Published:Updated:

கொரோனா: துபாயில் தாய் பலியான துயரம், விமானம் மூலம் திருச்சிக்கு அழைத்து வரப்பட்ட 11 மாதக் குழந்தை!

துபாயிலிருந்து வந்த குழந்தை
துபாயிலிருந்து வந்த குழந்தை

பெற்ற தாயை இழந்து, குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லாத நிலையில், பாரதியின் தோழிகளின் பராமரிப்பில் துபாயில் இருந்தான் குழந்தை தேவேஷ்.

துபாய் நாட்டில் பணிப்பெண் வேலைக்குச் சென்ற கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஒரு பெண்மணி, கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தார். அவர் தன்னுடன் அழைத்துச் சென்ற அவரின் 11 மாத கைக்குழந்தை இன்று விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தது.

கள்ளக்குறிச்சி எம்.ஆர். என் நகரைச் சேர்ந்தவர் ராஜா. இவரின் மகன் 38 வயதான வேலவன். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவருக்கும் 2008-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு விக்னேஸ்வரன் (வயது 12), அகிலன் (வயது 7), தேவேஷ் (11 மாத கைக்குழந்தை) என மூன்று ஆண் குழந்தைகள். இவர்களில் மூத்த மகன் சிறுநீரகக் கோளாறு காரணமாக இறந்துவிட்டார்.

துபாயிலிருந்து வந்த குழந்தை
துபாயிலிருந்து வந்த குழந்தை
நெல்லை: 'விபத்தில் தந்தை பலி; கொரோனாவுக்கு தாய் உயிரிழப்பு;ஆதரவற்றுத் தவிக்கும் 3 சிறுவர்கள்!'

சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட மகன் விக்னேஸ்வரனை கவனித்துக் கொள்வதற்காக வேலவன் உடன் இருந்ததால், அவரால் அப்போது பணிக்குச் செல்ல முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் மகனின் சிகிச்சைக்கு அதிக தொகை தேவைப்பட்டதால், பணத்தேவை அதிகரித்து உள்ளது. வேலவன் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருந்தாலும் சரியான வேலை கிடைக்கவில்லை. அவரின் மனைவி பாரதி பள்ளிக் கல்வியை மட்டுமே முடித்திருந்தார். குடும்பத்தில் உள்ள வறுமை காரணமாக 2017 முதல் இரண்டு ஆண்டுகள் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணிபுரிவதற்காகத் துபாய் சென்றார் பாரதி. அதன் பின் ஓரளவு பொருளாதாரச் சிக்கலின்றி அவர்கள் வாழத் தொடங்கினர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பாரதி இந்தியாவுக்குத் திரும்பினார். பின்னர் கடந்த மார்ச் மாதம் தன் 7 மாதக் கைக்குழந்தை தேவேஷுடன் மீண்டும் துபாய் சென்ற பாரதி, அங்குள்ள வீடு ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார் பாரதி. சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

பாரதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அவரின் குழந்தையை அங்கிருந்த பாரதியின் சக தோழிகள் பாதுகாப்புடன் பராமரித்து வந்தனர். பாரதிக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தாலும் சிகிச்சைப் பலனளிக்காமல் கடந்த மே மாதம் 29-ம் தேதி பாரதி உயிரிழந்தார்.

துபாயிலிருந்து வந்த குழந்தை
துபாயிலிருந்து வந்த குழந்தை

இதுகுறித்து அவரின் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடலை இந்தியா கொண்டு வருவதற்கு பணமில்லை என்று கூறிய வேலவன், அங்கேயே இறுதிச் சடங்குகளை செய்து விடுமாறு எழுத்துபூர்வமாக எழுதிக் கொடுத்துள்ளார். அவரது அனுமதியின் பேரில் பாரதியின் உடல் துபாயிலேயே எரியூட்டப்பட்டது.

பெற்ற தாயை இழந்து, குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லாத நிலையில், பாரதியின் தோழிகளின் பராமரிப்பில் இருந்தான் குழந்தை தேவேஷ். அவன் நிலை கண்டு கண் கலங்கிய பாரதியின் தோழிகள், இது குறித்து துபாய் நகர தி.மு.க அமைப்பாளர் எஸ். எஸ். முகமது மீரானின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்.

இதன் பிறகு, அடுத்தடுத்த பணிகள் மிக விறுவிறுப்பாக நடைபெற்றன. அமைச்சர் பொன்முடியின் மகனும் கள்ளக்குறிச்சி எம்.பி-யுமான கௌதம சிகாமணி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வைக்கு, குழந்தை படும் துயர் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, எரியூட்டபட்ட பாரதியின் அஸ்தியுடன் 11 மாதக் குழந்தை தேவேஷை, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் இண்டிகோ விமானம் மூலம் துபாயிலிருந்து இன்று அழைத்து வந்து வேலவனிடம் ஒப்படைத்தார். இது குறித்து பாரதியின் கணவர் வேலவன் கூறுகையில்,
``என் மனைவி பாரதி வறுமை காரணமாக துபாய் நாட்டுக்கு வீட்டுப் பணிப்பெண் வேலைக்குச் சென்றார்.

துபாயிலிருந்து வந்த குழந்தை
துபாயிலிருந்து வந்த குழந்தை

ஆனால், கொரோனாவால் அவருக்கு இப்படியொரு துயரமான முடிவு ஏற்பட்டுவிட்டது. மனைவியை கொரனோவிற்கு பலி கொடுத்த நிலையில், என் 11 மாதக் குழந்தை அங்கு மனைவியின் தோழிகளின் உதவியில் இருந்தான். இந்நிலையில் மகனை அழைத்து வர உதவிபுரிந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

மேலும், கெளதம சிகாமணி எம்.பி தன் குழந்தைகளின் படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாகவும், பொருளாதார ரீதியாக உதவி புரிவதாகவும் உறுதியளித்துள்ளதாகத் தெரிவித்தார் வேலவன்.

அடுத்த கட்டுரைக்கு