Published:Updated:

`நீ இன்னும் சாகலையான்னு மருத்துவர் கேட்டார்!' - கோவை இருளர் பழங்குடி முதல் வழக்கறிஞர் காளியம்மாள்

காளியம்மாள்

`` நீயெல்லாம் செத்துப்போய்டுவேன்னுதான் நினைச்சேன். முதல்வர் வரைக்கும் போவேன்னு எதிர்பார்க்கலை’னு பலரும் சொல்றாங்க. ஆஸ்பத்திரியில இருந்த காலகட்டத்துல எல்லாரும் மனசை விட்டுட்டாங்க’’ - கோவை மாவட்டத்தின் இருளர் பழங்குடியின் முதல் வழக்கறிஞர் காளியம்மாள்.

`நீ இன்னும் சாகலையான்னு மருத்துவர் கேட்டார்!' - கோவை இருளர் பழங்குடி முதல் வழக்கறிஞர் காளியம்மாள்

`` நீயெல்லாம் செத்துப்போய்டுவேன்னுதான் நினைச்சேன். முதல்வர் வரைக்கும் போவேன்னு எதிர்பார்க்கலை’னு பலரும் சொல்றாங்க. ஆஸ்பத்திரியில இருந்த காலகட்டத்துல எல்லாரும் மனசை விட்டுட்டாங்க’’ - கோவை மாவட்டத்தின் இருளர் பழங்குடியின் முதல் வழக்கறிஞர் காளியம்மாள்.

Published:Updated:
காளியம்மாள்

``ஒரு கட்டத்துல எனக்கு சிகிச்சை கொடுத்த மருத்துவரே, `ஏன்மா... நீ இன்னும் உசுரோட இருக்கியா?’னு கேட்டாரு. அப்புறம் என்னோட நடவடிக்கைகளை பார்த்து அவரே வாய் மேல விரல் வெச்சு ஆச்சர்யப்பட்டாரு” - காளியம்மாளின் ஒவ்வொரு வார்த்தையிலும் வலியும், அதை உடைத்தெறிந்த தன்னம்பிக்கையும் ஒருசேர வெளிப்படுகின்றன. கோவை மாவட்டம் ஆனைக்கட்டி அருகே உள்ள கோபனாரி என்கிற பழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் காளியம்மாள்.

காளியம்மாள்
காளியம்மாள்

மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த காளியம்மாள் சந்தித்த பிரச்னைகள் எல்லாம், அசாதரணமானவை. சிறு வயதிலேயே உடல் பருமன், தைராய்டு, சர்க்கரை வியாதி, கால்வலி என்று ஒரு டஜன் நோய்கள் அவரைத் தாக்கின.

அந்த வயதில் வீடும், கல்வி நிலையமும் என மாணவர்கள் சுற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில், காளியம்மாள் மருத்துவ மனையில் இருந்த நாள்கள் அதிகம். இருப்பினும் அதற்காக அவர் கலங்கவில்லை. தன் உடலில் உள்ள நோய்களுடன் மல்லுக்கட்டிக் கொண்டே, தங்கள் கிராமத்து மக்களின் பிரச்னைகளுக்குக் குரல் கொடுத்து வந்தார்.

முதல்வருடன் காளியம்மாள்
முதல்வருடன் காளியம்மாள்

சட்டப்படிப்பில் சேர்ந்தார். இதோ 30 வயதில், கோவை மாவட்டத்திலேயே இருளர் பழங்குடி மக்களில் இருந்து முதல் வழக்கறிஞர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அவரைப் பற்றி தெரிந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினே காளியம்மாளை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.

இதுகுறித்து காளியம்மாள் நம்மிடம் கூறுகையில், ``அப்பா விவசாயக்கூலி. வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. ஐந்தாம் வகுப்புவரை கோபனாரி பள்ளியில படிச்சேன். 10-ம் வகுப்பு வரை ஆனைக்கட்டி பள்ளியில படிச்சேன். 11-ம் வகுப்புப் படிக்கும்போது திடீர்னு ஃபிட்ஸ் வந்துச்சு. நாங்க பெருசா கண்டுக்கல. அதனால மாசத்துக்கு ரெண்டு, மூணு தடவை ஃபிட்ஸ் வந்துச்சு. அப்பத்தான் அரசு மருத்துவமனை போனப்போ, `உலகத்துல இருக்கற எல்லா பிரச்னையும் இவங்க ஒருத்தங்களே வாங்கி வெச்சுருக்காங்க. பிழைக்கிறது கஷ்டம்’னு சொல்லிட்டாங்க. அவங்க என்கிட்ட சொல்லிருந்தாக்கூட பரவாயில்லை.

பெற்றோருடன் காளியம்மாள்
பெற்றோருடன் காளியம்மாள்

என் அம்மா, அப்பாகிட்ட அப்படி சொன்னது ரொம்ப வருத்தமா இருந்துச்சு. கோவை அரசுக் கல்லூரியில பி.ஏ எக்கனாமிக்ஸ் படிச்சேன். காலேஜ் படிக்கறப்ப ஒரு தடவை ரயில்ல போகறப்ப ஆக்சிடன்ட் ஆகிடுச்சு. அதே மருத்துவமனைக்குதான் போனேன். அதே மருத்துவர், `ஏன்மா... நீ இன்னும் உசுரோட இருக்கியா?’னு கேட்டாரு. `நான் செத்துப்போனா உங்களுக்கு சந்தோஷமா?’னு கேட்டுட்டு வந்துட்டேன். அம்மா, அப்பாக்கிட்ட அப்படி சொன்னதுல அவர் மேல எனக்குக் கோபம் இருந்துச்சு.

எங்க ஊர்ல ஆஸ்பத்திரினாலே பயப்படுவாங்க. அதனால என்னால முடிஞ்ச வரை யாருக்கு, என்ன நோவு வந்தாலும் நான் தான் ஆஸ்பத்திரி கூப்பிட்டுப் போவேன். அப்ப அந்த மருத்துவரை அடிக்கடி பார்க்க வேண்டியதா இருந்துச்சு. ஒரு கட்டத்துல அவரே வாய் மேல விரல் வெச்சு ஆச்சர்யப்பட்டார். அப்பவும் எனக்கு ஏதாவது பிரச்னை வந்துட்டேதான் இருந்துச்சு. அவரே ஒருநாள், `நீங்க சென்னை இல்லாட்டி மதுரை போய் சிகிச்சை எடுத்தா சீக்கிரம் குணமாகும்’னு சொன்னார். அதனாலதான் மதுரை சட்டக் கல்லூரியில சேர்ந்தேன். ஆனா, அப்பா உடல்நிலை காரணமா மீண்டும் கோவை வந்துட்டேன். அதுக்கப்புறம் அப்பா, அம்மா, என் உடல்நிலை, கல்வி எல்லாத்தையும் சார் (மகேஸ்வரன்) பார்த்துக்கிட்டார்.

காளியம்மாள் வீடு
காளியம்மாள் வீடு

அப்புறம் வந்த எந்த பிரச்னையும் எனக்கு பிரச்னையா தெரியல. `ஜெய்பீம்’ படத்துல வர்ற மாதிரி எங்க ஊர்லயும் பல சம்பவங்கள் தாத்தா காலத்துல இருந்ததா சொன்னாங்க. ஒரு வழக்கறிஞர், எங்களக்கு உதவி செய்ய அவரோட வேலைய விட்டு வந்துருந்தார். நான் 8-ம் வகுப்பு படிச்சப்போ அவரைப் பார்த்தேன். அப்பவே, நம்ம ஏன் படிச்சு வழக்கறிஞர் ஆகக்கூடாதுனு யோசிச்சேன். வழக்கறிஞர் ஆகறதுதான் என் கனவுன்னு ஆச்சு” என்றார்.

காளியம்மாவின் சிகிச்சைக்கு மற்றும் கல்விக்கு உதவி செய்த மருத்துவர் மகேஸ்வரன், ``காளியம்மாள் முதலில் மதுரை சட்டக் கல்லூரியில்தான் படித்து வந்தார். பிறகு கோவை சட்டக் கல்லூரிக்கு மாறுதலானார். கோவை மாவட்டத்தில் சட்டம் படிக்கும் முதல் இருளர் பழங்குடி மாணவி என்று என் நண்பர் மூலமாக காளியம்மாள் அறிமுகமானார். முதலில் அவரது உடல்நலப் பிரச்னைக்குத்தான் உதவி செய்து வந்தேன். பிறகு அவரது கல்விக்கும் உதவி செய்யத் தொடங்கினேன். காளியம்மாள் மிகவும் தைரியமான பெண்.

மருத்துவர் மகேஸ்வரன்
மருத்துவர் மகேஸ்வரன்

அதனால் எப்படியும் தேர்ச்சி பெறுவார் என்ற நம்பிக்கை இருந்தது. உடல்நலம், குடும்ப பிரச்னையால் சில நேரம் சோர்வாக இருந்தாலும் என்னைப் போல மேலும் சிலர் அவருக்கு நம்பிக்கையளிக்கும் தூண்டுகோளாக இருந்தனர். பழங்குடி மக்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் லட்சியம். அதை நோக்கித்தான் அடுத்தகட்ட பயணம் இருக்கும்” என்றார்.

மீண்டும் தொடர்ந்த காளியம்மாள், `` உனக்கு இருந்த நோவு பிரச்னைகளுக்கு நீயெல்லாம் செத்துப்போய்டுவேனு தான் நினைச்சேன்.  முதல்வர் வரைக்கும் போவேன்னு எதிர்பார்க்கலை’னு பலரும் சொல்றாங்க. ஆஸ்பத்திரில இருந்த காலகட்டத்துல எல்லாரும் மனசு விட்டாங்க. அப்பாவுக்கு உடம்பு சரி இல்லாம இருந்தப்ப, அம்மா வட்டிக்கு ரூ.10,000 கடன் வாங்கி ஹாஸ்டல் ஃபீஸ் கட்டுனு சொல்லிக் கொடுத்தாங்க. அப்பவே என்ன ஆனாலும் வழக்கறிஞர் ஆகறதுனு முடிவு பண்ணிட்டேன். எங்க கிராம மக்களுக்கு முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட தேவைக்காக அரசு அலுவலகம் போவேன்.

காளியம்மாள்
காளியம்மாள்

நான் நிறைய கேள்வி கேட்பேன். அப்ப அவங்களே, `என்னம்மா நீ வக்கீல் மாதிரி கேள்வி கேக்கற?’னு சொல்லுவாங்க. அதெல்லாம் எனக்கு ஒருவகையான தூண்டுகோல்தான். நம்ம பொண்ணு எல்லாம் எப்படி முன்னுக்கு வரப்போகுதுனு அப்பா, அம்மா யோசிச்சுருப்பாங்க. இன்னிக்கு அவங்க ரொம்ப சந்தோஷமா இருக்காங்க.

டிவிலேயே பார்த்த முதல்வரை நேர்ல பார்த்தப்ப, நம்ப முடியாத தருணமா இருந்துச்சு. `எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம். நல்லா பண்ணுங்க. உடல் ஆரோக்கியம்தான் முக்கியம். எந்த உதவி தேவைப்பட்டாலும் கேளுங்க’னு முதல்வர் சொன்னார். மக்களுக்கு நிறைய பண்ணணும்.

முதல்வருடன் காளியம்மாள்
முதல்வருடன் காளியம்மாள்

எங்க மக்களுக்கு சின்னதா யாராச்சும் உதவி பண்ணினாகூட, அவங்க முகத்துல வர்ற சந்தோஷம் கோடி ரூபா கொடுத்தாலும் பார்க்க முடியாது. நான் இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்துட்டு, மக்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை பண்ணத் தொடங்குவேன்” என்றார் நம்பிக்கையுடன்.

இருளர் பழங்குடி மக்களின் புதிய நம்பிக்கை காளியம்மாள்!