Published:Updated:

`அங்க ஆரம்பிச்ச அநீதி இன்னும் முடியல,விடியல!’-30 ஆண்டுக்கால காத்திருப்பால் கலங்கும் அற்புதம்மாள்

அற்புதம்மாள் - பேரறிவாளன்
அற்புதம்மாள் - பேரறிவாளன்

``பேரறிவாளனை அவ்வழக்கில் சேர்த்தது தவறுதான், என்று விசாரணை அதிகாரியே வெளிப்படையாகக் கூறியுள்ள நிலையில் அவரது தாயாரின் கோரிக்கை மிகவும் நியாயமானதே ஆகும்”

``ஜுன்-11, 30-வது ஆண்டு தொடங்கிடுச்சு. விசாரிச்சுட்டு காலை அனுப்பிடறோம்னு இதேநாள் இரவு 10.30-க்குக் கூட்டிட்டுப் போனாங்க. புள்ளைய நாங்கதான் ஒப்படைச்சோம். 8 நாள் சட்டவிரோதமா வச்சிருந்துட்டு; வேப்பேரியில சுத்திவளைச்சு பிடிச்சதா கதை சொன்னாங்க. அங்க ஆரம்பிச்ச அநீதி இன்னும் முடியல. விடியல!” - 30 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் தனது பிள்ளையின் விடுதலைக்காக ஏங்கும் ஒரு தாயின் கலங்கவைக்கும் குரல் இது.

`நாளைக்கு என்னுடைய மகன் விடுதலை ஆகிவிடுவான்' என்ற நம்பிக்கையில் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாளின் குரல். ஆம்.. இன்று பேரறிவாளன் கைது செய்யப்பட்ட 30-வது ஆண்டு.

பேரறிவாளன்
பேரறிவாளன்

சென்னைக்கு அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்துக்கு 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி வந்தபோது மனித வெடிகுண்டுத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார், ராஜீவ் காந்தி. இந்த வழக்கில் தொடர்புடையதாக பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் நளினி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றமானது 1998-ம் ஆண்டு வழக்கில் தொடர்புடையவர்களுக்கு மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டில் 1999-ம் ஆண்டு இந்த நால்வருக்கும் தூக்கு தண்டணையை உறுதி செய்தது. ஆயுள் தண்டனையாக தங்களது தூக்கு தண்டனையைக் குறைக்க வேண்டும் என்ற இவர்களது கோரிக்கை மனுவையும் தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து ஆளுநருக்கு அனுப்பிய கருணை மனுவையும் அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவி தள்ளுபடி செய்தார்.

`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்!’- மீண்டும் ஒருமாத பரோலில் பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான பிரச்னையில் மு.கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை நளினியின் தூக்கு தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்க கோரிக்கை விடுத்தது. அதன்படி நளினியின் தண்டனை குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் 2000-ம் ஆண்டு தங்களது கருணை மனுக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பினர். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த மனு 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் மூவரும் மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தனர். பின்னர், உச்சநீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் 2014-ம் ஆண்டு மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாக தீர்ப்பு வந்தது.

ஜெயலலிதா தலைமையிலான அரசு அதே 2014-ம் ஆண்டு இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் விடுவிப்பதாகக் கூறியது. இதனையடுத்து, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தது. மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவர்களை விடுதலை செய்ய முடியாது என 2015-ல் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். ஆனால், இதற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை எனச் சட்டம் கூறுவதால், வழக்கு தொடர்ந்து விசாரணையில் இருந்தது.

இதனையடுத்து 2018-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்து ஆளுநர் முடிவு செய்யலாம் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆளுநர் முடிவு செய்யாததால் இவர்களின் விடுதலை இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. நாட்டையே உலுக்கிய இந்தக் கொலை வழக்கில் பேரறிவாளன் மீது `பேட்டரி வாங்கிக் கொடுத்தார்’ என்ற குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றத்துக்காகத்தான் அவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் காலத்தில் சிறைச் சாலைகளிலும் தொற்று பரவி வருவதாகத் தகவல் வருகிறது. இந்த நேரத்தில் ஏழு தமிழர்களின் விடுதலை மிகவும் அவசியம்.
நடிகர் சத்யராஜ்
நடிகர் சத்யராஜ்
நடிகர் சத்யராஜ்

பேரறிவாளனின் விடுதலை தொடர்பாக நடிகர் சத்யராஜ் நம்மிடம் பேசும்போது, ``ஏழு தமிழர்களின் விடுதலை முப்பது வருடங்களாக காத்து நிற்கிறது. கொரோனா வைரஸ் காலத்தில் சிறைச் சாலைகளிலும் தொற்று பரவி வருவதாக தகவல் வருகிறது. இந்த நேரத்தில் ஏழு தமிழர்களின் விடுதலை மிகவும் அவசியம். கட்டாயம் இந்த விடுதலை நடந்தே ஆக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அற்புதம்மாளின் உரிமைக் குரலுக்கு அனைவரும் துணை நிற்போம். நீதியை வென்றெடுப்போம்” என்று கூறியுள்ளார்.

அதேபோல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ``பேரறிவாளன் செய்யாத குற்றத்துக்காக சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. 30 ஆண்டுகளாக நீதிக்காகப் போராடும் ஒரு தாயின் குரலுக்கு இன்னும் பதிலளிக்கப்படவில்லை. இது அவரை விடுதலை செய்வதற்கான நேரம்” என்று ட்வீட் செய்துள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ``ராஜீவ் கொலைவழக்கில் சிறைப்பட்டுள்ள எழுவரையும் விடுதலை செய்யவேண்டும். அதேவேளையில், `பேரறிவாளனை அவ்வழக்கில் சேர்த்தது தவறுதான்’ என்று விசாரணை அதிகாரியே வெளிப்படையாகக் கூறியுள்ள நிலையில் அவரது தாயாரின் கோரிக்கை மிகவும் நியாயமானதே ஆகும்” என்று கூறியுள்ளார்.

பல ஆண்டுகளாக இந்த ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி பல குரல்களும் போராட்டங்களும் நடந்த வண்ணம் உள்ளன. ஆனால், அரசு இன்னும் இந்த வழக்குக்கு ஒரு முடிவைக் கொண்டு வராதது பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கியுள்ளது.

இந்த நிலையில், ட்விட்டரில் அற்புதம்மாள், பேரறிவாளனின் விடுதலை தொடர்பாகப் பதிவு செய்ததைத் தொடர்ந்து #StandwithArputhamAmmal என்ற ஹேஷ்டேக்குகள் அதிகமாகப் பதிவிடப்பட்டு சமூக வலைதளங்களில் பேரறிவாளனின் விடுதலைக்கு ஆதரவான குரல்கள் எழுந்து வருகின்றன என்பதும் கவனிக்கத்தக்கது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு