Published:Updated:

`நீ தோற்கவில்லை; அதிர்ஷ்டம் தான் அவரை ஜெயிக்கவைத்தது!’- தஞ்சை வேட்பாளரைத் தேற்றிய ஆதரவாளர்கள்

தஞ்சை குலுக்கல்
தஞ்சை குலுக்கல்

தஞ்சையில் ஒரு பதவிக்குப் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்கள் சரி சமமான வாக்குகளைப் பெற்றதால் பின்னர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சுவராஸ்யச் சம்பவம் நடந்தது.

தஞ்சாவூர் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணும் பணிகள், தஞ்சாவூர் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் நடைபெற்று வருகிறது. காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கை இரவு முழுவதும் தொடர்ந்தது . இதில் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் 61 ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான வாக்குகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.

வாக்கு எண்ணிக்கை
வாக்கு எண்ணிக்கை

இந்த நிலையில் மாத்தூர் கிழக்கு ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மலர் விழி, மஞ்சுளா ஆகிய இருவர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையில் இருவரும் தலா 409 வாக்குகள் பெற்றனர். இருவரும் சமமான வாக்குகள் பெற்றதையடுத்து இரண்டு வேட்பாளர்களையும் தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன் அழைத்தார். பின்னர், அந்த இரண்டு பேரிடமும் `நீங்கள் இருவரும் சமமான வாக்குகளைப் பெற்றிருக்கிறீர்கள். அதனால் வெற்றி பெற்றவரைக் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளோம்’ எனக் கூறினார்.

உள்ளாட்சி வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு #ElectionUpdate #NowAtVikatan

இரு வேட்பாளர்களும், அவர்களின் முகவர்களும் இதை ஏற்றுக்கொண்டனர். பின்னர் இரு வேட்பாளர்கள் முன்னிலையில் அவரவர் பெயரைத் துண்டு சீட்டில் எழுதிக் குலுக்கினார். பிறகு அதில் ஒரு சீட்டை எடுத்த பிரபாகரன், அதில் மஞ்சுளா பெயர் இருப்பதாக அறிவித்தார். இதையடுத்து மஞ்சுளா ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

குலுக்கல்
குலுக்கல்

மஞ்சுளா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனேயே மலர் விழியின் கண்கள் கலங்கின. பின்னர் கண்களைத் துடைத்தவாறே வெளியே சென்றார். அவருடைய ஆதரவாளர்கள் `எதிர் வேட்பாளருடன் சரிக்குச் சமமான வாக்குகளைப் பெற்று விட்டோம். ஆனால் அதிர்ஷ்டம்தான் அவரை ஜெயிக்க வைத்துள்ளது, நீ ஒன்றும் கவலைப் படாதே நீ தோற்கவில்லை வாக்காளர்கள் நமக்கான அங்கீகாரத்தைக் கொடுத்து விட்டனர்' என மலர் விழியைத் தேற்றினர். வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த பலரும் மலர் விழிக்காக வருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதே போல் தஞ்சை ஒன்றிய கவுன்சிலர் வார்டு எண் 2-க்கான வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் அந்த வார்டுக்கு போட்டியிட்ட தே.மு.தி.க வேட்பாளரான மலர்மதி என்பவர் தன்னை வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டனர் எனக் கூறி வெளியே வந்தார். உடனே அவருடைய ஆதரவாளர்கள் மலர்மதிக்கு மாலையிட்டு அழைத்து அதனுடன் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

மஞ்சுளா
மஞ்சுளா

இதையடுத்து சற்று நேரத்திற்குப் பிறகு தேர்தல் அலுவலர்கள் வேறு ஒரு வேட்பாளர் ஜெயித்ததாக அறிவித்தனர். இதைக் கேட்ட மலர்மதி அதிர்ச்சியில் உறைந்தார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை முடித்து சொல்வதற்கு முன்பே தான் ஜெயித்து விட்டதாக நினைத்துக் கொண்டு சென்று விட்டார் அதனால் வந்த ஏமாற்றம் தான் இது என அருகிலிருந்தவர்கள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு