Published:Updated:

``வியாபாரம் இயல்புக்கு திரும்ப ஆறு மாசம் ஆகும்!” - கொரோனாவால் நொந்துபோகும் வியாபாரிகள்

கொரோனா
கொரோனா

இந்த இக்கட்டான சூழலில், தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, சிறுகுறு தொழில் முதலீட்டாளர்கள், வியாபாரிகளுக்கு கை கொடுக்க வேண்டும். இது அரசின் கடமை மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான அச்சாரமும்கூட.

கொரோனா வைரஸால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருத்த அடி வாங்கியிருப்பது வியாபாரிகளும் சிறு குறு தொழில் முதலீட்டாளர்களும்தான். சென்னையில் தொழிற்சாலைகள் மிகுந்த பகுதியான அம்பத்தூர் தொழிற்பேட்டை முடங்கியுள்ளது. வண்ணாரப்பேட்டையில் ஜரூராக வியாபாரம் நடக்கும் ஜவுளிக்கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. ஆர்.கே.நகர் தொகுதியில் செயல்பட்டு வந்த பாத்திரம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், சிறுசிறு பொம்மைகள் தயாரித்தவர்கள் முடங்கிப்போயுள்ளனர்.

அம்பத்தூர்
அம்பத்தூர்

அத்தியாவசிய சரக்கு லாரிகளைத் தவிர மற்றவை ஓடாததால், புதுப்பேட்டையிலுள்ள லாரி டிரைவர்கள் எல்லாம் வண்டியை ஓரங்கட்டிவிட்டு வீட்டிலேயே முடங்கிவிட்டார்கள். டீக்கடைகளும் மூடப்பட்டுள்ளதால், இதை நம்பியிருந்த பல தொழிலாளர்களுக்கும் நெருக்கடி முற்றியுள்ளது. ஏப்ரல் 15-ம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், வியாபாரம் இயல்பு நிலைக்குத் திரும்ப ஆறு மாதம் ஆகும் என்கிறது வியாபாரிகள் தரப்பு.

70 சதவிகித வியாபாரிகள் வங்கியில லோன் வாங்கிதான் வியாபாரம் பண்றாங்க. இதுக்கு கட்ட வேண்டிய தவணை இருக்கு. இப்ப வியாபாரம் நடக்காம இந்தச் செலவுகளை எல்லாம் எப்படி ஈடு கட்ட முடியும்?

இதுகுறித்து அம்பத்தூரைச் சேர்ந்த தொழிலதிபரும் தி.மு.க சென்னை கிழக்கு மாவட்ட வர்த்தக அணியின் இணைச் செயலாளருமான ஆஸ்டினிடம் பேசினோம். ``ஊரடங்கு முடிஞ்சாலும் தொழில் மறுபடியும் இயல்புநிலைக்குத் திரும்ப ஆறு மாசம் ஆகும்” என்றபடி பேச்சைத் தொடங்கினார். “கொரோனா அச்சுறுத்தலால, இப்ப எங்கேயும் வியாபாரம் இல்லை. கைக்காசைத்தான் போட்டு நாங்க செலவுகளை சமாளிக்குறோம்.

ஆஸ்டின்
ஆஸ்டின்

பல வியாபாரிங்க ‘நடப்பு பேங்க் அக்கவுன்ட்’ மூலமாதான் செக் க்ளியர் பண்ணுவாங்க. இப்ப வியாபாரம் நடக்காததால, அக்கவுன்ட்ல பணம் இல்லை. செக் கொடுத்தாலும் அது பவுன்ஸ் ஆகிடும். ஒரு தொழில் பாதிக்கப்பட்டா, அதைச் சார்ந்து இருக்குற சுமார் 20 தொழில்கள் சேர்ந்து பாதிக்குது. இப்ப, ஊரே முடங்கிப் போயிருக்குறதால, தினமும் கோடிக்கணக்கான ரூபாய் வியாபாரிகளுக்கு நஷ்டமாகுது” என்றவரிடம், ``வியாபாரம் நடந்து, பொருள் விற்பனை ஆகவில்லை என்றால்தானே அது நஷ்டமாகக் கருத முடியும். வியாபாரிகளுக்கு பெரிய நஷ்டமில்லை, அதே நேரத்தில் லாபமும் இல்லை என்கிறார்களே?” என்றோம்.

144 தடை உத்தரவு... என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது? சில கேள்விகளும் விடைகளும்! #FAQ

``அது தப்பு. அண்ணாநகர்ல இரண்டு கார் ஷோரூம் செயல்படுது. மாசம் 5 லட்ச ரூபாய்க்கு மேல இடத்துக்கு வாடகை கொடுக்குறாங்க. இதுபோக, வேலைபார்க்குறவங்களுக்கு சம்பளம் கொடுக்கணும். 70 சதவிகித வியாபாரிகள் வங்கியில லோன் வாங்கித்தான் வியாபாரம் பண்றாங்க. இதுக்கு கட்ட வேண்டிய தவணை இருக்கு. இப்ப வியாபாரம் நடக்காம இந்தச் செலவுகளை எல்லாம் எப்படி ஈடு கட்ட முடியும்? எல்லாத் தொழிலிலும் கோடி கோடியாகப் பணம் குவிஞ்சு, யாரும் வீட்டுல அடுக்கி வைக்கல. அன்றாடம் கிடைக்குற வருமானத்துல செலவெல்லாம் போக, சொற்ப பணமே எஞ்சியிருக்கும்.

பாத்திரங்கள்
பாத்திரங்கள்

உதாரணத்துக்கு, கொருக்குப்பேட்டை ஏரியாவுல நிறைய பாத்திரம் செய்யும் சிறு தொழிற்சாலைகள் இயங்குது. கொரோனா அச்சுறுத்தலால இப்ப மூடியிருக்காங்க. இப்ப கையில இருக்குற காசெல்லாம் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், கடைக்கு வாடகை கட்டவும் முடிஞ்சிரும். ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு, மூலப்பொருள் வாங்குறதுக்கும் வியாபாரத்தை தொடங்குறதுக்கும் பணத்துக்கு எங்க போறது? பாத்திரம் ஏத்திட்டு போற லாரி, கூலித் தொழிலாளர்கள், பாத்திரக்கடைகள்னு இந்தத் தொழில் சார்ந்து இருக்குற மற்ற தொழில்களும் பாதிக்குது. இந்த நஷ்டத்துல இருந்து சாமானிய தொழில் முதலீட்டாளர்களால சீக்கிரம் மீண்டு வர முடியாது.

` ஓட்டல் இருந்தா 10 எச்ச இலையாவது மிஞ்சும்..' - கொரோனா கெடுபிடியால் கலங்கும் ஆதரவற்றோர்

சிறு குறு வியாபாரிகளுக்கு அரசு சிறப்பு நிதி வழங்க வேண்டும். வங்கிக்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை பாக்கிக்கு கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும். நடப்பு நிதிக்கணக்கில் போடப்பட்ட செக்குகளில் பணம் இல்லையென்றால் உடனே பவுன்ஸ் செய்யாமல் குறிப்பிட்ட கால அவகாசம் வழங்க வேண்டும். தமிழகம் முழுவதுமுள்ள சிறு குறு தொழில் முதலீட்டாளர்கள் வியாபாரிகளைக் கணக்கெடுத்து அவர்களுக்கு கை கொடுக்க வேண்டியது அரசின் கடமை” என்றார்.

ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வெறிச்சொடிய சென்னை அண்ணா சாலை
ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வெறிச்சொடிய சென்னை அண்ணா சாலை

கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரிட்டனின் பொருளாதாரம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதம் சரிவை சந்தித்துள்ளதாக அந்நாட்டு நிதித்துறை கணித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் பொருளாதார அட்டாக் முழுமையாக உணரப்படவில்லை. ஆனால், அதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கிவிட்டன. இந்தியா எதிர்பார்த்திருந்த 5 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டுவது சிரமம் என்று சமீபத்தில் வெளியான `டன் & பிராட் ஸ்ட்ரிட்’ நிறுவனத்தின் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆசியாவின் மூன்றாவது பொருளாதார வல்லரசான இந்தியா, தன் எல்லைகளை மூடியிருப்பதும் தொழில்களை முடக்கியிருப்பதும் அதன் பொருளாதாரத்தில் ஒரு தேக்கநிலையை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், 2008 பொருளாதார தேக்கத்தோடு இன்றைய சூழலை ஒப்பிடத் தேவையில்லை என முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியிருப்பது ஆறுதலான விஷயம். இந்த இக்கட்டான சூழலில், தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு, சிறுகுறு தொழில் முதலீட்டாளர்கள், வியாபாரிகளுக்கு கை கொடுக்க வேண்டும். இது அரசின் கடமை மட்டுமல்ல, எதிர்காலத்திற்கான அச்சாரமும் கூட.

அடுத்த கட்டுரைக்கு