Published:Updated:

விழுப்புரம்: அடிப்படை வசதிகள்கூட இல்லை... அல்லாடும் இருளர் பழங்குடிகள்! - நம்பிக்கை அளித்த ஆட்சியர்

``மயிலத்துல, எங்களைப்போலக் கஷ்டப்படும் 67 குடும்பங்களுக்கு கலெக்டர் சார் மூன்று நாள்களுக்குள் பட்டா கொடுக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுறதா சொல்லிட்டுப் போயிருக்காரு. அவங்க சொன்னதுக்கு அப்புறம்தான் எங்களுக்கு நம்பிக்கையே வந்திருக்கு."

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்துக்கொண்டிருக்கிறது. இந்த கனமழையில் மயிலம் முருகன் கோயிலுக்குப் பின்புறம் சுமார் 22 பழங்குடி இருளர் பழங்குடிக் குடும்பங்கள், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி இன்னல்பட்டுக்கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு சென்றோம். முருகன் கோயிலுக்குப் பின்புறமிருந்த மலைப் பாறைகளுக்கு அருகில் தரையை ஒட்டிக்கிடந்தன அந்தக் கடைநிலை மக்களின் குடிசைகள்.

பழங்குடி மக்கள் குடிசைகள் - மயிலம்
பழங்குடி மக்கள் குடிசைகள் - மயிலம்
``தாத்தா, அப்பா பட்ட கஷ்டத்தையே எங்க புள்ளைங்களும் படணுமா?'' - நயம்பாடி இருளர் மக்களின் கதை!

கனமழையால் இருப்பிடங்களுக்குள் புகுந்த வெள்ளநீரை வாளிகளில் வாரியிறைத்துக்கொண்டிருந்தவர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். ``இதுதான் எங்க குடிசைங்க. எங்களுக்கு எந்த வசதியும் கிடையாதுங்க. நிரந்தரமான வீட்டுமனையோ, சாலையோ, கரன்ட்டோ எதுவும் இல்லைங்க. குடிக்க தண்ணி எடுக்குறதுக்குக்கூட ஒன்றரை கிலோமீட்டர் வரை போயிட்டு வரணும். தினமும் இருட்டுலதான் எங்க வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருக்குறோம். பாம்பு, தேள்னு விஷ ஜந்துகளுக்கு மத்தியில குழந்தை, குட்டிகளை வெச்சுக்கிட்டு அல்லாடிட்டு இருக்குறோம். மழை பெய்யுற சமயத்துலதான் எங்களை கழனிக்காட்டு வேலைக்கு கூப்பிடுவாங்க. மத்த நேரத்துல வேலை எதுவும் அவ்வளவாகக் கிடைக்காதுங்க.

இந்த ஊர்லதான் 30 வருஷத்துக்கு மேல இருக்குறோம். இப்பதான் ஒரே இடத்தில் இருக்கிறோம். இதுக்கு முன்னாடி, இதே ஊர்ல இருக்கிற சிலரோட நிலத்தில கூலி வேலை செஞ்சுக்கிட்டு, அவங்களுடைய நிலத்துலையே குடிசை போட்டுக்கிட்டு, தனித்தனியா இருந்தோம். ஒருகட்டத்துல கழனிக்காரங்க காலி பண்ணச் சொல்லிட்டாங்க. இடமில்லாம அலைஞ்சு திரிஞ்சு இந்த இடத்தில குடிசை போட்டு வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இந்த இடம்கூட சென்னையைச் சேர்ந்த புண்ணியவான் ஒருத்தருது. இந்த இடத்துக்கு பக்கத்திலயே முறைகேடாகப் பட்டா மாற்றப்பட்ட அரசாங்கத்துக்குச் சொந்தமான இடம் இருக்கு. அந்த இடத்தை அரசு அதிகாரிகள் மீட்டு, எங்களுக்கு வீட்டுமனையா கொடுக்கணும்னு ரொம்ப நாளா கோரிக்கை வெச்சுக்கிட்டு இருக்கோம். நாங்க மொத்தம் 22 குடும்பங்கள் இங்கே இருக்குறோம். அதுல, 15 குடும்பத்துக்காரங்களுக்குதான் ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டை எல்லாமே இருக்கு. ஏழு குடும்பங்களுக்கு இன்னும் எதுவுமே கிடைக்கலை. கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் ஆதார் கார்டு கொடுத்தாங்க.

விழுப்புரம்: `எங்க வீடும் வாழ்வும் இப்படித்தான்’ - பரிதவிக்கும் இருளர் சமூக மக்கள்; ஆட்சியரின் பதில்
பழங்குடி மக்கள்
பழங்குடி மக்கள்

நாங்க மயிலத்திலதான் ஓட்டு போடுறோம். அரிசி, சர்க்கரை எல்லாம் வாங்குறோம். ஆனா எங்க நிலைமை இன்னும் இப்படியேதான் இருக்கு. எந்த மாற்றமும் இல்லைங்க. எங்க அப்பா, அம்மா எல்லாம் எங்களைப் படிக்கவெச்சிருந்தா. பதவியில இருக்குறவங்க எங்களையும் மதிச்சு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருப்பாங்களோ என்னவோ தெரியலை. எங்களைப்போலவே பக்கத்துல 45 இருளர், குறவர் குடும்பங்கள் இருக்காங்க. அவங்களுக்கும் இதே நிலைமைதான். காட்டிலும் மேட்டிலும் கடந்தபடியே எங்க வாழ்க்கை போயிட்டு இருக்கு. எங்க பசங்க, பேரப்பிள்ளைங்கல்லாம் நல்லா படிக்கணும்னு எங்களுக்கும் ஆசை இருக்கு. 'ஜெய் பீம்' படத்துலகூட நாங்க ஒரு ஆறு பேர் நடிச்சிருந்தோம். அந்தப் படத்துல வர்ற காட்சிகளைப் போலத்தான் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாம எங்க வாழ்க்கையும் கிடக்கு. நாங்க இருட்டுல பாம்பு, பூச்சிகிட்ட எல்லாம் அல்லல்பட்டுட்டு கிடக்குறதைப் பார்த்துட்டு ஒருத்தர், எங்களுக்கு சூரிய வெளிச்சத்துல எரியிற 'லைட்' போட்டு கொடுத்தாரு.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நேத்து காலையில கலெக்டர் வந்து எங்களைப் பார்த்துப் பேசினாரு. எங்க குறையெல்லாம் கேட்டுட்டு, இன்னும் மூணு நாளுக்குள்ள எங்களை மாதிரி இங்க கஷ்டப்படுற 67 குடும்பங்களுக்கும் (இருளர், குறவர்) வீட்டுமனைப் பட்டா குடுக்குறதுக்கு ஏற்பாடு செய்யறேன்னு சொல்லியிருக்காரு. அதே மாதிரி, இந்த மழை நேரத்துல இவங்க எல்லாருக்கும் நல்ல சாப்பாடு கொடுக்கணும். பள்ளிக்கூடத்தில் தங்கவெச்சு பார்த்துக்கோங்கன்னு அதிகாரிங்ககிட்ட சொல்லிட்டு போயிருக்காரு. அதுக்கு அப்புறமா ஊராட்சித் தலைவர், கவுன்சிலர் எல்லாம் எங்களுக்கு உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க. இப்பதான் எங்க வாழ்க்கை நிலையும் மேம்படும்னு நம்பிக்கை வந்திருக்கு" என்றார்கள்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன்

பழங்குடி மக்கள் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, அப்பகுதியில் கழிவுநீரைக் கொட்டுவதற்காக கழிவுநீர் ஊர்தி ஒன்று வந்தது. உடனே அவர்கள், அந்த வாகனத்தை முற்றுகையிட்டனர். தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகில் கழிவுநீரைக் கொட்டுவதால், சுகாதாச்ர சீர்கேடு நிலவுவதாக நம்மிடம் வேதனையுடன் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, உரிய புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு இந்த விஷயத்தை நாம் கொண்டு சென்றோம். அவர், ``பழங்குடிகளின் வசிப்பிடங்களுக்கு அருகில் கழிவுநீரைக் கொட்டுபவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணித்து வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கும்படி காவல்துறையினரிடம் கூறுகிறேன்" என்றார்.

வீட்டுமனைப் பட்டாவுக்காக 20 வருடங்களாகப் போராடும் இருளர் இன மக்கள்-அலட்சியம்காட்டும் அரசு அதிகாரிகள்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு