Published:Updated:

மதுரை: `மகாவீரர் சிற்பம்; ராஜராஜ சோழன் கல்வெட்டு!’ - ஆய்வாளர்கள் உற்சாகம்

கல்வெட்டு
கல்வெட்டு

மதுரையில் கீழடியைப் போல் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினால் ஆச்சர்யங்களைக் கொடுக்கும் என்கிறார்கள்.

மதுரை தே.கல்லுப்பட்டி அடுத்த காரைக்கேணி, செங்கமேடு பகுதியில் 1,000 ஆண்டுகள் பழைமையான மகாவீரர் சிலை, ராஜராஜ சோழன் கல்வெட்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத்துறை தலைவர் முனைவர் து.முனீஸ்வரன் அவரின் குழுவினர், தேவட்டி முனியாண்டி கோயில் அருகில் செங்கமேடு பகுதியில் பாழடைந்த நிலையில் இருந்த பழைமையான சத்திரம், கிணறு ஆகியவற்றை ஆய்வு செய்தபோது, அவற்றின் சுவரில் உள்ள கற்களில் பழைமையான தமிழ் மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள் கண்டுபிடித்துள்ளனர்.

கல்வெட்டு ஆய்வாளர் மூனீஸ்வரன்
கல்வெட்டு ஆய்வாளர் மூனீஸ்வரன்

இவை முதலாம் ராஜராஜ சோழன், முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கால கல்வெட்டுகள் எனத் தெரியவந்ததுள்ளது. அங்கிருந்து 1 கிலோ மீட்டருக்கு குறைவான தூரத்தில் ஒரு மகாவீரர் சிற்பமும் கிடைக்கப்பெற்றுள்ளது தொல்லியல் ஆர்வலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து முனீஸ்வரன், ``துண்டு, துண்டாய் சேதமடைந்த நிலையிலிருந்த தமிழ்க் கல்வெட்டுகளில் உள்ள சொற்களைக் கொண்டு, அவை கி.பி.13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் மெய்க்கீர்த்திக் கல்வெட்டு எனத் தெரிந்துகொள்ள முடிகிறது.

சத்திரத்தின் தரையிலும், கிணற்றின் உள்ளேயும் 8 வட்டெழுத்து துண்டுக் கல்வெட்டுகள் இருந்தன. இவை காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி என்ற விருது பெயருடன் தொடங்கும் முதலாம் ராஜராஜ சோழனின் 10-ம் ஆட்சியாண்டைச் சேர்ந்தவை. இதன் காலம் கி.பி.998 ஆகும்.

பாழடைந்த மண்டபம்
பாழடைந்த மண்டபம்

கிரந்த எழுத்து கலந்து எழுதப்பட்டுள்ள இதில், செங்குடி நாட்டில் உள்ள திருஉண்ணாட்டூர் என்ற ஊர் கோயிலில் விளக்கு எரிக்கக் கொடுத்த கொடை பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. இக்கோயிலின் பெயர் `அர்ஹா' எனத் தொடங்குகிறது. அதன் மீதிப்பகுதி சத்திரத்தில் உள்ள தூணின் அடிப்பகுதியில் மறைந்துள்ளது. சம்ஸ்கிருதத்தில் உள்ள இதை 'அருகன்' எனக் கொண்டால் இதை சமணப்பள்ளியாக இருக்கலாம்.

இதன் அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 24-வது சமணத் தீர்த்தங்கரரான மகாவீரரின் கருங்கல் சிலையும் இதை உறுதியாக்குகிறது.

இச்சிற்பம் 3¼ அடி உயரமும், 2¼ அடி அகலமும் உள்ளது. மூன்று சிங்கங்கள் உள்ள பீடத்தின் மேல் சிம்மாசனத்தில் அர்த்த பரியங்க ஆசனத்தில் மகாவீரர் அமர்ந்துள்ளார். அவரின் இருபுறமும் சாமரம் வீசும் இரு இயக்கர்கள் உள்ளனர். அவர் தலைக்கு மேல் முக்குடையும் பின்புறம் பிரபாவளி என்னும் ஒளிவட்டமும் உள்ளன. இதன் காலம் கி.பி 9-ம் நூற்றாண்டாகக் கருதலாம்.

கற்சிலையுடன்
கற்சிலையுடன்

மகாவீரர் சிற்பம் மற்றும் கல்வெட்டுகள் மூலம், கி.பி 9-ம் நூற்றாண்டு முதல் கி.பி 13-ம் நூற்றாண்டு வரையில் இங்கு ஒரு சமணப்பள்ளி வழிபாட்டில் இருந்து அழிந்ததை அறிய முடிகிறது. இப்பகுதியில் சிதறிக்கிடக்கும் செங்கற்கள் மூலம் இங்கு இருந்த சமணப்பள்ளி முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டதாக இருந்திருக்கும் எனக் கருதலாம். கல்வெட்டில் குறிப்பிடப்படும் திருஉண்ணாட்டூர் என்னும் ஊர், இப்பகுதியில் இருந்து அழிந்துபோன ஊராக இருக்கலாம். இங்கு இடைக்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகளும் செங்கற்களும் அதிகளவில் சிதறிக் கிடப்பதும் குறிப்பிடத் தக்கது" என்றார்.

மதுரையில் கீழடியைப் போல் பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தினால் ஆச்சர்யங்களைக் கொடுக்கும் எனத் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு