Published:Updated:

`இன்னும் ஒரு வாரத்துல சாதிச் சான்றிதழ் கிடைக்கலைன்னா..!’ - கலங்கும் பழங்குடி மாணவர்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

``இதற்கு முன்பாகச் சில மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் போனதால், `அடுத்த வருடம் சான்றிதழ் கிடைத்துவிடும்' என எண்ணி கிடைத்த வேலைக்குச் சென்றுவிட்டனர். அதனால், மீண்டும் படிக்க முடியால்போன பல மாணவர்களைப் பார்த்திருக்கிறோம். அதே நிலமை வரவே கூடாது."

அடிப்படை உரிமைகளுக்காகப் போராடும் சூழலுக்கு பெரிய அளவில் தள்ளப்பட்டவர்கள் பழங்குடிச் சமூகத்தினர். அப்படிப்பட்ட பழங்குயினர் சமூக மக்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஆங்காங்கே வசித்துவருகின்றனர். சாதிச் சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களின் வாயிற்படியில் பலமுறை ஏறியும் சான்றிதழ் கிடைக்காமல் தவித்துவந்த 101 பழங்குடியின மாணவர்களுக்கு அண்மையில் சாதிச் சான்றிதழ் வாங்கியிருந்தார் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன். இந்தச் செயல் பலரது பாராட்டையும் பெற்றது. அப்படியிருக்க, மேற்படிப்பு படிப்பதற்கு ஆசை இருந்தும் `இன்னும் ஏழு தினங்களுக்குள் சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லையெனில் எங்களது கல்லூரிப் படிப்பே கேள்விக்குறிதான்' என வருந்துகின்றனர் 12-ம் வகுப்பு முடித்துவிட்டுக் காத்திருக்கும் பழங்குடியின மாணவர்கள் சிலர். பழங்குடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த அந்த ஆறு மாணவர்களுக்கும் சாதிச் சான்றிதழ் இல்லாததால், கல்லூரிப் படிப்புக்கு விண்ணப்பிக்க முடியாமல், அவர்கள் அரசு அதிகாரிகளின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தங்கள் சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாகக் கூறும் அவர்கள், அதன் நகல்களை அதிகாரிகளுக்கு அளித்த மனுக்களில் இணைத்துக் கொடுத்துள்ளனர். ஆனால், தங்களுக்குச் சாதிச் சான்றிதழ் இல்லை என மனம் வருந்துகின்றனர்.

மிஸ்டர் கழுகு: ரெய்டு அச்சம்! - வழக்கறிஞர் படையுடன் வலம்வரும் மாஜி!
அருண்குமார் - அரவிந்த் - ராம்குமார்
அருண்குமார் - அரவிந்த் - ராம்குமார்

ஆறு மாணவர்களில் ஒருவரான ராஜேஷ் என்பவரிடம் இது குறித்துப் பேசினோம். ``நான் வானூர் வட்டத்திலுள்ள கூத்தப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவன். அப்பா, அம்மா படிக்காதவங்க. கூலி வேலைக்குப் போய்த்தான் எங்களைப் படிக்கவெக்கிறாங்க. எங்க வீட்டுல நானும் என்னுடைய அண்ணனும் மட்டும்தான். நான் பத்தாவது படிச்சப்போ ஸ்கூல்ல சாதிச் சான்றிதழ் கேட்டாங்க. ஆனா, வானூர் தாலுகா ஆபீஸ்ல கையெழுத்து வாங்கி விழுப்புரத்துல இருக்கும் ஆர்.டி.ஓ ஆபீஸ்ல கொடுத்தோம். கொஞ்ச நாள் கழிச்சு சான்றிதழ் கேட்டபோது, அந்த மனுவைச் தொலைச்சுட்டதாகச் சொன்னாங்க. மறுபடியும் மனு கொடுத்திருந்தோம். ஆனா, சாதிச் சான்றிதழ் கிடைக்கலை. பத்தாவது வரை எங்க ஊரில் இருக்கும் அரசுப் பள்ளியில் படிச்சேன். 12-ம் வகுப்பை திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருக்கும் அரசு உதவி பெறும் பள்ளியில் (உயிரி-கணிதம்) படிச்சேன். 12-வதுல 496.81 மார்க் எடுத்தேன். எனக்கு பி.ஏ (BA) தமிழ் படிக்கணும்னு ஆசை. காலேஜுக்கு அப்ளிகேஷன் போடலாம் அப்படின்னு பார்த்தா சாதிச் சான்றிதழ் இல்லை. அப்ளிகேஷன் போடுறதுக்கு இன்னும் ஒரு வாரம்தான் டைம் இருக்கு. 10.08.2021-தான் கடைசி தேதி. கொஞ்ச நாள்தான் இருக்கிறதால சாதிச் சான்றிதழ் வேணும்னு கேட்டு வெவ்வேறு ஊரைச் சேர்ந்த நாங்க நாலு பேர் கடந்த 28-ம் தேதி விழுப்புரம் கலெக்டரை நேரில் சந்தித்தோம். எங்களை விசாரிச்ச கலெக்டர் சார், விசாரணை நடத்தி சான்றிதழ் தரேன்னு சொன்னாரு. ஆனா, எந்த அதிகாரியும் விசாரணை பண்றதுக்கு வரலை. இந்த வாரத்துல எங்களுக்குச் சாதிச் சான்றிதழ் கிடைக்கலைன்னா... நாங்க மேற்படிப்பு படிக்கிறது கேள்விக்குறிதான்" என்றார்.

இது குறித்து சமூக செயற்பாட்டாளர் சகோதரி லூசினாவிடம் பேசினோம்.

``நாங்க சுமார் 26 வருஷமா இருளர் சமூக மக்களோடு பழகி பணிசெய்துவருகிறோம். அவர்களுக்குச் சாதிச் சான்றிதழ் கிடைப்பது ஒவ்வொரு முறையும் கடினமான ஒன்றாக இருந்துவருகிறது. இந்த மாணவர்களைப்போல இதற்கு முன்பாக 12-ம் வகுப்பு முடித்த சில மாணவர்கள் சிலருக்குச் சாதிச் சான்றிதழ் கிடைக்காமல் போனதால்... `அடுத்த வருடம் சேர்ந்து படித்துக்கொள்ளலாம்' என எண்ணி கிடைத்த வேலையை நோக்கிச் சென்றார்கள். ஆனால், மீண்டும் படிக்க முடியாமல் ஒரே வருடத்தில் அவர்களின் வாழ்க்கையே வேற மாதிரி மாறியதைப் பார்த்திருக்கிறோம். படிப்பதற்கு ஆசைகொண்ட அந்த மாணவர்களின் வாழ்க்கை அப்படி ஆகும்போது மிகவும் மன வருத்தமாக இருக்கும். சாதிச் சான்றிதழ் இன்றி இருக்கும் 20 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடி இருளர் சமுதாய மாணவர்களின் விவரங்கள் உள்ளன. பல வருடங்களாக சாதிச் சான்றிதழ் வேண்டி கோரிக்கை வைத்துவருகின்றனர். அந்த 20 குடும்பங்களுக்கு உட்பட்ட ஆறு மாணவர்கள் தற்போது 12-ம் வகுப்பு முடித்திருக்கிறார்கள். அனைவருக்குமே மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. எல்லா மாணவர்களும் 600-க்கு 400 மதிப்பெண்களுக்கு மேல்தான் பெற்றிருக்கிறார்கள்.

நந்தினி - ஐஸ்வர்யா - ராஜேஷ்
நந்தினி - ஐஸ்வர்யா - ராஜேஷ்

இவர்கள், கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்றால் இன்னும் ஒருவார காலம்தான் இடைவெளி இருக்கிறது. விண்ணப்பிப்பதற்கு சாதிச் சான்றிதழே தடையாக இருக்கிறது. கடந்த 28-ம் தேதி நான்கு மாணவர்கள் மாவட்ட ஆட்சிரை நேரில் சந்தித்து கோரிக்கையை முன்வைத்திருக்கிறார்கள். நேற்று (02.08.2021) இரண்டு மாணவர்கள் கோரிக்கையை முன்வைப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றிருக்கிறார்கள். அண்மையில் மாவட்ட ஆட்சியர் பழங்குடியினர் சமூகத்தினர் 101 நபர்களுக்கு சாதிச் சான்றிதழ் கொடுத்திருந்தார். அது வரவேற்கத்தக்கது. 12-ம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரி செல்லத் துடிக்கும் இது போன்ற மாணவர்களையும் உரிய பரிசீலனை செய்து சாதிச் சான்றிதழ் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

Vikatan

இது குறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகனிடம் பேசினோம். "உரிய விசாரணை மேற்கொண்டு, உறுதி செய்து ஓரிரு தினங்களில் அந்த மாணவர்களுக்கு சாதிச் சான்றிதழ் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு