Published:Updated:

``குழந்தைங்க பசியில வாடுது; நல்ல சாப்பாடு சாப்ட்டு 10 நாளாச்சு!” இருளர் குடியிருப்பு மக்களின் துயரம்

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

``இதே நிலைமை இன்னும் நீடிச்சா, 10 ரூபாய் கொடுத்து ரேஷன் அரிசியைக்கூட வாங்கிச் சாப்பிட முடியாம போயிடும். அந்த நிலைக்குக் கடவுள் எங்களைத் தள்ளிடக் கூடாது. சீக்கிரமே நிலைமை மாறணும்னு ஆசைப்படுறோம்" என்கின்றனர் இம்மக்கள்.

கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், தினக்கூலிகள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலரும் வேலையின்றி கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். ரேஷன் அட்டைதாரர் அனைவருக்கும் 1,000 ரூபாய் மற்றும் ஒரு மாதத்துக்கான சில ரேஷன் பொருள்களைத் தமிழக அரசு இலவசமாக வழங்கிவருகிறது. அவைகூட கிடைக்காமல் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது ஓர் இருளர் சமூக மக்களின் குடியிருப்பு.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவில் இருக்கிறது கீழப்பூண்டி கிராமம். அங்குள்ள இருளர் குடியிருப்பில் இருளர் சமூகத்தைச் சேர்ந்த 42 குடும்பங்கள் இருக்கின்றன. அதில் 150-க்கும் மேற்பட்டோர் வசிக்கிறார்கள். அங்கு பெரும்பாலான குடும்பங்களுக்கு இன்னும் ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. ரேஷன் கார்டு உள்ள சில குடும்பங்களுக்குக் கிடைத்த ரேஷன் அரிசியில் கஞ்சி காய்ச்சிக் குடித்து பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள் அங்குள்ள மக்கள்.

``இங்கிருக்கிற மக்கள்ல நிறைய பேருக்கு ஆதார் கார்டுகூட இல்லை. அதனால ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கப்போனா, ஆதார் கார்டு கொண்டு வரச் சொல்றாங்க. ஆதார் கார்டு எடுக்கப் போனா, `போதிய ஆவணம் உங்ககிட்ட இல்லை. கொண்டுவாங்க’ன்னு சொல்றாங்க. அதனாலயே இங்கிருக்கிற நிறைய குடும்பத்துக்கு ரேஷன் கார்டு இல்லை.
கிராம மக்கள்

14 வயதைத் தாண்டாத அந்தச் சமூக மக்களின் குழந்தைகள் பள்ளியில் படிக்கிறார்கள். எண்ணெய் வைக்காத தலையுடன், நல்ல உடைகூட இல்லாமல் அந்தக் குழந்தைகள் வீட்டு வாசலில் விளையாடிக்கொண்டிருந்தனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அங்குள்ள அனைவரின் முகத்திலும் பசியின் பரிதவிப்பை உணர முடிந்தது. அந்த மக்களின் தற்போதைய நிலை குறித்துப் பேசுகிறார் அங்கு வசிக்கும் லட்சுமி.

``இங்கிருக்கிற மக்கள்ல நிறைய பேருக்கு ஆதார் கார்டுகூட இல்லை. அதனால ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கப்போனா, ஆதார் கார்டு கொண்டு வரச் சொல்றாங்க. ஆதார் கார்டு எடுக்கப் போனா, `போதிய ஆவணம் உங்ககிட்ட இல்லை. கொண்டுவாங்க’ன்னு சொல்றாங்க. அதனாலயே இங்கிருக்கிற நிறைய குடும்பத்துக்கு ரேஷன் கார்டு இல்லை. 25 குடும்பத்துக்கு மட்டும்தான் ரேஷன் கார்டு இருந்துச்சு. இதுக்கு முன்னாடி சுரக்காய்ப்பேட்டையில வசிச்சோம். அங்கிருந்து இங்க வந்த பிறகு, அட்ரஸ் மாத்த விண்ணப்பிச்சிருந்தோம். அதுல 12 குடும்பத்துக்கு இன்னும் புது ரேஷன் கார்டு கிடைக்கலை. இதுபத்தி அதிகாரிகள்கிட்ட சொன்னாலும் யாருமே எங்களைக் கண்டுக்கலை.

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

42 குடும்பங்கள்ல என் குடும்பம் உட்பட 13 குடும்பங்களுக்குத்தான் ரேஷன் கார்டு இருக்கு. எங்களுக்கு இப்போ 1,000 ரூவா பணமும் ரேஷன் பொருள்களும் கிடைச்சிருக்கு. அதிலிருந்து ஒவ்வொரு வூட்டுக்கும் ரெண்டு கிலோ அரிசியைப் பிரிச்சுக்கிட்டோம். அது எத்தனை நாளைக்குப் பத்தும்? அதனால ஊர்ல சில மக்கள்கிட்ட ரேஷன் அரிசியைக் கிலோ 10 ரூவாய்க்கு விலைகொடுத்து வாங்கறோம். ஒவ்வொரு நேரத்துக்கும் சுடு சோறு செஞ்சு சாப்பிடற நிலையில நாங்க இல்லை.

அக்கம்பக்கத்துல காய்கறிகள் கடை இருக்கு. ரோட்டுலயும் கூவி விக்கிறாங்க. ஆனா, காசு இருந்தாதானே வாங்க முடியும்.

நைட்டுக்கு மட்டும் சாப்பாடு செஞ்சு அதையே அடுத்த நாள் மதியம் வரைக்கும் வெச்சிருந்து சாப்பிடுறதுதான் எங்க வழக்கம். இப்போ அதுக்கும் வழியில்லை. வருமானம் இல்லாததால, ரேஷன்லயும் அரிசி, பருப்பு கிடைக்காததால, 10 நாளா மூணு வேளையும் கஞ்சி செஞ்சுதான் குடிக்கிறோம். அதுவும் எப்பயும்போல நைட்டு கஞ்சி செஞ்சு அடுத்த நாள் மதியம் வரைக்கும் சூடு பண்ணிக் குடிக்கிறோம். ஏதோ ஒருசில வூட்டுல கொழம்பு சாப்பாடு செஞ்சா அதை மத்த வூட்டுக் குழந்தைகளுக்கும் ரெண்டு வாய்க்குக் கொடுப்போம். அக்கம்பக்கத்துல காய்கறிகள் கடை இருக்கு. ரோட்டுலயும் கூவி விக்கிறாங்க. ஆனா, காசு இருந்தாதானே வாங்க முடியும்” என்பவரின் பேச்சில் வரிக்கு வரி ஆதங்கம் எதிரொலிக்கிறது.

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

மொட்டைமாடியில் நின்று கைதட்டுவது மற்றும் இரவில் விளக்கேற்றி உற்சாகமடையும் மக்களுக்கு மத்தியில் ஒருவேளைச் சாப்பாட்டுக்குகூட வழியில்லாத இந்த மக்களின் நிலை குறித்து அரசாங்கம் உட்பட யாரும் அக்கறை செலுத்தாமல் இருப்பதுதான் பெரும் சோகம்.

ஒருவேளைக்காவது நல்ல சாப்பாட்டுக்குத்தானே வழி கேட்கிறோம். இந்தக் கஷ்டங்களையெல்லாம் பெரியவங்க நாங்க தாங்கிப்போம். எங்க குழந்தைகளை நெனச்சாதான் கவலையா இருக்கு.

லட்சுமியின் குடும்பம் மட்டுமே ஓர் அறை மட்டுமே உடையச் சிறு ஓட்டு வீட்டில் வசிக்கிறது. மற்ற 41 குடும்பங்களும் சிறிய குடிசை வீடுகளில் வசிக்கின்றன. தொகுப்பு வீட்டுத் திட்டத்தில் 10 பேருக்கு மட்டும் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில், அந்தப் பணிகளும் அரைகுறை கட்டுமானத்துடன் பாதியிலேயே நிற்கின்றன. வீட்டில் போதிய இடவசதி இல்லாததால், இங்குள்ள மக்கள் வீட்டு வாசலில்தான் குழந்தைகளுடன் இரவில் உறங்குகிறார்கள். இது பழக்கப்பட்ட வாழ்க்கை முறை என்றாலும், இதுபோன்று வாரக்கணக்கில் சாப்பாட்டுக்குப் பிறர் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டதில்லை என்று வருத்தத்துடன் கூறுகிறார்கள் அங்குள்ள மக்கள்.

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

``இங்க இருக்கிற 42 குடும்பத்துல 33 குடும்பத்துக்குத்தான் பட்டா கிடைச்சிருக்கு. மீதி பேரு பட்டா வாங்க போராடுறாங்க. தொகுப்பு வீடு கட்ட `10 பேருக்குத்தான் அனுமதி கிடைச்சுச்சு. அந்த வேலையும் சரியா நடக்கலை. நாங்க சாப்பிடவும் வழிசெய்யாம, தூங்க நல்ல வூடும் இல்லாம, ரேஷன் கார்டும் தராம எங்களை எல்லா வழியிலயும் ரொம்பவே கஷ்டப்படுத்துறாங்க. தேர்தல் வர்றப்போயெல்லாம் எங்க ஓட்டு மட்டும்தான் ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படுது. ஆனா, நாங்க வாழ்வா சாவானு இருக்கிற இந்த நிலையிலக்கூட யாரும் உதவி செய்ய வராம இருக்கிறதுதான் ரொம்பவே வருத்தத்தைக் கொடுக்குது.

ஊருக்குள்ள எங்க சமூகத்துக்குச் சரியான மதிப்பு கிடையாது. அதனாலதான் எங்களுக்குனு தனியா ஒரு குடியிருப்புல அமைதியா வாழ்ந்துட்டு இருக்கோம். அதுலகூட ஒருவேளைக்காவது நல்ல சாப்பாட்டுக்குத்தானே வழி கேட்கிறோம். இந்தக் கஷ்டங்களையெல்லாம் பெரியவங்க நாங்க தாங்கிப்போம். எங்க குழந்தைகளை நெனச்சாதான் கவலையா இருக்கு” வியர்வைத் துளிகளால் உப்பு படர்ந்த லட்சுமியின் புடவையை மேலும் ஈரமாக்குகின்றன அவரது கண்ணீர்த் துளிகள்.

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

நிரந்தர வேலைகள் ஏதும் இல்லாதவர்கள், கல் உடைப்பது, மரம் வெட்டுவது, விவசாய வேலைகள், அரிசி ஆலைகள் எனக் கூப்பிடும் திசைகளை நோக்கி கூலி வேலைக்குச் செல்கிறார்கள். சேமிப்புப் பழக்கமும் அதற்கான பொருளாதார உத்தரவாதமும் இல்லாத இவர்கள், அன்றாடம் வேலைக்குச் சென்று அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில்தான் வாழ்ந்து வருகின்றனர்.

இதே நிலைமை இன்னும் நீடிச்சா, 10 ரூபாய் கொடுத்து ரேஷன் அரிசியைக்கூட வாங்கிச் சாப்பிட முடியாம போயிடும். அந்த நிலைக்குக் கடவுள் எங்களைத் தள்ளிடக்கூடாது
லட்சுமி

``நாங்கெல்லாம் சில மாசத்துக்கு ஒருமுறை நல்ல சாப்பாடு சாப்பிட்டாலே பெரிய விஷயமுங்க...” - குழுமியிருந்த மக்களிடமிருந்து ஒத்த அலைவரிசையில் ஏக்கத்துடன் குரல்கள் எதிரொளிக்க, தொடர்கிறார் லட்சுமி.

``பாலீஸ் பண்ண அரிசி கிலோ 60 ரூபாய்க்குக் கம்மியில்லாம கடையில விக்குது. நாங்க வீட்டுக்கு நாலு பேரு இருக்கோம். வேலைக்குப் போனா எங்க ஓர் ஆளுக்கு ஒரு நாளைக்கு 200 ரூவாய்தான் கொடுப்பாங்க. அதுல எப்படி அந்த அரிசியை எங்களால வாங்கிச் சாப்பிட முடியும்? நைட்டு வெச்ச சாதத்தை அடுத்த நாள் மதியம் வரைக்கும் பசங்களுக்குக் கொடுக்க மனசில்லாம, சத்துணவுச் சாப்பிடுறதுக்காகவே அவங்களை ஸ்கூலுக்கு அனுப்பிடுவோம். இப்போ ஸ்கூல் இல்லாததால நல்ல சாப்பாடு இல்லாம பசங்க ரொம்பவே சோம்பிப்போய் இருக்குதுங்க.

கொரோனா வைரஸ் பரவுது. யாரும் வூட்டவிட்டு வெளிய வர வேணாம்னு சொல்றாங்க. இப்ப யார்கிட்ட போய் எங்க கஷ்டத்தைச் சொல்றதுனு தெரியலை. கொரோனா வர்றதுக்கு முன்னாடியே எங்களைக் கண்டுக்காதவங்க, இப்ப போய் சொன்னா உடனே வந்து உதவி செஞ்சுடுவாங்களா? என்ன பண்றதுனே தெரியாம தவிச்சுகிட்டு இருக்கோம். எங்களுக்கு இருக்கிற ஒரே கவலையும் பயமும் என்னன்னா... இப்போ வேலைக்குப் போகாம வூட்டுல சும்மாவே இருக்கோம்.

லட்சுமி
லட்சுமி

இதே நிலைமை இன்னும் நீடிச்சா, 10 ரூபாய் கொடுத்து ரேஷன் அரிசியைக்கூட வாங்கிச் சாப்பிட முடியாம போயிடும். அந்த நிலைக்குக் கடவுள் எங்களைத் தள்ளிடக் கூடாது. சீக்கிரமே நிலைமை மாறணும்னு ஆசைப்படுறோம்...” கண்ணீருடன் உரையாடலை முடிக்கும் லட்சுமியை, மறுபுறத்தில் மகள் தலைவாரிவிட அழைக்க விரைந்து செல்கிறார்.

இது இந்தக் குடியிருப்பில் உள்ள இருளர் சமூகத்து மக்களின் நிலை மட்டுமே அல்ல. இதுபோல தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுக்க பல லட்சம் மக்கள் ஒருவேளைச் சாப்பாட்டுக்குக்கூட உத்தரவாதமின்றி கண்ணீரும் தவிப்புமாய் இருக்கின்றனர். இவர்களின் நிலையை உணராமல், இவர்களுக்கான வாழ்வாதாரத் தேவைகளை உறுதிசெய்யாமல், நான்கு மணிநேர கால அவசாகம் மட்டுமே கொடுத்து ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதும், 21 நாள்கள் ஊரடங்கை மேலும் விரிவுபடுத்த அரசு ஆலோசனை செய்வதும் இன்னும் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ?

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

பசி ஏக்கத்தில் அலறும் இவர்களால், வாசலில் நின்று கைதட்ட முடியாது. கஞ்சி வடிக்கத் தினமும் ஒருவேளை மட்டுமே விறகடுப்பை தீமூட்டும் இவர்களால், இரவில் விளக்கேற்றி உற்சாகம் அடைய முடியாது. இவர்கள் இப்படிக் கதறும் முன்பே தீர்வுகளுக்கான வழிகளையும் அரசு யோசித்திருக்க வேண்டாமா?

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

அரசு கூறும் கவர்ச்சிகரமான சில அறிவிப்புகள், அடுத்த வேளைச் சாப்பாட்டுக்குப் பிரச்னையில்லாத மக்களை உற்சாகப்படுத்த மட்டுமே உதவுகின்றன. இங்கு காட்சிப்படுத்தியிருக்கும் மக்களின் நிலையையும் பாருங்கள். இந்த மக்கள் மனம் வெடித்துக் கதறுகிறார்கள். மத்திய, மாநில ஆட்சியாளர்கள் இதுபோன்ற விளிம்புநிலை மனிதர்களுக்குமான பிரதிநிதிகளே. இந்த மக்களின் கண்ணீரைத் துடைப்பதும் உங்கள் கடமையல்லவா ஆட்சியாளர்களே! என்ன செய்யப்போகிறீர்கள்?

இந்த இருளர் சமூக மக்களுக்கு உதவ நினைப்பவர்கள் உங்கள் உதவிகளை அளிக்கலாம்.

இந்த இருளர் மக்களுக்கு உதவ முன்வருவோர் தொடர்பு கொள்ள...

லட்சுமி - 76958 47361

210, இருளர் குடியிருப்பு,

விவேகானந்தா நகர், கீழப்பூண்டி,

பள்ளிப்பட்டு தாலுகா,

திருவள்ளூர் மாவட்டம்.

இந்தக் கிராம மக்களைப்போல சாப்பாட்டுக்கே கஷ்டப்படுபவர்களுக்கு அரசு என்ன மாதிரி உதவலாம் என்பதை கமென்ட்டில் தெரிவியுங்கள்.

அடுத்த கட்டுரைக்கு