ஈரோடு: கணக்கில் வராத ரூ.4 கோடி..! - உர விற்பனை நிலைய ரெய்டின் பின்னணி

கோபியில் விற்கப்பட்ட உரம், பங்களாதேஷ் பயங்கரவாதிகளிடம் பிடிபட்டது குறித்தான செய்தியைக் குறிப்பிட்டு, `இப்படி விவசாயத்துக்கான உரங்கள் டன் கணக்கில் பயங்கரவாதிகளுக்கு விற்கப்படுகிறது’ என குறிப்பிட்டிருந்தோம்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் ல.கள்ளிப்பட்டி அருகே `ராயல் பெர்டிலைசர் கார்ப்பரேசன்’ என்னும் மொத்த உர விற்பனை நிலையம் செயல்பட்டுவருகிறது. இதன் உரிமையாளரான சோமசுந்தரம் என்பவர், ஈரோடு மாவட்டத்தின் முக்கிய உர விற்பனை டீலராக இருந்துவருகிறார். இன்று அதிகாலை கோபிசெட்டிபாளையம் ஸ்ரீநகரிலுள்ள சோமசுந்தரத்தின் வீடு, உர விற்பனை நிறுவனம் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டில் இறங்கியிருக்கின்றனர். கோவை மற்றும் ஈரோட்டிலிருந்து வந்திருந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டவர்கள் சோமசுந்தரத்துக்குச் சொந்தமான இடங்களில் சல்லடை போட்டு சோதனை செய்திருக்கின்றனர். ரெய்டின் முடிவில் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் பணத்தை சோமசுந்தரத்தின் வீட்டிலிருந்து அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர்.

`கோபிசெட்டிபாளையம் மின்நகரில் என்னுடைய உறவினர் 12 பேருக்குச் சொந்தமான காலியிடத்தை நேற்று விற்பனை செய்தோம். அதில் கிடைத்த பணம்தான் அந்த 4 கோடி ரூபாய். உறவினர்கள் 12 பேருக்கு பிரித்துக் கொடுப்பதற்காக வைத்திருந்தேன்!’ என சோமசுந்தரம் சொல்லியிருக்கிறார். ஆனால், அரசின் வழிகாட்டு மதிப்பைவிடக் கூடுதலாக கணக்கில் வராத 4 கோடி ரூபாய் இருந்ததை அதிகாரிகள் கேள்வியெழுப்பி பறிமுதல் செய்திருக்கின்றனர். இந்த ரெய்டின் பின்னணியில் அதிகாரிகள் பல விஷயங்களை சோமசுந்தரத்திடம் துருவியெடுத்திருக்கின்றனர்.
அதாவது நிலம் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக வந்த தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர். உண்மையில், உரம் கொள்முதல் மற்றும் விற்பனை குறித்து குடைந்தெடுத்திருக்கின்றனர். ஏனென்றால், சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் பங்களாதேஷில் பயங்கரவாதிகளிடமிருந்து 20 டன் `வெள்ளை பொட்டாஷ்’ கைப்பற்றப்பட்டது. அந்த உர மூட்டைகளிலிருந்த பார்கோடை ஸ்கேன் செய்தபோது, அது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் `சாமுண்டீஸ்வரி ஏஜென்சி’ என்னும் உர விற்பனை நிலையத்திலிருந்து விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

அந்த சாமுண்டீஸ்வரி ஏஜென்சியின் உரிமையாளர்தான் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் சோமசுந்தரம். `தனியார் தொழிற்சாலைகளுக்குத்தான் அந்த உர மூட்டைகளைக் கொடுத்தோம். எப்படி அவை பயங்கரவாதிகளின் கையில் கிடைத்தன எனத் தெரியவில்லை’ என்று சோமசுந்தரம் அப்போது விசாரணையில் சொல்லியிருந்தார். பிறகு அதிகாரிகளின் விசாரணையில் கோபிசெட்டிபாளையிலிருந்து - சிவகங்கை - அந்தமான் - பங்களாதேஷ் என அந்த உரமூட்டை பல கைகள் மாறி பயங்கரவாதிகள் கையில் சிக்கியது தெரிந்தது. அதைத் தொடர்ந்து சோமசுந்தரத்தின் உர விற்பனை நிறுவனம் மூடப்பட்டது. கடந்த சில வருடங்களாக அவர் ‘ராயல் பெர்டிலைசர் கார்ப்பரேசன்’ என்னும் புதிய பெயரில் உர விற்பனை செய்துவந்தார்.
சமீபத்தில் பெய்ரூட்டில் அம்மோனியம் நைட்ரேட்டால் ஒரு பெரும் வெடி விபத்து நடந்தது. சென்னை துறைமுகத்திலும் 740 டன் அம்மோனியம் நைட்ரேட் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருப்பது அதன் பிறகு தெரிந்தது. அதையொட்டி ‘அம்மோனியம் நைட்ரேட் அபாயம்! எங்கே போச்சு 16,000 டன்?’ என 16.08.2020 தேதியிட்ட ஜூனியர் விகடனில் செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் கோபியில் விற்கப்பட்ட உரம், பங்களாதேஷ் பயங்கரவாதிகளிடம் பிடிபட்டது குறித்தான செய்தியைக் குறிப்பிட்டு, `இப்படி விவசாயத்துக்கான உரங்கள் டன் கணக்கில் பயங்கரவாதிகளுக்கு விற்கப்படுகிறது’ என குறிப்பிட்டிருந்தோம். எனவே, இந்த ரெய்டில் சோமசுந்தரம் எவ்வளவு உரம் வாங்கி, விற்பனை செய்துவருகிறார்... கணக்கில் வந்திருக்கும் விற்பனை எவ்வளவு... கணக்கில் வராது எவ்வளவு... எனப் பலவற்றையும் அதிகாரிகள் துருவியெடுத்திருக்கின்றனர். 4 கோடி ரூபாய் கணக்கில் வராத பணத்தைப் பறிமுதல் செய்திருப்பதாகச் சொல்லியிருக்கும் வருமான வரித்துறை, உரம் பற்றிய விவகாரம் எதையும் சொல்லவில்லை..!