Published:Updated:

``உதவி செய்யுற ஒவ்வொருத்தரும் கடவுள்தான்!" - விழித்திறன் சவால் நண்பர்களின் நம்பிக்கை பயணம்

``சாமி பார்வையை குடுக்கலைனு குறை சொல்லி, முடங்கிக் கிடக்குறதை விட்டுட்டு, கை, கால் நல்லபடியா கொடுத்துருக்காரு, நல்ல குடும்பத்தைக் கொடுத்துருக்காருனு சந்தோஷப்படுறோம். இன்னும் சொல்லணும்னா இந்த உலகம்தான் எங்களுக்கு குறை இருக்குதுனு சொல்லுது. நாங்க அப்படி நினைக்கல."

சிக்னல் விழுவதற்குள் சென்றுவிட வேண்டும் என கண் இமைக்கும் நேரத்தில் சாலையில் பறக்கும் வாகனங்கள், நிற்க நேரமில்லாமல் ஓட்டமும் நடையுமாய் விரைந்து கொண்டிருந்த மனிதர்கள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சென்னை கடற்கரை சாலை... சற்று சோர்வான மனநிலையுடன் நடந்து கொண்டிருந்த என்னை, எனக்கு பின்னால் பேசியவர்களின் குரல் திசை திருப்பியது.

 கடற்கரை
கடற்கரை
``இதுக இல்லைன்னா இன்னைக்கு நான் இல்ல; அதான் சமாதி கட்டுனேன்!" - 50 நாய்களும் தங்கசாமி ஐயாவும்

முதுகில் பை, கறுப்புக் கண்ணாடி, கையில் ஒரு ஸ்டிக்குடன் தங்களுக்குப் பார்வையில்லை எனினும், உலகத்தின் பார்வையை தங்கள் பக்கம் திசைதிருப்ப எண்ணும் இரண்டு மாற்றுத்திறனாளி நண்பர்கள். சத்தமாய் பேசி சிரித்துக் கொண்டிருந்த அவர்களின் ஒவ்வொரு வார்த்தையிலும் மனித இனம் மீது அவ்வளவு நம்பிக்கை. நிழலாடும் உருவத்தைவைத்து என்னிடம், ``மேடம் சின்ன ஹெல்ப்... பக்கத்துல ஹோட்டல் எங்க இருக்குங்க?'' என்று கேட்டார்கள்.

அவர்களை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றபடியே , என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவர்கள் என்னை நம்ப என்னுடைய ஐடி கார்டு, விசிட்டிங் கார்டு என எதுவும் தேவைப்படவில்லை. என்னை முழுமையாய் நம்பி, தங்களின் சான்றிதழ்கள் வைத்திருந்த பையைக் கீழே வைத்தார்கள். ``பையை கையில் பிடிச்சுக்கோங்கண்ணா'' என்றேன். ``பரவாயில்ல, நீங்க என்ன தூக்கிட்டா போகப்போறீங்க?" என்று சிரித்தபடியே பேச ஆரம்பித்தார்கள். மனதுக்கு நெருக்கமான உரையாடல் அது.

மாற்றுத்திறனாளி நண்பர்கள்.
மாற்றுத்திறனாளி நண்பர்கள்.

``என்னோட பேரு நாகேந்திரன். சொந்த ஊரு புதுக்கோட்டை . இவரு என் நண்பர் மூர்த்தி. அவருக்கு சொந்த ஊரு காரைக்குடி. ரெண்டு பேரும் ஸ்கூல் படிக்கும்போது அறிமுகமாகி, நண்பர்களானோம். எங்க படிப்பு சார்ந்து வெளியூர் போகணும்னா ரெண்டு பேரும் ஒண்ணாதான் போவோம். பிறவியிலேயே எங்க ரெண்டு பேருக்கும் பார்வை கிடையாது. அதுக்காக நாங்களோ, எங்க குடும்பமோ வருத்தப்பட்டு சோர்ந்து உட்கார்ந்திடல.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சின்ன வயசுல, நம்மால மத்தவங்க மாதிரி இருக்க முடியலையேனு வருத்தம் இருந்தாலும், அதையெல்லாம் கடந்து வந்துட்டோம். எங்களைப் பொறுத்தவரை ஜாலிங்கிறது, மனசுக்கு பிடிச்சவங்ககிட்ட பேசி சிரிக்கிறதுதான். மனுஷனா பிறந்துட்டோம். சாமி பார்வையை குடுக்கலைனு குறை சொல்லி, முடங்கிக் கிடக்குறதை விட்டுட்டு, கை, கால் நல்லபடியா கொடுத்துருக்காரு, நல்ல குடும்பத்தைக் கொடுத்துருக்காருனு சந்தோஷப்படுறோம். இன்னும் சொல்லணும்னா இந்த உலகம்தான் எங்களுக்கு குறை இருக்குதுனு சொல்லுது. நாங்க அப்படி நினைக்கல. பார்வையில்லைன்னா என்ன... வாழ முடியும்கிற நம்பிக்கை மனசு முழுக்க இருக்கு.

மாற்றுத்திறனாளி நண்பர்கள்.
மாற்றுத்திறனாளி நண்பர்கள்.

ஸ்கூல் முடிச்சிட்டு காலேஜ்ல சேர்ந்தோம். எம்.ஃபில் வரை படிச்சிருக்கோம். பார்வையில்லாததால தனியார் நிறுவனங்கள்ல வேலை கிடைக்காது. அதனால் இப்போ அரசு போட்டித் தேர்வுகளுக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கோம். ஆடியோ வடிவிலான புத்தகங்களைக் கேட்டு தேர்வுக்குத் தயார் ஆகுறோம். சீக்கிரம் வேலைக்குச் சேர்ந்துருவோம்னு நம்பிக்கை இருக்கு.

இப்போகூட தமிழ்வழி கல்விக்கான சான்றிதழ் வாங்கதான் சென்னை வந்தோம். சென்னை எவ்வளவு பரபரப்பா இருக்குதுனு ஹாரன் சத்தத்தை கேட்கும்போதே உணர முடியுது. ஆனாலும் எங்களோட உலகத்துல எந்தப் பரபரப்பும் இல்லை. நான் புதுக்கோட்டையிலேருந்து வந்தேன், இவரு காரைக்குடியில இருந்து வந்தாரு. காலையில இருந்து சென்னையில பயணிக்கிறோம். எத்தனையோ மனுசங்க எங்களுக்கு உதவி பண்றாங்க.

மாற்றுத்திறனாளி நண்பர்கள்.
மாற்றுத்திறனாளி நண்பர்கள்.
மதுர மக்கள்: "சிவகார்த்திகேயன் சம்பளம், கமல் சார் உதவி!" மாற்றுத்திறனாளி கிரிக்கெட்டர் சச்சின் சிவா

`கிராமம் மாதிரி சிட்டி கிடையாது, அசந்தா ஏமாத்திட்டு போயிருவாங்கனு' மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கோம். எங்க வாழ்க்கையில் தடுமாற்றங்கள் இருந்தாலும், பெரிய அளவுல ஏமாற்றங்கள் இருந்தது இல்ல. நாங்க முழுசா மனுஷங்களை நம்புறோம். அப்படியே சில ஏமாற்றங்கள் நிகழ்ந்தாலும், ஏமாத்துனவங்களை நாங்க குறை சொல்ல முடியாது. தப்பு எங்க மேலதான்னு நினைச்சுப்போம். எங்களோட வாழ்க்கையில முகம் தெரியாத, எத்தனையோ நண்பர்கள் அன்றாடம் பயணிக்கிறாங்க. அவங்களை நம்பிதான் எங்களோட பயணம் தொடருது. இல்லைனா இவ்வளவு பெரிய சிட்டியில் தனியா பயணிக்க முடியுமா?

ஒரு இடத்துக்குப் போக நாங்க வழி கேட்கும்போது, அவங்களோட அவசரமான வேலைகளை விட்டுட்டு சிலர் எங்களுக்காக நின்னு வழி சொல்லுவாங்க. சிலர் கையைப் பிடிச்சு நாங்க கேட்ட இடத்துக்கே கூட்டிட்டுப் போவாங்க. வழி சொல்லும் நண்பர்கள் தொடங்கி, எங்களுக்காகத் தேர்வு எழுதும் நண்பர்கள் வரை சக மனுஷங்க இல்லாமல் இந்த வாழ்க்கையை எங்களால் நினைச்சுக் கூட பார்க்க முடியாதுங்கிறதுதான் உண்மை. உங்களுக்குதான் அது ஒரு நிமிஷ உதவி. எங்களைப் பொறுத்தவரையில் மத்தவங்க எங்களுக்குச் செய்யுறது வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வு. எங்களுக்கு மத்தவங்க செஞ்ச சின்ன சின்ன உதவிகள், பிரகாசமான இடத்துக்கு அழைச்சுட்டுப் போகப்போறதா நம்பி, வாழ்க்கையைத் தொடர்ந்துகிட்டு இருக்கோம். எங்களைப் பொறுத்த வரை உதவி செய்யும் ஒவ்வொருத்தரும் கடவுள்தான்.

இந்த நிமிஷம் வாழ்க்கையில சந்தோஷமா இருக்கோம். வேலைக்குப் போணும், குடும்பத்தைக் காப்பாத்தணும்னு எங்களுக்கு ஆயிரம் கனவுகள் இருக்கு. அதுக்காக போராடுறோம்'' நம்பிக்கையோடு விடைபெற்றவர்களை கண்கள் நிலைகுத்தப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கண்களால் பார்ப்பது பார்வை மட்டுமே ...

மனதால் பார்ப்பதே சிந்தனை.!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு