Published:Updated:

திருப்பத்தூர்: `அடிப்படை வசதிகளின்றி அல்லாடும் பழங்குடி மக்கள்' - கவனிக்குமா அரசு இயந்திரம்?!

அல்லாடும் பழங்குடி மக்கள்
News
அல்லாடும் பழங்குடி மக்கள்

மழைக்கும் புயலுக்கும் நிச்சயம் தாங்காது என்பதை அந்தச் சிதிலமடைந்த குடிசைகளின் நிலை நமக்கு உணர்த்தியது. அவர்களின் குடியிருப்புகளுக்குள் நுழைந்த மாத்திரத்தில் நம் மூக்கைத் திணறடித்தது கால்வாய் துர்நாற்றம்.

நாளுக்கு நாள் நவீனமயமாகிக்கொண்டிருக்கும் இந்த டிஜிட்டல் யுகத்தில், இன்னும் ஏராளமான மக்கள் அடிப்படை வசதிகள்கூட கிடைக்காமல் மிகவும் பரிதாபகரமான நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை. அரசு இயந்திரத்தின் கவனத்துக்கு இத்தகைய கடைநிலை மக்களின் கோரிக்கைகளும், அபயக் குரல்களும் சென்றடைந்தாலும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இருள் சூழ்ந்த இந்த மக்களின் வாழ்வில் ஏனோ விடியலுக்கு வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

அந்த வகையில், திருப்பத்தூர் மாவட்டம், புதூர் பூங்குளம் ஏ.கே.மோட்டூர் என்னும் பகுதியில் பழங்குடியின மக்கள் நான்கு தலைமுறைகளாக எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி அல்லாடிக்கொண்டிருப்பதாக நம் காதுகளுக்குத் தகவல் கிடைக்க, அந்த இடத்துக்கு விரைந்தோம். தார்ப்பாய் போர்த்தப்பட்டு சீலையிலான கதவுகள்கொண்டு அமைக்கப்பட்ட வீடுகள் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் மிகவும் நெருக்கமாக அமைந்திருந்தன. அந்தப் பகுதியில் சுமார் 25 வீடுகள் இருந்தன.

பழங்குடிகள் குடியிருப்பு
பழங்குடிகள் குடியிருப்பு

மழைக்கும் புயலுக்கும் நிச்சயம் தாங்காது என்பதை அந்தச் சிதிலமடைந்த குடிசைகளின் நிலை நமக்கு உணர்த்தியது. அவர்களின் குடியிருப்புகளுக்குள் நுழைந்த மாத்திரத்தில் நம் மூக்கைத் திணறடித்தது கால்வாய் துர்நாற்றம். ஐந்து நிமிடங்கள்கூட அந்த இடத்தில் நிற்க முடியாத அளவுக்கு மோசமான துர்நாற்றம் அது. நாம் வந்திருப்பதை அறிந்து தரையோடு ஒட்டியிருந்த அந்த ஓலைக் குடிசைகளிலிருந்து வெளியே வந்த சிலர் நம்மை ஒருவித தயக்கக் குரலுடன் விசாரித்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பழங்குடிகள் குடியிருப்பு
பழங்குடிகள் குடியிருப்பு

அவர்களிடம் நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத் தொடங்கினோம். ``சார் இந்தப் பகுதியில நாங்க 25 குடும்பங்கள் வசிச்சிட்டுவர்றோம். நாங்க தினமும் காட்டுல தேன் எடுக்குறதுக்கும், கிழங்கு தோண்டுறதுக்கும், குப்பையைப் பொறுக்கிப் போடுறதுக்கும்தான் போயிட்டு இருக்குறோம். எங்க குழந்தை குட்டிங்க வயித்தைக் கழுவ வேற பொழப்பு இல்லை. ஒரு நாள் முழுக்க வியர்வை சிந்தி உழைச்சாக்கூட 150 ரூபாய்க்கு மேல கிடைக்காது. நாங்க இருக்குற பகுதி ஃபாரஸ்ட் ஏரியாங்கிறதால ஃபாரஸ்ட் அதிகாரி நாங்க செய்யாத தப்புக்கு எங்க மேல ஃபைன் போடுறாரு. இங்க எங்களுக்குன்னு எந்தவித அடிப்படை வசதியும் கிடையாது சார். லைட்டு, குடிதண்ணீர், சாலை வசதினு எதுவுமே இங்க இல்லை சார். சரி... நாங்கதான் இப்படி அல்லப்பட்டுட்டு இருக்குறோம். எங்க பிள்ளைங்களையாவது பள்ளிக்கூடத்துல படிக்கவெக்கலாம்னு பார்த்தா, சாதி சர்டிஃபிகேட் இல்லாததால அதுக்கும் சிரமமா இருக்கு. இங்க இருக்குற எங்க ஜனங்கள்ல நெறைய பேருக்கு சாதி சர்டிஃபிகேட், ஆதார் கார்டு, ரேஷன் கார்டு'னு எதுவுமே இல்லை.

இது சம்பந்தமா எத்தனையோ முறை அரசு அதிகாரிங்ககிட்ட முறையிட்டுட்டோம். யாரும் ஒரு உதவியும் செய்யலை. ஊர்ல எல்லாருமே எங்களை ஒதுக்குறாங்க. 'உங்க மேல நாத்தம் அடிக்குது... கிட்ட வராதீங்க'னு ரொம்ப ஏசிப் பேசுறாங்க. அரசியல்வாதிங்க எல்லாரும் தேர்தல் நேரத்துல மட்டும் வந்து எங்களைப் பார்ப்பாங்க. ஒவ்வொரு முறை வரும்போதும் எங்க புறம்போக்கு நிலத்துக்கு பட்டா கொடுக்க ஏற்பாடு செய்யுறதா சொல்லிட்டுப் போவாங்க. ஆனா, அதுக்குப் பிறகு இந்தப் பக்கமே வர மாட்டாங்க. 25 வருஷமா பட்டா கேட்டு போராடிட்டு இருக்குறோம். எங்களுக்கு மாற்று இடத்துல அரசாங்கம் பட்டா கொடுத்துச்சு. ஆனா, எங்க பிள்ளைங்க பள்ளிக்கூடத்துக்கு போயிட்டு வர தூரமா இருந்ததால, நாங்க இங்கேயே காலத்தை ஓட்டிட்டு இருக்குறோம். மழைக்காலம் வந்துட்டா பாம்பு, விஷ ஜந்துக்கள் தொல்லை அதிகமாகிடும். உசுரைக் கையில பிடிச்சுக்கிட்டு வாழ்க்கையை நகர்த்திட்டு இருக்கோம். அதனால, அரசாங்கம் இந்த இடத்துக்கு பட்டா கொடுத்து, தொகுப்பு வீடு கட்டிக் கொடுத்தா ரொம்ப உதவியா இருக்கும்" என்றனர் கண்களைக் கசக்கியபடி.

லோகேஷ்
லோகேஷ்

மோட்டூர் பழங்குடிகள் பகுதியில் 10-ம் வகுப்புவரை படித்திருக்கும் லோகேஷிடம் பேசினோம். ``நான் ஒருத்தன்தான் இந்த ஊர்ல பத்தாவதுவரைக்கும் படிச்சிருக்கேன். இதுவரைக்கும் யாரும் இன்னும் எட்டாவது, ஒன்பதாவதுக்கு மேல படிக்கலை. எங்க ஜனங்களை எப்படியாவது மேல கொண்டு வரணும்னு சாயங்கால நேரத்துல ஏதோ எனக்குத் தெரிஞ்சதைக் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுத்துட்டு இருக்கேன். இவங்க பள்ளிப் படிப்பை தொடர முடியாத காரணம் வறுமைதாங்க. பெண் குழந்தைகளைச் சின்ன வயசுலேயே கல்யாணம் செஞ்சு கொடுத்துடுறாங்க. ஆம்பளைப் பசங்க எங்கேயாவது கூலி வேலைக்குப் போய் சம்பாதிச்சு வயித்துப் பொழப்புக்கு வழி தேடிக்குறாங்க.

குழந்தைகள்
குழந்தைகள்

அது மட்டும் இல்லை... தேன் எடுக்க காட்டுக்குப் போய் பாறை மேல விழுந்து இறக்குற சம்பவம் தொடர்கதையா இருக்கு. இங்க நெறைய குழந்தைங்க இருக்காங்க. ரொம்ப காலமா பட்டா கேட்டு போராடிட்டு இருக்குறோம். ஆதார், ரேஷன் கார்டுனு எதுவுமே இல்லாம இங்க நெறைய குடும்பங்கள் கஷ்டப்படுறாங்க. அரசாங்கம் எங்க மேல கூடுதல் கவனம் செலுத்தி, எங்களோட வாழ்க்கை நிலை மேம்பட உதவணும்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பழங்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து, அந்தப் பகுதியின் ஊராட்சி ஒன்றியத் தலைவர் ஜெய்சங்கரிடம் கேட்டோம். ``இந்த ஊராட்சியின் முன்னாள் தலைவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சுதாகர் என்பவர். அவர்தான் இந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கியிருக்கிறார். அதனால், இந்த விவகாரத்தில் எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. முன்னாள் தலைவர் சுதாகர், மாற்று இடத்தில் பட்டா வழங்கியிருக்கிறார். அதனால், எந்த இடத்தில் அவர்களுக்குப் பட்டா வழங்கப்பட்டதோ அந்த இடத்தில் அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

முன்னாள் தலைவர் சுதாகரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, `` அந்தப் பகுதியில் வாழும் மக்கள், பட்டா வழங்கப்பட்ட இடத்தைவிட, பச்சையம்மன் குட்டை என்னும் பகுதியில் வீடு கட்டிக் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்கள். ஆனால், அதற்கான சாத்தியங்கள் இல்லாமல் போனது" என்றார்.

பழங்குடிகள் குடியிருப்பு
பழங்குடிகள் குடியிருப்பு

இறுதியாக அந்த ஊரின் தலைவரிடம் இது குறித்துக் கேட்டபோது, ``பட்டா எந்த இடத்தில் வழங்கப்பட்டிருக்கிறதோ, அந்த இடத்தில் அவர்களுக்கு வீடுகள் கட்டித்தரத் தயாராக இருக்கிறோம். அந்த இடத்தில் அனைவருக்கும் வீடு கட்டித்தரப் போதுமான இடம் இல்லாதபட்சத்தில் பச்சையம்மன் குட்டை என்னும் பகுதியில் வீடு கட்டித் தர நடவடிக்கை எடுக்கிறோம். அதேபோல சாதிச் சான்றிதழ், ரேஷன் கார்டு ஆகியவற்றை உடனடியாகப் பெற்றுத்தர அதிகாரிகளிடம் வலியுறுத்துகிறேன்" என்றார்.

பழங்குடி மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக, அந்தப் பகுதியின் கிராம நிர்வாக அலுவலரைப் பலமுறை தொடர்புகொண்டு விளக்கம் கேட்க முயன்றோம். ஆனால், அவர் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை. அவர் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதை பதிவிடத் தயாராக இருக்கிறோம்.

வீட்டுமனைப் பட்டாவுக்காகவும், அடிப்படை வசதிகளுக்காகவும் அரசாங்கத்திடம் மன்றாடிக்கொண்டிருக்கும் இந்த விளிம்புநிலை மக்களின் அபயக் குரல் செவிசாய்க்கப்படும் பட்சத்தில், இவர்களின் வாழ்க்கைநிலை நிச்சயம் மேம்படும்!