Published:Updated:

வீரத் தம்பதியிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது யார்?- விரிவடையும் விசாரணை வளையம்!

பி.ஆண்டனிராஜ்
இ.கார்த்திகேயன்

நெல்லை மாவட்டம் கடையம் அருகே, முதிய தம்பதியரிடம் அரிவாள் முனையில் கொள்ளையில் ஈடுபட்ட இரு மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டிவருகிறார்கள். இது தொடர்பான விசாரணை வளையம் விரிவடைந்துள்ளது.

farmer shanmugavel and his wife
farmer shanmugavel and his wife

நெல்லை மாவட்டம் கடையம், கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு. ஓய்வுபெற்ற தனியார் நூற்பாலை ஊழியரான இவர், தன் மனைவி செந்தாமரையுடன் பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் சென்னை, பெங்களூருவிலும், மகள் அமெரிக்காவிலும் வசித்துவருகின்றனர்.

Video footage of the robbery
Video footage of the robbery

கல்யாணிபுரத்தில் 5 ஏக்கர் பரப்பளவுள்ள தோட்டத்தில் இரண்டரை ஏக்கரில் இயற்கை முறையில் எலுமிச்சை விவசாயம் செய்துவருகின்றனர். சண்முகவேலுக்கு வயது 72. அவரது மனைவி செந்தாமரைக்கு வயது 65. வயது முதிர்ந்த நிலையிலும், இயற்கை முறையில் நாட்டு ரக எலுமிச்சை சாகுபடியை லாபகரமாகச் செய்துவருவது தொடர்பாக, கடந்த 10-ம் தேதி வெளியான `பசுமை விகடன்' இதழில் அட்டைப் படக் கட்டுரை வெளியாகியிருந்தது.

இதற்கிடையே, சண்முகவேலுவின் தோட்டத்து வீட்டுக்குள், கடந்த 11-ம் தேதி இரவு சுமார் 9.30 மணியளவில், முகமூடி அணிந்த இரண்டு கொள்ளையர்கள் நுழைந்து, அரிவாள் முனையில் மிரட்டினர். அவர்களை சண்முகவேலுவும் அவரது மனைவி செந்தாமரையும் துணிச்சலுடன் போராடி விரட்டினார்கள். இருப்பினும், செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 36 கிராம் தங்க செயின் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த துணிச்சலான நடவடிக்கைக்காக, இருவருக்கும் முதலமைச்சரின் 'அதீத துணிச்சலுக்கான விருது' வழங்கப்பட்டது.

farmer shanmugavel and his wife
farmer shanmugavel and his wife

அக்கொள்ளைச் சம்பவம் தொடர்பாக உள்ளூரைச் சேர்ந்தவர்கள், பக்கத்து தோட்டத்து விவசாயிகள், உறவினர்கள் எனப் பல தரப்பினரிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். அத்துடன், சம்பவம் நடந்த ஒரு வார காலத்தில், அவரது வீட்டுக்குச் சென்றவர்களிடமும் போலீஸார் விசாரித்துவருகிறார்கள். அந்த வகையில், 'பசுமை விகடன்' இதழின் நிருபர் மற்றும் புகைப்பட கலைஞரும் கடையம் காவல் நிலைய போலீஸாரிடம் தங்களுக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவித்தனர்.

அத்துடன், சண்முகவேலுவின் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவரின் இரு மகன்களிடமும் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் அவர்களின் வளர்ப்பு நாய் இருந்தபோதும் குரைக்காமல் இருந்துள்ளது. அதனால், நன்கு அறிமுகமானவர்களே வந்திருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிப்பதால், நெருக்கமான வட்டாரத்தில் விசாரணை நடக்க இருக்கிறது.

farmer shanmugavel and his wife got award
farmer shanmugavel and his wife got award

சண்முகவேலு வீட்டில் மூன்றாவது முறையாக கொள்ளைச் சம்பவம் நடந்திருப்பது தொடர்பாகவும் விரிவான விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இது தவிர, சண்முகவேலு வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவரின் துப்பாக்கி காணாமல் போனதாகவும் தகவல் வெளியானது. அதன் உண்மைத்தன்மை பற்றியும் கடையம் போலீஸார் தீவிரமாக விசாரித்துவருகிறார்கள்.