Published:Updated:

குடியாத்தம் ஏரியில் அழுகுரல்... குளிரில் நடுங்கிய பச்சிளம் குழந்தை! - பதறிய காவலாளிகள்

குடியாத்தம் அருகே பிறந்து சிலமணி நேரமே ஆன பெண் குழந்தை, ஏரிக்கரையில் வீசப்பட்டுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பெண் குழந்தை
பெண் குழந்தை

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தில், தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கிடங்கு உள்ளது. இதன் எதிர்புறம் உள்ள ஏரிக்கரையில், இன்று அதிகாலை பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டது. வாணிபக் கிடங்கின் காவலாளிகளான சுப்பிரமணி, செல்வம் ஆகிய இருவரும் ஏரிக்கரையில் சென்று பார்த்தனர். 

ஏரிக்கரையில் கிடந்த குழந்தை
ஏரிக்கரையில் கிடந்த குழந்தை

பழைய லுங்கி போர்த்தப்பட்டிருந்த நிலையில், பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை அங்கு வீசப்பட்டுக் கிடந்தது. அந்தக் குழந்தையின் உதடு பிளவுபட்டு சிறிய குறைபாடு இருந்தது. குளிரில் நடு நடுங்கிக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து காவலாளிகள் பதறிப்போயினர். குழந்தையை வாணிபக் கிடங்கிற்குத் தூக்கிச்சென்று பாதுகாப்பாக வைத்திருந்தனர்

உடனடியாக பரதராமி காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். அந்த நேரத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர்கள் அருண்குமார், நவீன் விரைந்துவந்தனர். அவர்கள் காவலாளிகளின் உதவியுடன் குழந்தையை டூ வீலரில் எடுத்துக்கொண்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். மருத்துவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

குடியாத்தம்
குடியாத்தம்

சுமார் 3 கிலோ 800 கிராம் எடையுள்ள அந்தக் குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. குடியாத்தம் பகுதியிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்ததா அல்லது தனியார் மருத்துவமனையில் பிறந்ததா? என்பது தெரியவில்லை. அந்தப் பகுதியின் வழியாக ஆந்திர மாநிலம் சித்தூருக்குச் செல்லலாம். இதனால், எந்த நேரமும் ஆள் நடமாட்டம் இருக்கும்.

எனவே, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த யாரேனும், குழந்தையை இங்கு கொண்டுவந்து வீசிச் சென்றார்களா? என்றும் சந்தேகம் எழுந்திருக்கிறது. குழந்தையின் உதடு பிளவுபட்டிருப்பதால், குறைபாட்டைக் காரணம் காட்டி பெற்றோர் வேண்டாம் என்று உதறித் தள்ளியிருக்கலாம் அல்லது பெண் குழந்தையே பிடிக்காமல் வீசியிருக்கலாம் என்று காவல்துறை தரப்பில் சொல்கிறார்கள்.

மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை
மருத்துவர்களின் கண்காணிப்பில் குழந்தை

இதுபற்றி, பரதராமி போலீஸார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசியவர்கள் யார்? என்பதுபற்றித் தீவிரமாக விசாரணை நடத்திவருகிறார்கள். மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ள குழந்தையைக் குடியாத்தம் தாசில்தார் சாந்தி நேரில் பார்வையிட்டார். குழந்தையைப் பத்திரமாக மீட்டக் காவலாளிகளை காவல்துறையினரும், அதிகாரிகளும் பாராட்டினர்.