Published:Updated:

சுற்றுலா விசா.. மதப் பிரசாரம்! -8 இந்தோனேசியர்களை சிறையில் தனிமைப்படுத்த உத்தரவிட்ட நீதிமன்றம்

கொரானோ வைரஸ்
கொரானோ வைரஸ் ( விகடன் )

இவர்கள் 8 பேருக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரானோ தொற்று ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் இவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் அப்பகுதியில் உள்ள மதரசா பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

சுற்றுலா விசா மூலம் இந்தோனேசியாவிலிருந்து வந்து ராமநாதபுரத்தில் மதப் பிரசாரத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் ரயில் நிலையம்
ராமநாதபுரம் ரயில் நிலையம்
உ.பாண்டி

கடந்த மாதம் 24-ம் தேதி இந்தோனேசியாவிலிருந்து சுற்றுலா விசா மூலம் 4 தம்பதிகள் இந்தியா வந்திருந்தனர். இவர்கள் ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் தங்கியிருந்து மதப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கொரானோ வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இவர்கள் 8 பேருக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரானோ தொற்று ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் இவர்களுக்கு நோய்த்தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் அப்பகுதியில் உள்ள மதரசா பள்ளியில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

கேணிக்கரை காவல் நிலையம்
கேணிக்கரை காவல் நிலையம்
உ.பாண்டி

இந்த நிலையில், கேணிக்கரை கிராம நிர்வாக அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் இந்தோனேசியாவைச் சேர்ந்த சுமிஸ்னி, சிட்டிரோகானா, உட்டார, முகம்மது அலி, ரமலான் பின் இப்ராஹிம், அமான் ஜாஹரியா, ஜெய்லானி, முகம்மது நாசர் இப்ராஹிம் மற்றும் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த மூமின் அலி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை வரும் 23-ம் தேதி வரை பரமக்குடி சிறையில் தனிமைப்படுத்தி அடைக்க நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார்.

இதனிடையே, வெளிநாட்டைச் சேர்ந்த நபர் குறித்த தகவல் தெரிவிக்காமல் 15 நாள்களாக தனது தங்கும் விடுதியில் தங்க வைத்திருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சுவிஸ் சுற்றுலாப்பயணி
சுவிஸ் சுற்றுலாப்பயணி
உ.பாண்டி

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜென்டன் டேனியல் ஊரடங்கு உத்தரவுக்கு முன்னதாக ராமேஸ்வரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தங்கியுள்ளார். ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த வெளியூர் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், ஜென்டன் டேனியல் குறித்து தங்கும் விடுதி உரிமையாளர் உள்ளூர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், ஜென்டன் தனது நாட்டுக்குத் திரும்பிச் செல்ல டெல்லியில் உள்ள தூதரக உதவியை நாடியுள்ளார். இதன் மூலம் வெளிநாட்டவர் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டிருக்கும் தகவல் வெளியானது. இதையடுத்து, ராமேஸ்வரம் கிராம நிர்வாக அதிகாரி ரொட்ரிக்கோ கொடுத்த புகாரைத் தொடர்ந்து தங்கும் விடுதி உரிமையாளர் ஆம்ஸ்டராங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு