Published:Updated:

``பொணத்துக்குக்கூட சாதி இருக்கா?''- கணவனின் சடலத்தோடு இரண்டு நாள்களாக அல்லாடும் இருளர் பெண்

``அரசாங்கம்னா யாருனு தனியா ஒரு ஆளைக் காட்டுங்க. அவங்க கையில காலுல விழுந்தாவது என் புருஷனைப் பொதைக்க இடம் வாங்கணும்.''

`வாழும்போதுதான் சாதியைச் சொல்லி ஒதுக்குனாங்க. இப்போ என் வீட்டுக்காரர் செத்துக்கெடக்காரு. ஆனால், அவரைப் பொதைக்கக்கூட போராடிட்டு இருக்கோம். பொணத்துக்குக்கூட சாதி இருக்கா? அடிப்படை வசதிக்காக கலெக்டர் ஆபீஸ் ஏறி இறங்கியே எங்க வாழ்க்கையில பாதிநாள் கழிஞ்சு போச்சு. அரசாங்கம் இப்போ உதவி பண்ணும்; அப்போ உதவி பண்ணும்னு எதிர்பார்த்து எதிர்பார்த்தே எங்களோட ஒரு தலைமுறை முடிஞ்சு போயிருச்சு. வாழ்றதுக்குத்தான் சாதி தடையா இருந்துச்சு. செத்தபிறகும் இதே நிலைதான்னு நினைக்கும்போது இப்படி ஒரு வாழ்க்கை வாழ்றதுக்கு பதிலா ஆடு, மாடா பொறந்திருக்கலாம்னு தோணுது.

 சின்னப்பையன்
சின்னப்பையன்

நேத்து உசுருபோன உடம்பு இன்னும் புதைக்க வழியில்ல. அரசாங்கத்துகிட்ட இருந்து எங்களுக்குனு எந்தச் சலுகையும் வேண்டாம் தாயீ, என் புருஷனைப் புதைக்க ஒரு இடம் வாங்கிக் கொடுங்க. அதுபோதும்" என உடைந்து அழுகிறார் பச்சையம்மாள்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள கோணமலை இருளர் குடியிருப்பு. 18 குடும்பங்கள் மட்டுமே வாழும் இந்தப் பகுதியில் மின்சாரம் உட்பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை. இந்தநிலையில் அந்தப்பகுதியில் வாழ்ந்த சின்னப்பையன் என்ற 75 வயதான முதியவர், நேற்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்துள்ளார். அவரை அடக்கம்செய்ய தற்போது வரை அரசின் அனுமதி கிடைக்கவில்லை. இறந்தவரின் சடலத்தை நேற்றிலிருந்து வீட்டு வாசலில் போட்டு வைத்து அரசின் அனுமதியை எதிர் நோக்கிக் காத்திருக்கிறார்கள் இந்தப்பகுதி மக்கள். இதுகுறித்து இறந்தவரின் மனைவி பச்சையம்மாளிடம் பேசினோம்.

`அப்பாவின் அறிவுதான் என் ஆராய்ச்சிக்கு விதைபோட்டுச்சு!’ – பிஹெச்.டி படிக்கும் முதல் இருளர்  பெண்!

``அரசாங்கம்னா யாருனு தனியா ஒரு ஆளைக் காட்டுங்க. அவங்க கையில காலுல விழுந்தாவது என் புருஷனைப் பொதைக்க இடம் வாங்கணும். யாரைக் கேட்டாலும் அவங்கள கேட்கணும், இவங்கள கேட்கணும்னு சொன்னா, செத்த உடம்பை அடக்கம் செய்ய இன்னும் எத்தினி நாள் காத்துட்டு இருக்கணும். சாதியைச் சொல்லி வாழத்தான் விடல, சாவுலையாவது நிம்மதியைக் கொடுங்களேன்" வலியும் கோபமுமாகப் பேசுகிறார் பச்சையம்மாள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விவரம் தெரிஞ்ச நாளில் இருந்தே இந்தப் பகுதியில்தான் வாழ்ந்துட்டு இருக்கோம். அரசாங்கம் பட்டா கொடுக்கலைனாலும் இது எங்களோட இடம்தான். இதுல எங்க ஆளுங்களோட உடம்பைப் புதைக்கக்கூட அனுமதியில்லையா? அடக்கம் செய்யணும்னா பட்டா வேணுமாம். பட்டா வாங்க எத்தனையோ நாள் கலெக்டர் ஆபீஸ் ஏறி இறங்கியாச்சு. அப்போ வாங்க இப்போ வாங்கனு இழுத்து அடிச்சுட்டு இப்போ பதிலே சொல்ல மாட்றாங்க.

 சின்னப்பையன்
சின்னப்பையன்

சாதிச்சான்றிதழ் இல்லைனு இப்பவரை எங்க இடத்துக்கு பட்டா கொடுக்கல. எத்தனையோ போராட்டத்துக்கு அப்புறம் இப்போ தான் ரேஷன் கார்டும், ஆதார் கார்டுமே கொடுத்துருக்காங்க. இன்னும் பட்டா வாங்க எத்தினி வருஷம் அல்லாடணும்னு தெரியல.

எங்க சனங்க கூலி வேலைக்குக் காலையில கிளம்பிப் போனா சாயங்காலம்தான் வீடு திரும்பும். நேத்து எங்க வீட்டுக்காரருக்கு உடம்பு சரியில்லைனு. நாங்க ரெண்டு பேரும் வேலைக்குப் போகல. திடீர்னு காலையில் 11 மணிக்கு நெஞ்சு வலியில் துடிச்சுப் போயிட்டாரு. எங்க பகுதியில பஸ் எதுவும் நிக்காது. இங்க இருந்து ஆஸ்பத்திரிக்குப் போகணும்னா ரொம்ப தூரம் நடக்கணும். என்ன பண்றதுனு யோசிக்கிறதுக்குள்ள உசுரு போயிருச்சு" கண்ணீர் பொங்குகிறது பச்சையம்மாளுக்கு.

``வேலைக்குப் போன என் புள்ளைக்குத் தகவல் சொல்லிவிடவே படதாபாடு பட்டுட்டேன். எங்க பகுதியில் யாராவது இறந்தா புதைக்கிறதுதான் வழக்கம். இங்கே இருக்கிற ஏரிக்கரையில்தான் புதைப்போம். ஆனால் இப்போ ஏரி முழுக்கத் தண்ணீ நிறைஞ்சு இருக்கு. அதனால் அங்க புதைக்க முடியல.

வேற எங்காவது புதைக்கணும்னா அரசாங்கத்துல அனுமதி கேட்கணும்னு சொல்றாங்க. சரி உடம்பை ஐஸ் பெட்டியில் வைக்கலாம்னா கரன்ட் வசதி இல்ல. என்ன பண்றதுனு தெரியாமல் உடம்பை வாசலில் போட்டு வெச்சுருக்கோம்" என்கிறார் அழுகையை அடக்க முடியாமல்.

 சின்னப்பையன்
சின்னப்பையன்

இதுகுறித்து அந்தப்பகுதியில் உள்ள பழங்குடி இருளர் மேம்மாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் வேளாங்கண்ணியிடம் பேசினோம். ``அரசாங்கத்துக்கிட்ட எத்தனையோ முறை மனு கொடுத்தாச்சு. எந்த நடவடிக்கையும் எடுக்கல. இப்போ பெரியவரோட உடம்பைப் புதைக்க ஊர் தலைமை பொறுப்பில் இருக்கவங்ககிட்ட பேசிட்டு இருக்கோம். உடம்புல இருந்து துர்நாற்றம் அடிக்க ஆரம்பிச்சுருச்சு. வேற வழியே இல்லைனா ஏரிக்கரையில ரெண்டு அடி ஆழம் மட்டும் தோண்டி அடக்கம் செய்யணும். அரசாங்கம் இவங்களுக்கு அங்கீகாரம் கொடுக்கலைனாலும் பரவாயில்ல அடிப்படை வசதிகள் மட்டுமாவது செய்து கொடுக்கணும். இவங்களையும் மனுஷங்கள மதிக்கணும்" எனத் தீர்க்கமாகச் சொல்கிறார் ஆல்பர்ட்.

இதற்கிடையே, இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை எஸ்.பி அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

”சம்பந்தப்பட்ட அந்த ஏரிக்கரை இடுகாட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை. பழங்குடி இருளர் இனத்தைச் சேர்ந்த சின்னப் பையன் என்பவர் கடந்த 19-ம் தேதி இறந்துவிட்டார். அவரின் மகன் நாகப்பன் எங்கே வேலை செய்கிறார் என்ற விபரமே அவர்களுக்குத் தெரியவில்லை. அதன்பிறகு ஆவடிக்கு அருகே இருக்கும் கண்டிகை என்ற பகுதியில் செங்கல் சூளையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த அவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மறுநாள் (20-ம் தேதி) சம்பந்தப்பட்ட அதே ஏரிக்கரை இடுகாட்டில் அவர்கள் வழக்கப்படி சின்னப் பையனின் உடலை அடக்கம் செய்துவிட்டார்கள்.”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு