Published:Updated:

விழுப்புரம்: `எங்க வீடும் வாழ்வும் இப்படித்தான்’ - பரிதவிக்கும் இருளர் சமூக மக்கள்; ஆட்சியரின் பதில்

கரசானூர் இருளர் சமூக மக்கள்
கரசானூர் இருளர் சமூக மக்கள்

`வீடுகள் எரிந்து, பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு ஆட்சியர் உறுதி அளித்திருந்தும் தற்போது வரை இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாமல் இருக்கிறது. அரசு அதிகாரிகள் காண்பித்த இரண்டு இடத்தின் அருகே குவாரிப் பள்ளங்களாக இருப்பதால், அந்த மக்கள் வாழ்வதற்குத் தகுந்த இடமாக அது இல்லை.’

ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவைகளில் மிகவும் முக்கியமானவை வசிக்க இடம், உடுத்த உடை, உண்ண உணவு ஆகியவை. அப்படியிருக்க, வசிப்பதற்கும் நிலையான இடங்கள் இன்றி இன்றளவும் தவித்துவருகின்றனர் கரசானூர் பழங்குடி இருளர் சமூக மக்கள். ஏரிப் பகுதியில் அவர்கள் தங்கியிருந்த குடிசைகள் கடந்த வருடம், டிசம்பர் மாதம் தீப்பிடித்து எரிந்துள்ளன. ஆவணங்கள், துணிமணிகள், ஆடுகள் என அனைத்தும் தீயில் கருகிப்போயிருக்கின்றன. நிரந்தரமான இடமோ, வீடுகளோ இன்றித் தவித்த அந்த மக்களுக்கு ஓரிரு தினங்களில் இலவச வீட்டுமனைப் பட்டா தருவதற்கு ஏற்பாடுகள் செய்வதாகக் கூறி, அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்திருக்கிறார். சுமார் ஒரு மாத காலம் வரை அருகிலுள்ள அரசுப் பள்ளியில் அந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இருளர் மக்களின் குடிசைகள்
இருளர் மக்களின் குடிசைகள்

அவர்களுக்குப் பட்டா கொடுப்பதற்கான நிலத்தைத் தேர்வு செய்த அரசு அதிகாரிகள், 400 அடி ஆழமுள்ள குவாரிப் பள்ளங்களின் அருகேயிருக்கும் பகுதிகளைக் காண்பித்துள்ளனர். தங்களுடைய குழந்தைகளை எண்ணி அஞ்சிய அந்த மக்கள், வாழத் தகுதியான இடத்தில் இலவச வீட்டுமனையை வழங்கும்படி கேட்டும், இன்று வரை வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாக வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

``குழந்தைகளுக்குப் பழைய சாப்பாடுகூட கொடுக்க முடியாம தவிக்கிறோம்!”-கவலையில் இருளர் மக்கள்

கரசானூருக்கு நேரடியாகச் சென்றோம். விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 14 கி.மீ தொலைவில் இருந்தது அந்த ஊர். ஊரின் உட்புறமாக இருக்கும் சித்தேரிக் கரையின் ஓரங்களில் அவர்களுடைய குடிசைகள் தென்பட்டன. தவழ்ந்து மட்டுமே செல்லும் வகையில், கீற்றுகளையும் பாலிதீன் பேப்பர்களையும் மட்டுமே கொண்டு வேயப்பட்டிருந்தன அந்தச் சின்னஞ்சிறு குடிசைகள். அவற்றின் அருகே எரிந்துபோன பழைய குடிசைகளின் எச்சங்கள் இன்னும் காணப்படுகின்றன.

இருளர் சமூக மக்களில் ஒருவரான ராதா என்ற பெண்மணியிடம் பேசினோம்.

``இந்த ஊர்ல சுமார் 70 வருஷத்துக்கு மேலாக இருக்கிறோம். அப்போ, ரோட்டுக்கு அந்தப் பக்கம் எங்க மக்கள் இருந்திருக்காங்க. ஊர்க்காரங்க சிலர், அங்கிருந்து காலி பண்ணச் சொன்னதால இந்த ஏரிப் பகுதியில் வசிக்கத் தொடங்கிட்டாங்க. எல்லோரும் குடிசை போட்டுத்தான் வசிச்சுக்கிட்டு வந்தோம். கழனிக் காட்டுல கூலி வேலைக்குக் கூப்பிட்டால் போவோம். இல்லாட்டி செங்கல் சூளை வேலைக்குத்தான் போவோம். 25.12.2020 அன்று ராத்திரி எங்க குடியிருப்பில் இருந்த 14 குடிசைகளும் திடீரென தீப்பிடித்து எரிஞ்சு சாம்பலாகிடுச்சு. குடிசையில் இருந்த எல்லா உடைமைகளும் கருகிப்போயிடுச்சு. மொத்தம் இருந்த 20 குடும்பங்களும் என்ன செய்யறதுன்னே தெரியாம தவிச்சு நின்னோம். அப்போ கலெக்டர், தாசில்தார், மனேகார், ஆர்.ஐ., எம்.பி., கட்சிக்காரங்கனு எல்லாரும் வந்து பார்த்துட்டு ஆறுதல் சொன்னாங்க. ஆனா, இதுவரைக்கும் எங்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

கொஞ்ச நாளிலேயே வேறு இடத்தில வீட்டுமனைப் பட்டா தருவதற்கு ஏற்பாடு பண்ணுறதாக அப்போ இருந்த கலெக்டர் சொல்லிட்டுப் போனாரு. கொஞ்சநாள் கழிச்சு, எங்க கிராமத்துல இருக்குற அரசு அதிகாரிகள் வந்து எங்களுக்கு பட்டா கொடுக்கத் தேர்ந்தெடுத்த இடத்தைக் காட்டினாங்க. பெரிய ஏரிக்குத் தண்ணீர் போகுற ஓடைக்குப் பக்கத்துல அந்த இடம் இருந்துச்சு. அங்கே ஓடை மட்டுமில்லை, மூணு பக்கத்துலயும் சுமார் 400 அடி ஆழம்கொண்ட குவாரிப் பள்ளங்கள் இருக்கிற இடம் அது. அதுல தண்ணீர் நிரம்பி இருந்துச்சு. சின்னச் சின்ன குழந்தைகளை வெச்சுக்கிட்டு இருக்கிறோம். அதனால, அங்கே வாழ பயந்துகிட்டு மாற்று இடம் கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தோம்.

ராதா
ராதா

மாற்று இடம் பார்த்துத் தரும்படி கலெக்டர் பதில் லெட்டர் அனுப்பினார். அப்பவும் எந்தப் பயனும் இல்லை. 02.02.2021 அன்று, இலவச வீட்டுமனைப் பட்டாவை வழங்கும்படி கோரிக்கைவெச்சு குடும்பத்தோடு உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டோம். வானூர் தாசில்தார் அதிகாரி அன்றைய தினமே வந்து, 8 கி.மீ தொலைவில் இருக்கிற ஒரு இடத்தை எங்களுக்குப் பட்டா கொடுப்பதற்குக் காமிச்சாங்க. அந்த இடத்துக்குப் பக்கத்துலயும் பெரிய குவாரி பள்ளம் இருக்குது. சின்னச் சின்னப் பள்ளங்களும் இருக்குது. பக்கத்துல குவாரி வேலை நடக்குது. அங்கு வெடிவெச்சா கல்லு அந்த இடத்துல வந்து விழும். லாரிகள் போய்க்கிட்டும் வந்துக்கிட்டும் இருக்குறதால, ஒரே புழுதி மண்ணு எப்பவும்ம் வீசிக்கிட்டு இருக்கும். குவாரிகாரர் ஒருத்தர், ``பக்கத்துல குவாரி வேலை நடத்த எங்களுக்கு அனுமதி கொடுத்திருக்காங்க"னு சொன்னாரு. இவ்வளவு பிரச்னை அங்கு இருந்ததோடு, தொலைவில் இருப்பதால் எங்க வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக இருக்கு.

வாழத் தகுதியான இடத்தைக் காட்டும்படி கலெக்டருக்கு மனு கொடுத்தோம். `நல்ல இடம் இருந்தால் காட்டுங்கள்’ என்றாா்கள். எங்கள் கவனத்துக்கு தெரிஞ்ச மூணு இடத்தையும் அந்த மனுவுல தெரிவிச்சிருந்தோம். கலெக்டர்கிட்ட இருந்து இந்த லெட்டரும் வந்துச்சு. அதை எடுத்துக்கிட்டு வானூர் தாசில்தாரைப் பார்க்கப் போனோம். 'இந்த ஊரிலேயேதான் இடம் வேணும்னு எப்படி நீங்க கேக்கறீங்க... யார் கொடுக்குற தைரியம்' அப்படினு பேசினாரு. அப்புறமா ஒரு லெட்டரைக் கொடுத்து திண்டிவனம் தாலுகா ஆபீஸ்ல போய்ப் பார்க்கச் சொன்னாரு. இந்த மாதிரி ஒரு தடவை... இரண்டு தடவை இல்லை. பல தடவை லெட்டர் கொடுத்திருக்கோம். அப்போதைய கலெக்டரும் தாசில்தாரும், 'இவரைப் போய் பாருங்க' அப்படின்னு ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்திச் சொல்லிக்கிட்டாங்க. இன்னிக்கு வரைக்கும் நடவடிக்கை இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எங்களுக்கு ரேஷன் கார்டு, ஏரி வேலை அட்டை, ஓட்டர் கார்டு எல்லாம் இருக்கு. வீடு எரிஞ்சப்போ அஞ்சு பேருடைய ஏரி வேலை அட்டை சுத்தமா எரிஞ்சு போச்சு. அவங்களுக்கு இப்போ ஏரி வேலை இல்லைனு சொல்லுறாங்க. புது ஏரி வேலை அட்டையை கேட்டால்... 100 ரூபா லஞ்சம் கேட்கிறாங்க. அன்றாடக் கூலி வேலைக்குப் போனாதான் எங்களுக்கு வாழ்க்கை போகும். எங்ககிட்ட காசு கேட்டா நாங்க என்ன பண்ணுறது... வாய் பேச முடியாத ஒருத்தவங்களுடைய மாற்றுத்திறனாளி அட்டையும் எரிஞ்சு போச்சு. அதையும் கேட்டா தர மாட்டேங்குறாங்க. அதனால அவங்களுக்கு வர்ற உதவித்தொகையும் பாதிக்குது. நிரந்தரமில்லாத இந்தச் சின்னக் குடிசை ஒவ்வொண்ணுலயும் வேறு வழியில்லாம இரண்டு மூன்று குடும்பங்கள் ஒன்றாகவே வசிக்கிறாங்க. எங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை அரசு வழங்கணும். நாங்களும் மனுஷங்கதானே..! எங்களுக்கான வீட்டுல வாழணும்னு எங்களுக்கும் ஆசை இருக்கு. பக்கத்துல பரங்கணி என்ற ஊரில் எங்களை மாதிரி ஆளுங்களுக்கு அரசு வீடு கட்டிக் கொடுத்திருக்காங்க. எங்களுக்கு ஏனோ வீட்டுமனை தர மாட்டேங்குறாங்க" என்றார் வேதனையோடு.

இது தொடர்பாக, பழங்குடி இருளர் மக்களின் உரிமைகளுக்காகப் போராடிவரும் மனித உரிமைகளுக்கான சமூகச் செயற்பாட்டாளரும், முன்னாள் பேராசிரியருமான கல்யாணியிடம் பேசினோம்.

"வீடுகள் எரிந்து, பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு ஆட்சியர் உறுதி அளித்திருந்தும் தற்போதுவரை இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்படாமல் உள்ளது. அரசு அதிகாரிகள் காண்பித்த இரண்டு இடங்களின் அருகே குவாரிப் பள்ளங்களாக இருப்பதால், அந்த மக்கள் வாழ்வதற்குத் தகுந்த இடங்களாக அவை இல்லை. கரசானூர் அருகேயுள்ள மேட்டாங்குளம் பகுதியில் புறம்போக்கு நிலம் ஒன்று தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. அதேபோல், கரசானூர் எல்லைக்குட்டை எனச் சொல்லப்படும் இடத்துக்கு அருகிலும் இடவசதி உள்ளது. மாவட்ட ஆட்சியர் நினைத்தால், இந்த இடங்களைப் பரிசீலனை செய்து இலவச வீட்டுமனைப் பட்டாவை அவர்களுக்குத் தரலாம்.

அதுமட்டுமன்றி, பெரும்பாக்கம் - கரசானூர் எல்லைப் பகுதி அருகே, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட 19.69 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்திலும் இந்த மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவை அரசு வழங்கலாம். இந்தப் பெரிய இடத்தில் இவர்களுக்கு மட்டுமன்றி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீட்டுமனை இன்றி கஷ்டப்பட்டுவரும் இருளர் சமூக மக்களுக்கு அரசு அதிகாரிகள் வரையறுத்துத் தரலாம். இந்த மூன்று இடங்கள் மட்டுமன்றி, இந்த மக்கள் வாழத்தகுந்த, ஊரை ஒட்டிய ஏதேனும் ஓரிடத்தில் மாவட்ட ஆட்சியர் இலவச வீட்டுமனை கொடுத்து உதவ வேண்டும்" என்றார்.

விழுப்புரம்: பழைமையான கோயில் சிவலிங்கத்தை உடைத்த அறங்காவலர் கைது! - 2 பிரிவுகளின் கீழ் வழக்கு

இது தொடர்பாக விளக்கம் கேட்க, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் அவர்களைத் தொடர்புகொண்டு விவரத்தைக் கூறினோம். சம்பந்தப்பட்ட வானூர் தாசில்தாரிடம் பேசிய ஆட்சியர், ``திருவக்கரைப் பகுதியில் சாலை அருகிலேயே இடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அந்த மக்களுக்குத் தகுந்த இடமாக இருக்கிறதா என்று பார்ப்போம். இல்லையெனில், நானே மாற்று இடம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன். முன்னதாகவே மாற்று இடத்தைப் பரிசீலனை செய்துவைக்கச் சொல்கிறேன்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்.

நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட இடம் தொடர்பாகவும் தாசில்தாாிடம் பேசுகிறேன். வரும் புதன், வியாழன் கிழமைகளில் நானே அந்த இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, அந்த மக்கள் அனைவரும் வாழத் தகுதியான இடத்தில் பட்டா கொடுக்க ஏற்பாடு செய்கிறேன். உடன், வீடுகட்டிக் கொடுப்பதற்கும் முயற்சி எடுக்கிறேன். ஐந்து நபர்களுக்கு ஊரக வேலை அட்டை மற்றும் மாற்றுத்திறனாளி அட்டையை உடனே தரும்படி கூறுகிறேன்" என்றார்.

இன்று (31.07.2021) காலையில் நம்மைத் தொடர்புகொண்ட கரசானூர் இருளர் சமூகப் பெண்மணி ராதா, "ஏரி வேலை அட்டை எரிந்து போனவர்களுக்கு புது அட்டையை உடனே வழங்குவதாகக் கூறி, கிராமத்துல இருக்கிற அதிகாரிங்க போட்டோ வாங்குவதற்காக வந்திருக்காங்க. உங்களுக்கும், கலெக்டர் சாருக்கும் நன்றி.

அதேபோல, வீடுகள் இன்றித் தவித்துவரும் எங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் கருணை கூர்ந்து விரைவாக இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு