Published:Updated:

`வரப்புதான் பாதை; 108-க்கு வழி இல்லை!'- பழங்குடியின பெண் சாமந்திக்கு நடந்த சோகம்!

சாமந்தியின் உடலைச் சுமந்து செல்லும் மக்கள்..
சாமந்தியின் உடலைச் சுமந்து செல்லும் மக்கள்..

இளம்பெண் சாமந்தியின் மரணம், ஒரு ஊருக்கு சாலை வசதி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திச் சென்றிருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஊராட்சிக்குட்பட்ட ஜக்காம்பேட்டையில் 12 குடும்பங்கள் கொண்ட இருளர் குடியிருப்பு அமைந்துள்ளது. திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்திலிருந்து சுமார் 250 மீ தொலைவில்தான் இந்தக் குடியிருப்பு பகுதி உள்ளது. சப் கலெக்டர் அலுவலகம் பக்கத்தில் அமைந்துள்ள குடியிருப்புப் பகுதி என்றாலும் இங்கு மின்சார வசதி கிடையாது. சாலை வசதியைப் பற்றி சொல்லவே வேண்டாம். சுற்றியுள்ள வயல்களில் இருக்கும் ஒத்தையடிப் பாதையையும், வரப்புகளையும்தான் இங்குள்ள மக்கள் சாலையாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

சாமந்தியின் குடும்பம்
சாமந்தியின் குடும்பம்

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பெரும்பாலான இருளர் குடியிருப்புப் பகுதிகளில் சாலை, குடிநீர், மின்சாரம் என எந்த அடிப்படை வசதிகளும் இருக்காது என்பது எழுதப்படாத விதி. ஜக்காம்பேட்டை அதற்கு விதிவிலக்கல்ல. அண்மையில் இங்கு  நிகழ்ந்த ஒரு மரணம், சாலை வசதி ஒரு ஊருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்திச் சென்றிருக்கிறது.

ஜக்காம்பேட்டையைச் சேர்ந்த 29 வயது பெண் சாமந்திக்கு சிறிய வயதிலேயே திருமணம் நடந்துவிட்டது. தற்போது அவருக்கு  5 குழந்தைகள். முதல் மகன் 5-ம் வகுப்பு படிக்கிறான். இரண்டாவது மகள் 3-ம் வகுப்பு, மூன்றாவது மகளுக்கு 4 வயது, நான்காவது குழந்தைக்கு இரண்டரை வயது. கடைசி குழந்தைக்கு 1 வயது.  ஊட்டச்சத்து குறைபாட்டால் சாமந்தி பல மாதங்களாக நரம்பு தொடர்பான பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவம் பார்க்க வழியில்லை. டிசம்பர் மாத இறுதியில் உடல்நிலை மோசமாகிவிட, பயந்துபோன குடும்பத்தினர், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க ஆலோசகரான ராஜேஷுக்கு போன் செய்துள்ளனர். அதன்பிறகு நடந்தவற்றை ராஜேஷ் விவரிக்கிறார்.

பூபாலன்
பூபாலன்

``எனக்குக் கடந்த டிசம்பர் மாதம் 24 -ம் தேதி மாலை ஜக்காம்பேட்டை மக்களிடம் இருந்து போன் வந்துச்சு. `சாமந்தி காலையில் இருந்து ரொம்ப உடம்புக்கு முடியாம இருக்கு. என்ன செய்யுறது தெரியல’-ன்னு சொன்னாங்க. நான் உடனே 108-க்கு போன் பண்ணி முகவரி சொல்லி போகச் சொன்னேன். நான், பேராசிரியர் கல்யாணி அய்யா எல்லாரும் அங்க கிளம்பி போயிட்டோம். வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள பகுதிங்கிறதால அங்க ஆம்புலன்ஸ் போகமுடியாது. அதன்பிறகு ஊர் சத்துணவுக் கூடம் வரைக்கும் கயிற்றுக் கட்டிலில் படுக்கவெச்சு நாலு பேர் தூக்கிட்டுப் போனாங்க. அங்கிருந்து ஆம்புலன்ஸ்'ல அரசு மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போனாங்க. அங்கு சாமந்திக்கு உடல் நிலை ரொம்ப மோசமானதால வேறு மருத்துவமனைக்கு எழுதிக் கொடுத்தாங்க. செயற்கை சுவாசம் கொடுத்தாங்க. ஆனா சிகிச்சை பலனில்லாமல் சாமந்தி இறந்துட்டாங்க. சீக்கிரமா ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போயிருந்தா சாமந்தி உயிரைக் காப்பாத்தியிருக்கலாம். ரோடு வசதியில்லாததால, இப்ப அந்தப் பொண்ணோட வாழ்க்கை மட்டும் இல்லாம 5 குழந்தைங்களோட வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாயிடுச்சு.

`மதுப் பழக்கம், போதைப் பொருள் சகவாசம்!' -அதிகாலையில் கணவனால் மனைவிக்கு நேர்ந்த கொடூரம்

இறந்த உடலையும் ஜக்காம்பேட்டைக்குக் கொண்டுவர வழியில்லை. ஊருக்கு வெளியே உள்ள ஒரு ஹோட்டல் பக்கத்துல உடலை இறக்கி வச்சிட்டு வேன் போய்டுச்சு. அப்புறம் அங்கிருந்து கயிற்றுக் கட்டிலில் வச்சு தூக்கிட்டு வந்தாங்க. உடலைப் புதைக்க மயானத்துக்குக் கொண்டு போறதிலும் சிக்கல். விளை நிலங்கள் வழியாதான் கொண்டு போயாகணும். நான், தோழர் சுப்பு, வழக்கறிஞர் பூபால் ஆகியோர் சேர்ந்து வயல் உரிமையாளர்கள்கிட்ட பேசி பிரச்னை வராம சுமுகமா சாமந்தி உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு பண்ணினோம்.

சாமந்தியின் உடலை கொண்டு செல்லும் மக்கள்..
சாமந்தியின் உடலை கொண்டு செல்லும் மக்கள்..

இறப்புக்குப் பிறகும் சாமந்தி படாதபாடு பட்டுட்டாங்க. அந்த குழந்தைகளுக்கு `அருட்சகோதரி’ உதவியோடு கல்வி, உணவு, உறைவிடம் கிடைக்க ஏற்பாடு செஞ்சிருக்கோம். இங்குள்ள மக்களுக்கு மருத்துவம், கல்வி குறித்த போதுமான விழிப்புணர்வு இல்ல. முதலில் சாதிச் சான்றிதழ் கிடைக்கணும். அது கிடைச்சாலே இவங்களுக்குக் கிடைக்க வேண்டிய அடிப்படை விஷயங்கள் படிப்படியா கிடைக்க ஆரம்பிச்சுடும்’’ என்று முடித்தார் ஆதங்கத்துடன்.

இந்தச் சம்பவம் குறித்து திண்டிவனம் சப் கலெக்டர் எஸ். அனுவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதா என்பதை பற்றிக் கேட்க அவரை தொலைபேசியில் தொடர்புகொண்டோம். வாட்ஸ்அப்பில் சாமந்தி மரணம் குறித்த செய்தியையும் அனுப்பி வைத்தோம். ``நான் அந்தப் பகுதியை ஆய்வுசெய்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிவேன். சீக்கிரமே தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன்’’ என்று உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

சாமந்தியின் உடலைக் கொண்டு செல்லும் மக்கள்..
சாமந்தியின் உடலைக் கொண்டு செல்லும் மக்கள்..

நிலவின் மறுபக்கத்தை ஆராய விண்கலம் அனுப்பும் அதே தேசத்தில்தான், இளம் பெண் உயிருக்குப் போராடுகையில் ஆம்புலன்ஸ் வருவதற்குக் கூட வழியில்லாமல் உயிரிழக்கும் அவலமும் அரங்கேறி வருகிறது. உயிர்பறிபோன பிறகும் இறந்த உடலோடு அலைந்த பரிதாபம் ஜக்காம்பேட்டை இருளர் மக்களின் வாழ்வில் நிகழ்ந்திருக்கிறது.

வட மாநிலங்களில்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும். சுகாதாரக் கட்டமைப்பில் இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் முன்னணியில் இருக்கிறது என பெருமைப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், அது அனைத்து மக்களுக்கும் போய்ச்சேருகிறதா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான். இனியாவது, அதற்குத் தடையாக இருப்பது என்னவெனக் கண்டறிந்து சரியான நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்க வேண்டும். இனியொரு சாமந்தியின் உயிர் போகாமல் காக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு