிறார் தலைமை அலுவவலகம், கோவை காருண்யா குழுமங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை 6 மணிக்குத் திடீரென்று சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய நடந்த ரெய்டு, இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
மொத்தம் 28 இடங்களில் 300-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த ரெய்டில் ஈடுபட்டுள்ளனர். கோவை, மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள காருண்யா வளாகங்கள் மற்றும் லட்சுமி மில் பகுதியிலுள்ள காருண்யா கிறிஸ்டியன் பள்ளி ஆகிய இடங்களிலும் ரெய்டு தொடர்கிறது.

நல்லூர்வயல் அருகிலுள்ள காருண்யா பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் 30-க்கும் மேற்பட்ட இனோவா கார்களில் வந்த அதிகாரிகள், காருண்யா ஊழியர்களின் வீடுகளுக்கும் சென்று விசாரணை நடத்திவருகின்றனர். இதனால், அந்தப் பகுதி மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.
ஏற்கெனவே, சுற்றுசூழல் பிரச்னை, யானை வழித்தட ஆக்கிரமிப்பு, பழங்குடி மக்களுக்கு எதிரான நடவடிக்கை, மதமாற்றம் போன்ற சர்ச்சைகளில் சிக்கிவந்த பால் தினரகனுக்குச் சொந்தமான நிறுவனங்கள் தொடர்ந்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. முக்கியமாக வெளிநாட்டு நிதிகள், கல்வி நிறுவனங்கள் மூலம் பெறப்பட்ட பணம் மூலம் அடுத்தடுத்த சொத்துகளைக் குவித்து பால் தினகரனும் அவர் குடும்பத்தினரும் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே உருவாக்கிவைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கண்காணித்து வந்த பிறகே, அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து விளக்கம் கேட்க காருண்யா குழுமத்தைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவர்கள் பதில் அளிக்கவில்லை. அவர்கள் விளக்கமளிக்கும்பட்சத்தில், உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதையும் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.