Published:Updated:

எம்.ஜி.ஆர் முதல் தனுஷ் வரை! -தேசியச் சின்னமாகுமா 81 ஆண்டு ராஜேந்திரா பாலம்?

ராஜேந்திரா இரும்புப் பாலம்
ராஜேந்திரா இரும்புப் பாலம்

``81-வது ஆண்டைத் தொடும் திருவலம் ராஜேந்திரா இரும்புப் பாலத்தை தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்’’ என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராஜேந்திரா இரும்புப் பாலம்

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த திருவலத்தில், பொன்னையாற்றின் குறுக்கே அமைந்துள்ள ‘ராஜேந்திரா இரும்புப் பாலம்’ 80 ஆண்டுகளைக் கடந்தும் தனது உறுதித்தன்மையை கம்பீரமாக உலகுக்குக் காட்டி நிற்கிறது.

1939-ம் ஆண்டு போக்குவரத்து பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்ட இந்தப் பாலத்தின் தொழில்நுட்பம், இப்போதைய பொறியாளர்களையும் வியக்கவைக்கிறது. மெட்ராஸ் ஜே.ஹெச்.தாராப்பூர் பொறியியல் நிறுவனத்தினரால், 1935-ம் ஆண்டு இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன.

ராஜேந்திரா இரும்பு பாலம்
ராஜேந்திரா இரும்பு பாலம்

அந்த நேரத்தில் பொன்னையாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. அப்படியிருந்தும், ஆற்றின் நீரோட்டத்தைக் கணித்து துருப்பிடிக்காத சாய்வு வடிவ இரும்புத் தூண்களைக் கொண்டு பாதுகாப்பான முறையில் பாலத்தைக் கட்டியிருக்கிறார்கள். அரை கிலோ மீட்டர் நீளம் உள்ள இந்தப் பாலத்தைக் கட்ட 10,000 டன் இரும்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கட்டுமானப் பணியில் 1,200 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இரும்புத் தூண்கள், சட்டங்களை இணைப்பதற்கு 2 லட்சம் இரும்பு ஸ்குரூக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

`70 ஆண்டு கோரிக்கை; பணம் கொடுத்த ஊராட்சித் தலைவி!' -ஒரேவாரத்தில் பாலம் அமைத்த தெங்குமரஹாடா மக்கள்

சென்னை மாகாணத்திலேயே புதுமையாகவும் வித்தியாசமாகவும் ராஜேந்திரா பாலம் திகழ்ந்ததால், 50-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள், தெலுங்கு, கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கான கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் பலவும் இந்தப் பாலத்தில் படமாக்கப்பட்டுள்ளன. பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களிலும் இந்தப் பாலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இந்த இரும்புப் பாலத்தில், 24 மணிநேரமும் அனைத்துவிதமான வாகனங்களும் சென்றுவருகின்றன.

ராஜேந்திரா இரும்புப் பாலம்
ராஜேந்திரா இரும்புப் பாலம்

பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ராஜேந்திரா பாலத்துக்கு சில ஆண்டுகளுக்கு முன் வெள்ளி வண்ணம் பூசப்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருவலத்தின் அடையாளமே ராஜேந்திரா பாலம்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் தொடங்கி தனுஷ் வரை பல முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படக் காட்சிகளும் இந்த பாலத்தில் எடுக்கப்பட்டுள்ளன.

எம்.ஜி.ஆர் நடித்து ‘ஹிட்’ அடித்த ‘ரகசிய போலீஸ் 115’ திரைப்படத்தில் இந்தப் பாலம் காட்டப்பட்டிருக்கும். `ஆட்டுக்கார அலமேலு' திரைப்படத்தில் சிவகுமாரும், ஜெய்கணேஷும் மோதிக் கொள்ளும் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியும் இங்குதான் எடுக்கப்பட்டது .வரும் செப்டம்பரில், 81-வது ஆண்டில் அடியெடுத்துவைக்கும் இந்த இரும்புப் பாலத்தை பொக்கிஷமாகப் பாதுகாப்பதுடன், தேசிய வரலாற்றுச் சின்னமாகவும் அறிவிக்க வேண்டும்’’ என்கிறார்கள் பெருமிதமாக.

அடுத்த கட்டுரைக்கு