Published:Updated:

`சாப்பாடும் இல்லை; செலவு பண்ண பணமும் இல்லை!’- சவுதி அரேபியாவில் சிக்கிய தமிழர்கள் வேதனை

சவுதி அரேபியாவில் சிக்கியுள்ளவர்கள்
சவுதி அரேபியாவில் சிக்கியுள்ளவர்கள்

சவுதி அரேபியாவில் வேலைக்குச் சென்ற இடத்தில் பணி முடிந்த பின்னர், கொரோனா பாதிப்பு காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டதால் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் நூற்றுக்கும் அதிகமான தமிழர்கள் தவிக்கிறார்கள்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமானோர் வெளிநாடுகளில் வேலை செய்து வருகிறார்கள். கொரோனா நோய்த் தொற்று பரவியதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளின் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள் அங்கேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்தியத் தொழிலாளர்கள்
இந்தியத் தொழிலாளர்கள்

இந்தநிலையில், நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரிலிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகிறார்கள். அதனால் தங்களை மீட்கத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வீடியோ மூலம் விடுத்துள்ள கோரிக்கையில், ``நாங்கள் வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு ஜனவரி மாதம் வந்தோம். இங்கே எங்களுடைய வேலைகளை எல்லாம் முடித்து விட்டோம். எங்களின் விசாக் காலமும் முடிந்துவிட்டது.

சவுதியில் உள்ள 110 தமிழர்கள்
சவுதியில் உள்ள 110 தமிழர்கள்

கொரோனா பாதிப்பால் விமான சேவை முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டு விட்டதால் எங்களால் ஊருக்குத் திரும்ப முடியவில்லை. இப்போது தங்கியிருக்கும் இடம் மற்றும் சாப்பாடு ஆகியவற்றுக்கு நாங்களே செலவு செய்வதால் பணமும் செலவாகி விட்டது.

இனி செலவு செய்ய எங்களிடம் பணம் இல்லை. நாங்கள் இங்கே தனியாக இருப்பதால் எங்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு அறிகுறியும் கிடையாது. அதனால், நீங்கள் அவசரகால விமானத்தை ஜெட்டாவுக்கு அனுப்பி எங்களை மீட்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். 

உணவுக்காகவும் தங்குமிடத்துக்காகவும் இனி செலவு செய்ய எங்களிம் பணம் இல்லை. அதனால் சீக்கிரம் மீட்டுச் செல்லுங்கள்
தொழிலாளர்கள்

இந்த நிலையில், நெல்லை நாடாளுமன்ற உறுப்பினரான ஞானதிரவியம், இந்த விவகாரத்தை பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு சென்று அவர்களை விரைவில் மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக ஞானதிரவியம் எம்.பி கூறுகையில், ``சவுதி அரேபியாவின் அல்ரஃபீக் என்ற இடத்தின் எண்ணெய் நிறுவனத்தின் 3 மாதக் குறுகியகாலப் பணிக்காக 140 பேர் சென்றிருக்கிறார்கள். அவர்களில் 110 பேர் நெல்லை மாவட்டம் ராதாபுரத்தைச் சேர்ந்தவர்கள். 24 பேர் உத்தரப்பிரதேசத்தையும் ஆறு பேர் கேரளாவையும் சேர்ந்தவர்கள்.

ஞானதிரவியம் எம்.பி
ஞானதிரவியம் எம்.பி

அவர்களுக்கான வேலை ஏப்ரல் 14-ம் தேதி முடிவடைந்து விட்டது. அதன் பிறகு அவர்களை வேலைக்கு அழைத்த நிறுவனமும் கவனிக்கவில்லை. அதனால் உணவுக்கே கஷ்டப்படும் நிலையில் இருக்கிறார்கள். சவுதி அரேபிய அரசு, அவர்களை இந்தியாவுக்குச் செல்ல அனுமதி வழங்கிவிட்ட நிலையில், மத்திய அரசு அவர்களைத் தனி விமானம் மூலம் அழைத்து வர வேண்டும். 

இது தொடர்பாக பிரதமருக்கும் உள்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். விரைவில் அவர்கள் அழைத்துவரப்படுவார்கள்” என்றார் நம்பிக்கையுடன்.

அடுத்த கட்டுரைக்கு