Published:Updated:

`10 மணி நேரம் காதலனின் பெற்றோரை நிர்வாணப்படுத்தி அடிச்சாங்க!'- எஸ்பி ஆபீஸில் உறவினர்கள் கண்ணீர்

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இளம் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி, காதல் திருமணம் செய்து கொண்டதால், இரண்டு சமூகத்தினரிடையே கலவரம் சூழ்ந்துள்ளது.

காதல் ஜோடி
காதல் ஜோடி ( செ.பிரபாகரன் )

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள பிக்கனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் வயது 24. பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அஜித்குமாரும் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த பிரியாவும் கடந்த 8 ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பிரியாவின் வீட்டில் இருவரின் காதலுக்குக் கடுமையான எதிர்ப்பு இருந்து வந்துள்ளது.

அஜித்குமார் உறவினர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
அஜித்குமார் உறவினர்கள் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தனர்.
செ.பிரபாகரன்

கடந்த ஜூன் 21-ம் தேதி எம்.எஸ்சி படிக்க தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பிக்கச் செல்வதாக வீட்டில் தெரிவித்துவிட்டுச் சென்ற பிரியா, மீண்டும் வீடு திரும்பவில்லை என அதியமான் கோட்டை காவல் நிலையத்தில் பிரியாவின் தாய் புகார் கொடுக்கிறார். புகாரைப் பெற்ற ஆய்வாளர் ராஜேஷ், உமன் மிஸ்சிங் வழக்கை பதிவு செய்து விசாரணை செய்தபோது, பிரியாவும், அஜித்குமாரும் காதலித்து வந்ததும், இருவரும் தற்போது மேஜர் என்பதால், வீட்டைவிட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்ட தகவல் தெரியவந்துள்ளது. வழக்கை முடித்து வைக்க, தலைமறைவான காதல் ஜோடி எங்கு தேடியும் கிடைக்காததால் வழக்கு விசாரணை மட்டத்திலேயே இருந்து வருகிறது.

Vikatan

இந்த நிலையில், அஜித்குமாரும், பிரியாவும் ஊரைவிட்டுச் சென்ற தகவலை அறிந்ததும், பிரியாவின் சமூகம் பெரும்பான்மை சமூகம் என்பதால், பயத்தில் அஜித்குமார் குடும்பத்தினரும், அவரது உறவினர்களும் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பெங்களூரு சென்றுள்ளனர். தகவல் அறிந்த பிரியாவின் உறவினர்கள், ஜூலை 24-ம் தேதி பெங்களூரு சென்று அஜித்குமார் குடும்பத்தினரை தாளபள்ளம் கிராமத்திற்கு அழைத்து வந்து, ஊர் மக்கள் முன்பு மரத்தில் கட்டி வைத்து அடித்து பிரியாவை கொண்டு வந்துவிடும்படி துன்புறுத்தியுள்ளனர். அடுத்ததாள் அவர்கள் அனைவரையும் காரில் ஒகேனக்கலுக்கு அழைத்துச் சென்று, இன்னும் 10 நாள்களுக்குள் பிரியா திரும்பவில்லை என்றால் அனைவரையும் கொன்றுவிடுவதாக மிரட்டி அனுப்பி வைத்துள்ளனர்.

பிரியாவின் சித்தப்பா தர்மலிங்கம்
பிரியாவின் சித்தப்பா தர்மலிங்கம்
செ.பிரபாகரன்

தாக்குதல் குறித்து அஜித்குமாரின் தாத்தா ராஜா இண்டூர் காவல் நிலையத்தில், பிரியாவின் உறவினர்களான பாஸ்கர், தர்மலிங்கம், செந்தில், கனகராஜ் மற்றும் ஆரோக்கியராஜ் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகார் மனுவில், ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் அஜித்குமாரின் தாயாரை நிர்வாணப்படுத்தி அடித்ததாகவும், அந்தக் கொடுமையைத் தடுக்க முயன்ற மற்றவர்களையும் அடித்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ராஜாவின் புகார் மனுவிற்கு இண்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ள ஆய்வாளர் துரைராஜ், 'குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் பெண்ணின் உறவினர்கள். அஜித்குமாரின் தாத்தா ராஜா அளித்துள்ள புகார் மனுவிற்குப் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தார். இந்த நிலையில், பெரும்பான்மைச் சமூகத்தினரின் தாக்குதலிலிருந்து தங்கள் சமூகத்திற்குப் பாதுகாப்பு கேட்டு அஜித்குமாரின் உறவினர்கள் மாவட்ட எஸ்.பி-யிடம் மனு அளித்துள்ளனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அஜித்குமாரின் உறவினர்களான நாகராணி, சரஸ்வதி, "நாங்கள் சொல்ல முடியாத அளவுக்கு தாக்கப்பட்டோம். மூன்று பெண்களும் மூன்று ஆண்களுமாக இருந்த எங்களை பெங்களூரிலிருந்து காரில் தாளப்பள்ளத்தில் உள்ள பெண் வீட்டிற்கு அழைத்து வந்து மரத்தில் கட்டி வைத்து அடித்தார்கள். குறிப்பாக அஜீத்தின் அப்பா காளிதாஸையும், அம்மா வித்யாவையும் நிர்வாணப்படுத்தி தாக்கினார்கள். இரவு பன்னிரண்டு மணி முதல் காலை பத்துமணி வரை தாக்குதல் நடந்தது.

அஜீத்குமாரின் உறவினர்கள் பேட்டி
அஜீத்குமாரின் உறவினர்கள் பேட்டி
செ.பிரபாகரன்

அதன்பின் தாசம்பட்டி காட்டில் உள்ள ஒரு அறையிலும் ஒகேனக்கலில் ஒரு அறையிலும் அடைத்துவைத்து அடித்தார்கள். நான் (அத்தை சரஸ்வதி) இதய நோயாளி என்று கெஞ்சியதும் என்னை மட்டும் விட்டுவிட்டார்கள். கடைசியில் அவர்களே காரில் ஏற்றிக்கொண்டுபோய் ஓசூரில் விட்டுவிட்டார்கள். அஜித்தின் தாய் சுயநினைவின்றி பெங்களூரில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார் என்று கண்ணீருடன் கூறினர்.

அஜித்குமாரின் உறவினர்கள், பிரியாவின் சித்தப்பா தர்மலிங்கத்தை தாக்கிவிட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தர்மலிங்கம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அடுத்தடுத்து நடைபெற்று வரும் அடிதடி சம்பவங்களால், பென்னாகரம் பதற்றத்துடன் காணப்படுகிறது.