Published:Updated:

`தமிழுக்குக் கிடைத்த பரிசு!' - தாய்மொழி தின விழாவில் உருகிய தந்தை; மன்னார்குடி நெகிழ்ச்சி

தமிழில் பெயர் கொண்ட மாணவர்கள்
News
தமிழில் பெயர் கொண்ட மாணவர்கள்

தமிழ் மொழி மீதான விழிப்புணர்வும், மொழியுணர்வை வளர்க்கும் விதமாக தொடர்ந்து பல்வேறு அரசுப் பள்ளிகளுக்குச் சென்று 'அழகிய தமிழுக்கு.. பாராட்டுச் சான்றிதழ்கள்' வழங்க திட்டமிட்டுள்ளோம்." என்றார்.

மன்னார்குடியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ் மொழி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அரசுப் பள்ளி மாணவர்களுடன் விழாவைக் கொண்டாடினர். அந்த விழாவில் தூய தமிழ்ப் பெயர் கொண்ட மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் பாராட்டி சான்றிதழ் மற்றும் புத்தகம் பரிசாகக் கொடுத்தனர். இது தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

விழாவில்
விழாவில்

மன்னார்குடியில் உள்ள கோபாலசமுத்திரம் நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மன்னார்குடி கிளை சார்பில் உலக தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது. கலை இலக்கியப் பெருமன்றத் தலைவர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் மாவட்டத் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் சந்திரசேகரன் பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

`தாய்மொழி நேசி! தமிழ்மொழி வாசி!' எனும் தலைப்பில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொதுச் செயலாளர் முனைவர் இரா.காமராசு தமிழ் மொழி குறித்த சிறப்புகளை எடுத்துக்கூறினார்.

உலக தாய்மொழி தின விழா
உலக தாய்மொழி தின விழா

பின்னர் இந்த விழாவில் கலந்துகொண்ட தூய தமிழ்ப் பெயர் கொண்ட பல்வேறு அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் அவர்களுக்கு தமிழ்ப் பெயரை சூட்டிய பெற்றோர்களையும் கெளரவப்படுத்தும் விதமாக அவர்களை மேடையேற்றி பாராட்டி வாழ்த்து தெரிவித்து சான்றிதழ் மற்றும் தமிழ்ப் புத்தகம் ஒன்றையும் பரிசாகக் கொடுத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மன்னார்குடி கிளையின் செயலாளர் க.தங்கபாபுவிடம் பேசினோம்,``உலகத் தாய்மொழி தினத்தில் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று தூய தமிழில் பெயர் உள்ள மாணவ மாணவிகளுக்கும் அத்தகைய தமிழ்ப் பெயரைச் சூட்டிய பெற்றோர்களுக்கும் பாராட்டு தெரிவித்து, சான்றுகளும் நூல்களும் பரிசளிக்க திட்டமிட்டு அதன்படி இந்த விழா கொண்டாடப்பட்டது. தூய தமிழ்ப் பெயர்கள் கொண்ட பிள்ளைகளைத் தேர்ந்தெடுத்தோம். அப்படித் தேர்ந்தெடுத்தில் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே தூய தமிழ்ப் பெயர்கள் கொண்டிருந்தனர். இதனால் நாங்கள் கொஞ்சம் அதிர்ந்துதான் போனோம்.

சான்றிதழ்
சான்றிதழ்

இனியாள், இமையாள், மகிழினி, நேசன் போன்ற தமிழ்ப் பெயர்களை அவர்களிடம் காணும்போது உண்மையிலேயே செவிகளில் தேன் பாய்வதை உணர முடிந்தது. நிறைய பிள்ளைகளின் பெயர்களில் வடமொழி எழுத்துகள் கலந்திருப்பது வேதனையைத் தருகிறது. தமிழில் பெயர் சூட்டிய பெற்றோர்கள் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்கள்.

உலக தாய்மொழி தின விழா
உலக தாய்மொழி தின விழா

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தமிழ் மொழி மீதான விழிப்புணர்வும், மொழியுணர்வை வளர்க்கும் விதமாக தொடர்ந்து பல்வேறு அரசுப் பள்ளிகளுக்குச் சென்று 'அழகிய தமிழுக்கு.. பாராட்டுச் சான்றிதழ்கள்' வழங்க திட்டமிட்டுள்ளோம்" என்றார். ``இது தமிழ் மொழிக்குக் கிடைத்த பரிசு. நமது குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட முன்வர வேண்டும். தமிழில் அழகான பெயர்கள் எவ்வளவோ இருக்கின்றன'' என்று விழாவில் கலந்துகொண்ட மாணவி ஒருவரின் தந்தை கூறினார்.