Published:Updated:

``குழந்தை பசியில அழுவுது; பிஸ்கட் மட்டும்தான் சாப்பாடே!” - தவிக்கும் இருளர் மக்களின் நிலை

இருளர் மக்கள்
News
இருளர் மக்கள்

"நீங்களெல்லாம் எங்க ஊருக்குள்ள வரக்கூடாது. நீங்க இருக்கிற இடத்துக்கே போயிடுங்க...’ன்னு அங்கிருக்கிற மக்கள் சொல்லிட்டாங்க. எங்களுக்கு ரொம்பவே சங்கடமா போயிடுச்சு."

கடல் அலைகளின் ஓசை இடைவிடாமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஆள் நடமாட்டம் ஏதுமில்லாமல், அந்தப் பகுதி நிசப்தமாகக் காட்சியளிக்கிறது. வருடும் மென் காற்றின் இனிமையை அங்கிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் வாழும் இருளர் குடியிருப்புப் பகுதியிலும் உணர முடிகிறது. ஆனால், அங்கு வாழும் மக்களின் முகத்தில் சோகம் ததும்பி நிற்கிறது. தங்கள் துயரங்களைக் செவிகொடுத்துக் கேட்க யாராவது வரமாட்டார்களா என ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர் அந்த இருளர் சமூகத்து மக்கள்.

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

கடலூர் மாவட்டம் பிச்சாவரம் அருகேயுள்ள கிள்ளையைச் சேர்ந்தவர்கள், பிழைப்புக்காக நாடோடிகளாகச் செல்வது வழக்கம். இவர்கள் மீனவர்கள் என்பதால், கடற்கரைப் பகுதிகளையே அதிகம் நாடிச் செல்கின்றனர். அப்படித்தான், ஒன்றரை மாதத்துக்கு முன்பு திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகிலுள்ள குளத்துமேடு கலைஞர் நகருக்கு வந்திருக்கிறார்கள். அங்குள்ள இருளர் மக்களின் குடியிருப்பிலேயே இவர்களும் தங்கி வேலை செய்துள்ளனர். கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் இங்கேயே மாட்டிக்கொண்டனர். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத பகுதி. அங்கு பயன்படுத்தப்படாமல் இருக்கும் ஓலைக் கீற்று கூடாரங்களில் தங்கியுள்ளனர். அதில் இருவர்கூட தூங்குவதற்கு இடம் போதாது. எனவே, குழந்தைகளுடன் வாசலில்தான் இரவில் தூங்குகின்றனர். கடும்சேதாரத்துடன் இருக்கும் அந்தக் கூடாரங்களில்தான், பல்வேறு குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர் தங்கியுள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த மக்கள் இங்கே தவிப்பில் இருக்க, சொந்த ஊரில் மனைவி, குழந்தை, பெற்றோர்களும் சிரமத்தில் கண்ணீருடன் தவிக்கின்றனர், இவர்களின் வருகையை எதிர்பார்த்து. அவர்களிடம் பேசத் தொடங்கியதுமே, அழுகையுடன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்க்கின்றனர். மறுபுறம் இளம் பெண்கள் சிலர் இடுப்பில் குழந்தைகளுடன் நிற்கின்றனர். அவர்களுடனான உரையாடல் முடிந்த பிறகும்கூட, பசியில் தவிக்கும் குழந்தைகளின் அழுகுரல் மட்டும் நின்றபாடில்லை. கடல் அலைகளின் ஓசையையும் அந்தச் சூழலையும் ரசிக்க முடியாதவாறு, இந்த இருளர் சமூக மக்களின் புலம்பல் மனதை ரணமாக்குகின்றன.

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

``பிச்சாவரம் பக்கத்துல இருக்கிற கிள்ளை எம்.ஜி.ஆர் நகர் எங்க பூர்வீகம். சுத்துவட்டாரத்துல சில இருளர் குடியிருப்புகள் இருக்கு. அங்க எங்க குடியிருப்புல மட்டும் 132 குடும்பங்கள் இருக்கு. ஆம்பளைங்க பெரும்பாலும் மீன் பிடிக்கப் போவோம். பொம்பளைங்க காட்டு வேலை, விவசாய வேலைக்குப் போவாங்க. எங்க ஊர்ல எப்போதும் நிரந்தரமான வேலை இருக்காது. சாப்பாட்டுக்கே சிரமப்படும் எங்களுக்குனு சொந்தப் படகெல்லாம் கிடையாது. அதனால யாராச்சும் மீன் பிடிக்கக் கூப்பிட்டா போவோம். இல்லைனா, நாங்களா சிலர்கிட்ட வேலை கேட்டுப் போவோம். அங்க, வேலை இருக்கிறதைப் பொறுத்து 10 நாள்ல இருந்து ஒரு மாசம் வரைக்கும்கூட தங்குவோம். அப்புறம் வீட்டுக்குப் போய் மளிகைச் சாமானெல்லாம் வாங்கிப் போட்டுட்டு, குடும்பத்தோடு சில நாளு இருந்துட்டு மறுபடியும் வேலைக்கு வந்திடுவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்ப இருக்கிற குளத்துமேடு கலைஞர் நகர் பகுதிக்குப் பக்கத்துலயே எங்களுக்குத் தெரிஞ்ச மீனவர்கள் இருக்காங்க. கூடவே எங்க இருளர் சமூகத்து மக்களும் இருக்காங்க. அதனால, அடிக்கடி இங்க வந்து மீன் பிடிப்போம். பெரிய படகுல 50 பேருக்கு மேல மீனவர்கள் போவாங்க. ஒவ்வொரு படகுலயும் நாங்க கொஞ்சம் பேரு போவோம். கடலுக்குள்ள சில நாள்கள் இருந்து மீன் பிடிப்போம். இந்த வேலையில கிடைக்கிற சில 100 பணத்தை வெச்சுதான் குடும்பத்தை ஓட்டுவோம். அப்படித்தான் ஒன்றரை மாசத்துக்கு முன்னாடி இங்க வந்தோம்” என்று கலக்கத்துடன் கூறுகிறார் குமார்.

அவர்களுடனான உரையாடல் முடிந்த பிறகும்கூட, பசியில் தவிக்கும் குழந்தைகளின் அழுகுரல் மட்டும் நின்றபாடில்லை. கடல் அலைகளின் ஓசையையும், அந்தச் சூழலையும் ரசிக்க முடியாதவாறு, இந்த இருளர் சமூக மக்களின் புலம்பல் மனதை ரணமாக்குகின்றன.

இங்குள்ள 50 பேரில் குமாரின் மனைவி உட்பட எட்டுப் பேர் பெண்கள். எட்டுக் குழந்தைகளும் உள்ளனர். ஆண்கள் மீன் பிடிக்கவும், பெண்கள் சமையல் வேலை முடிந்ததும் இறால் விற்பனைக்கும் சென்றுள்ளனர். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் இங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டாலும், தண்ணீர், உணவு, கழிப்பிட வசதி உட்பட எந்த அடிப்படைத் தேவைகளும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.

குமார்
குமார்

அந்த வேதனைகளைக் கண்ணீருடன் கூறும் குமார், ``எனக்கு அஞ்சு புள்ளைங்க. ஊர்ல என்னோட இருக்காங்க. அவங்களால அஞ்சு கொழந்தைங்களையும் பார்த்துக்க முடியாதுனு, ரெண்டு பேரை எங்ககூடவே கூட்டிகிட்டு வந்தோம். இப்படித்தான் இங்க இருக்கிற எல்லோருமே அவங்க குழந்தை, சம்சாரம், பெத்தவங்களை ஊர்ல விட்டுட்டு இங்க வந்திருக்காங்க.

எங்க ஊர்ல இருக்கிற அவங்க எல்லோருமே நாங்க இல்லாம தனியா சிரமப்படுறாங்க. `ஊருக்கு வந்திடுங்க’ன்னு தினமும் போன் பண்ணி கதறி அழுவுறாங்க. என்னோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். `என்னால நடக்கக்கூட முடியலை. கொழந்தைங்க பசிக்குதுனு எங்கயாச்சும் ஓடிடுதுங்க. இந்த நேரத்துல நாங்க தனியா இருக்கவே பயமா இருக்கு’ன்னு அம்மா புலம்பறாங்க. அவங்களுக்கெல்லாம் சாப்பாடு கொடுக்கவாவது நாங்க போயாகணும்.

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

இங்க நாங்களும் நிம்மதியாவே இல்லை. நாங்க வர்றப்போ வூட்டுல இருந்து கொண்டுவந்த மளிகைப் பொருள்களைக் கொஞ்சம் கொஞ்சமா பயன்படுத்தினோம். அதுவும் தீர்ந்துப்போச்சு. பக்கத்துல இருக்கிற இருளர் மக்கள்தான் எங்களுக்குக் கொஞ்சம் ரேஷன் அரிசி கொடுத்து உதவுறாங்க. இருக்கிறதை வெச்சு சமைச்சுச் சாப்பிட்டுகிட்டு இருக்கோம். ஆனா, ஒருவேளைக்குகூட எங்களால நல்ல சாப்பாடு சாப்பிட முடியலை.

"எங்களுக்குச் சாப்பிட, தங்கக்கூட யாரும் உதவாட்டியும் பரவாயில்லை. ஆனா, எப்படியாச்சும் ஊர்ல இருக்கிற குடும்பத்தோடு எங்களைச் சேர்த்துவிட்ருங்க. புண்ணியமா போகும்."
முனியம்மாள்

பாத்ரூம் வசதியும் இல்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க ஆம்பளைங்க மரத்தடியில ஒதுங்குறோம். பொம்பளைங்க பாடுதான் பாவமா இருக்கு” என்பவரை இடைமறிக்கிறது அங்கு குழுமியிருக்கும் கூட்டத்திலுள்ள ஒரு பெண்ணின் இரண்டு வயதுக் குழந்தையின் அழுகுரல்.

“கொழந்தைக்கு பிஸ்கட் ஏதாச்சும் கொடு” என்றவாறு பேசுகிறார் முனியம்மாள். “காலையில டீயும், பிஸ்கட்டும்தான் எங்களுக்குச் சாப்பாடு. அதனாலதான் பசியில குழந்தை அழுது. ரேஷன் அரிசி கிலோ 30 ரூபாய்க்கு வாங்கினோம். அதுலதான் இப்போ சோறோ, கஞ்சியோ செய்றோம். கொரோனா சரியாகற வரைக்கும் எங்களையெல்லாம் இங்கயே இருக்கணும்னு சொல்றாங்க. இங்க சுத்தியும் முள்ளு காடா இருக்கு. வெயிலுக்கு நிழல்ல உட்காரக்கூட இடவசதியில்லை. கூடாரத்துக்குள்ளயே கொஞ்சநாள் அடைஞ்சிருக்கலாம். ஆனா, ஒன்றரை மாசமா அடைஞ்சிருக்கிறது நியாயமா? வெயில்லயே சாப்பாடு செஞ்சுகிட்டு, பாதுகாப்பு இல்லாம பொம்பளைங்க, குழந்தைங்க எல்லோரும் வாசல்லயே தூங்ககிட்டு நிம்மதியில்லாம இருக்கோம்.

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

எப்படியாச்சும் ஊருக்குப் போயிடலாம்னு எங்க பொருள்களையெல்லாம் மூட்டைக் கட்டிகிட்டு ரெண்டு முறை கிளம்பினோம். வழியில, `எங்கயும் போக முடியாது. இருந்த இடத்துக்கே போங்க’ன்னு போலீஸ்காரங்க தொரத்திவிடுறாங்க. எங்க நிலையைப் பார்க்கவும், உதவி செய்யவும் இதுவரை ஓர் அதிகாரிகூட இங்க வரலை. கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஊருக்குள்ள போய் சிலர்கிட்ட உதவி கேட்டோம். `நோய் பரவிடும். நீங்கள்லாம் எங்க ஊருக்குள்ள வரக்கூடாது. நீங்க இருக்கிற இடத்துக்கே போயிடுங்க...’ன்னு அங்கிருக்கிற மக்கள் சொல்லிட்டாங்க. எங்களுக்கு ரொம்பவே சங்கடமா போயிடுச்சு. அப்போதிலிருந்து யார்கிட்டயும் உதவி கேட்கப் போறதில்லை” என்கிறார் ஆதங்கத்துடன்.

``தண்ணி டிராக்டர் வந்துடுச்சு” என்ற குரல் தூரத்திலிருந்து ஒலிக்கிறது. அங்கிருந்தப் பெண்கள் பலரும் காலி குடங்களுடன் தண்ணீர் பிடிக்க ஓட்டம் பிடித்தனர்.

இருளர் மக்கள்
இருளர் மக்கள்

``எங்க சமூக மக்களின் வாழ்க்கையே உத்தரவாதம் இல்லாமல் சிரமமானதுதான். ஆனா, இருக்கிறதைவெச்சு நிம்மதியாதான் வாழ்ந்துகிட்டிருந்தோம். ஆனா, இங்க ஒன்றரை மாசமா இருக்கிற வாழ்க்கை ரொம்பவே நரகம் மாதிரி இருக்கு. தண்ணி வசதிகூட இல்லை. இங்க நிரந்தரமா வசிக்கிற எங்க சமூகத்து மக்களே டிராக்டர்ல வர்ற தண்ணியைத்தான் காசுக்கு வாங்கறாங்க. நாங்களும் ஒரு குடம் அஞ்சு ரூவாய்னு காசு கொடுத்துதான் வாங்கறாங்க. இது பாத்திரம் கழுவ, பாத்ரூம் பயன்பாட்டுக்குத்தான். குடிக்கிறதுக்கு டிரம்ல தண்ணி நிரப்பித்தருவாங்க. அதுக்கு 80 ரூவா. அதுவும் உப்பு தண்ணிதான்.

சோத்துக்கே வழியில்லாம இருக்கிற நிலையில, தெனமும் காசு கொடுத்து தண்ணி வாங்கறதெல்லாம் எங்களுக்கு ரொம்பப் புதுசுங்க. பணத்துக்குச் சிரமமா இருக்கிறதால, மூணு நாளைக்கு ஒருவாட்டிதான் குளிக்கறோம். குளிப்பாட்டாமலும் வெயில் தாங்க முடியாமலும் வியர்க்குரு வந்து குழந்தைங்க எரிச்சல் தாங்க முடியாம அழுதுகிட்டே இருக்குதுங்க. நாங்க தங்கியிருக்கிற இந்த ஓலைக் கீத்துக் கூடாரம் பயன்படுத்தப்படாம இருந்துச்சு. அதனால காசு எதுவும் கொடுக்காமதான் இதுல தங்கியிருக்கோம். ஆனா, ரொம்பவே சேதாரமா இருக்கிறதால, 10 நாளைக்கு முன்னாடி மழை வந்தப்போ எங்க குடியிருப்புக்குள்ள மழைத் தண்ணி புகுந்திடுச்சு. அன்னிக்கு நைட்டு முழுக்க எங்களால தூங்கவே முடியலை. எங்களை மாதிரியே, எங்ககூட வந்த எங்க சமூகத்தைச் சேர்ந்த 20 பேர் எண்ணூர் பக்கத்துல புதுநகர்ல தவிக்கிறாங்க...” - முனியம்மாளின் குரல் உடைகிறது. நீண்டநேரத்துக்குப் பிறகுதான் அவரின் கண்ணீர் நிற்கிறது.

“எங்களுக்குச் சாப்பிட, தங்கக்கூட யாரும் உதவாட்டியும் பரவாலை. ஆனா, எப்படியாச்சும் ஊர்ல இருக்கிற குடும்பத்தோடு எங்களைச் சேர்த்துவிட்ருங்க. புண்ணியமா போகும். ரெண்டு நாள் பொறுமையா பார்த்துட்டு நடந்தே ஊருக்குப் போக ஆரம்பிச்சுடலாம்னு முடிவெடுத்திருக்கோம்” - அங்கிருக்கும் ஒட்டுமொத்த மக்களின் குரலாக ஒலிக்கிறது ஒற்றை வேண்டுகோள். எப்படியும் உடனடியாகச் சொந்த ஊருக்குச் செல்ல உதவிகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் கண்ணீர் மல்க விடைகொடுத்தனர் அந்த மக்கள்.

இந்த இருளர் மக்கள் குழுவிலுள்ள ராஜேந்திரன் என்பவரின் தாயார் சொந்த ஊரில் நேற்று காலமான செய்தியைக் கூறி உடனே ஊருக்குச் சென்று நல்லடக்கப் பணிகளைச் செய்ய வேண்டும் உதவுமாறு கேட்டுக்கொண்டார். இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மற்றும் பொன்னேரி தாசில்தார் மணிகண்டன் ஆகியோருக்கு விகடன் சார்பில் தெரிவித்தோம். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ராஜேந்திரன் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் ஊருக்குச் செல்ல பாஸ் கிடைக்க உதவி செய்தனர். ராஜேந்திரன் உட்பட மூவரையும் அவர்களின் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை, 'சேவைக் கரங்கள்' மற்றும் 'பாரதி டிரஸ்ட்' அமைப்புகள் ஏற்றுக்கொண்டன.

கொரோனா
கொரோனா

மேலும், இந்த மக்களின் நிலை குறித்து, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலத்துக்கான சிறப்புப் பணிக்குழுவின் நிர்வாகியான உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் மற்றும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ஆகியோரிடம் விகடன் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. உரிய ஆவணம் மேற்கொண்டு, இந்த மக்களுக்கு உதவுவதுடன் அவர்களுக்கான அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றிக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்வதாக இருவரும் தெரிவித்தனர். அதன்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பொன்னேரி தாசில்தார் மணிகண்டன், அந்த மக்களின் தேவைகள் குறித்துப் பேசியிருக்கிறார்.

தாசில்தார் மணிகண்டனிடம் பேசினோம். "அந்த இருளர் மக்களை அரசு நிவாரண முகாமில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்தோம். ஆனால், மக்கள் தொடர்ந்து தற்போது இருக்கும் இடத்திலேயே இருக்க விரும்புவதாகவும், தண்ணீர் மற்றும் மளிகைப் பொருள்களுக்கு மட்டும் உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். மக்களின் விருப்பத்துக்கு ஏற்ப தரமான மளிகைப் பொருள்களை இன்றைக்குள் வழங்கிவிடுவோம். மேலும் ஊர் பஞ்சாயத்துத் தலைவர் மூலமாகத் தண்ணீர் தேவையையும் பூர்த்தி செய்ய உத்தரவிட்டிருக்கிறோம். அவர்கள் இங்கு இருக்கும்வரை வாரத்துக்கு ஒருமுறை சந்தித்துத் தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்துகொடுக்கும்" என்றார்.

``குழந்தை பசியில அழுவுது; பிஸ்கட் மட்டும்தான் சாப்பாடே!” - தவிக்கும் இருளர் மக்களின் நிலை

இன்று மதியம், திருவள்ளூர் மாவட்ட வருவாய் அலுவலர், பொன்னேரி வட்டாட்சியர் உள்ளிட்ட குழுவினர், நேரடியாக அப்பகுதிக்குச் சென்று அந்த மக்களோடு உரையாடினர். , 20 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறிகள், 2 கிலோ பருப்பு, 2 லிட்டர் எண்ணெய் உள்ளிட்டவை கொண்ட நிவாரண பைகளை அவர்களுக்கு வழங்கினர். நம்மிடம் பேசிய பொன்னேரி வட்டாசியர், ”வாரம்தோறும் இந்த மக்களுக்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும். தேவையேற்படுபட்சத்தில் மருத்துவ உதவியும் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.