Published:Updated:

நடனக் கலைஞர் `கலைமாமணி’ ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்டாரா?! - பின்னணி என்ன?

ஸ்டாலினுடன் ஜாகிர் உசேன்
News
ஸ்டாலினுடன் ஜாகிர் உசேன்

``பிறப்பால் இஸ்லாமியனாக இருந்தாலும் வாழ்வில் ஒரு வைணவனாகவே வாழ்ந்துவரும் நான் பல வைணவத் திருத்தலங்களின் திருப்பணிகளை செய்திருக்கிறேன்."

திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குள் செல்ல முயன்ற கலைமாமணி விருதுபெற்ற பிரபல நடனக் கலைஞர் ஜாகிர் உசேனை, இஸ்லாமியர் என்பதற்காகக் கோயிலுக்குள் நுழையவிடாமல் அவரை வெளியே தள்ளிய விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

கடந்த 30 ஆண்டுகளாக ஒரு பரத நாட்டியக் கலைஞராகவும், வைணவ சொற்பொழிவாளராகவும் இருந்துவருபவர் ஜாகிர் உசேன். இவர் இந்திய அரசின் `சமூக நல்லிணக்க விருது’, தமிழ்நாடு அரசின் `கலைமாமணி விருது’, `நாட்டியச் செல்வன்’ உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவர் நேற்று மதியம் சுமார் 1:30 மணியளவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக வந்திருக்கிறார். அப்போது கோயில் வாயிலருகே இருந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், மதத்தின் பெயரைச் சொல்லி ஜாகிர் உசேனைக் கோயிலுக்குள் நுழையவிடாமல் விரட்டியடித்ததாகச் சொல்லப்படுகிறது.

ஜாகிர் உசேன்
ஜாகிர் உசேன்

இது குறித்து தனக்கு நேர்ந்த அவமானத்தையும் அநீதியையும் ஜாகீர் உசேன் தன்னுடைய முகநூலில், `முதன்முறையாக நான் இந்த மதத்துக்குத் தொடர்புடையவன் அல்ல என ஒரு மிகப்பெரும் சமூகமே பார்த்துக்கொண்டிருக்க, அரங்கனைக் காண தடைசெய்யப்பட்டு பல அவமானங்களுக்கிடையே துரத்தப்பட்டேன். இந்தக் காயம் என்னை என்றென்றும் உறுத்திக்கொண்டேயிருக்கும்’ என வருத்தத்துடன் பதிவிட, பெரும் பரபரப்பு உண்டானது.

மேலும், இது சம்பந்தமாக ஜாகிர் உசேன் திருச்சி மாநகர காவல் ஆணையரிடம், `பிறப்பால் இஸ்லாமியனாக இருந்தாலும், வாழ்வில் ஒரு வைணவனாகவே வாழ்ந்துவரும் நான் பல வைணவத் திருத்தலங்களின் திருப்பணிகளை செய்திருக்கிறேன். நேற்று நண்பகல் அமைதியான முறையில் திருவரங்கம் அரங்கநாதரை தரிசிக்க கோயிலுக்குள் சென்ற என்னை ரங்கராஜன் நரசிம்மன் எனும் நபரால் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு மத, சாதி அடையாளத்தைக் கொச்சையாக, தகாத சொற்களால் பேசி ஆலயத்துக்குள் நுழையவிடாமல் நெட்டித்தள்ளி வெளியேற்றப்பட்டேன். சம்பவம் நடந்தபோது அங்கு பல பக்தர்கள், கோயில் நிர்வாகிகள் இருந்தனர். சம்பவம் அங்குள்ள கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகியிருக்கிறது. இதுநாள்வரை திருவரங்கக் கோயில் நிர்வாகிகளும், கோயில் அர்ச்சகர்களும் என் பிறப்பின் அடிப்படையில் எனக்கு அனுமதி மறுத்ததில்லை.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மருத்துவமனையில் ஜாகிர் உசேன்
மருத்துவமனையில் ஜாகிர் உசேன்

ஆனால், சம்பவம் நடந்தபோது யாரும் அவரைத் தடுக்கவும் இயலவில்லை. எல்லோரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். காரணம், என்னை மதத்தின் பெயரால் மிகவும் சத்தம் போட்டு கூட்டத்தில் பிரிவினையை ஏற்படுத்தியதே ஆகும். அவமானத்தால் கூனிக் குறுகி எம்பெருமான் அரங்கநாதனின் கோயிலிலிருந்து வெளியேறினேன். அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்றிரவு சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலிக்கு சிகிச்சை பெற்று திரும்பினேன். எனக்கெதிராக ஒரு தீண்டாமையை நிகழ்த்தி, இந்திய இறையாண்மைக்கும் மத நல்லிணக்கத்துக்கும் எதிராக செயல்பட்டதற்கும் சம்பந்தப்பட்ட ரங்கராஜன் நரசிம்மனை உடனடியாகக் கைதுசெய்து விசாரித்து, உரிய நீதி வழங்கிட வேண்டும்’ எனப் புகார் கொடுத்துள்ளார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

`இந்தவிவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். என்ன நடந்தது என ஜாகிர் உசேனிடம் பேசினோம். ``நான் ரெகுலரா ரங்கநாதரை தரிசனம் செய்யப் போவேன். இதுவரைக்கும் மதம் அது இதுன்னு யாரும் சொன்னதும் இல்லை. இப்படியான சம்பவமும் நடந்தது இல்லை. ஆனா, ரங்கராஜன் நரசிம்மன் என்னும் நபர் வைணவத்தை காப்பாத்துறேன்னு கோயில் முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு அராஜகம் பண்ணிட்டு இருக்காரு. மனுசங்களை மனுசனா மதிக்காத அநியாயத்தின் உச்சகட்டமாக எனக்கு அந்தச் சம்பவம் நடந்தது.

ஜாகிர் உசேன்
ஜாகிர் உசேன்

நேத்து மதியம் ஒன்றரை மணி இருக்கும். ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சாமி தரிசனத்துக்காக நான் போனப்ப, `ஜாகிர் உசேன் தானே நீ!... நீ எப்படி உள்ளே வரலாம். வெளிய போடா. உள்ளே வந்தே... நான் என்ன செய்வேன்னு தெரியாது’ன்னு ரங்கராஜன் நரசிம்மன் என்னை மிரட்டுனாரு. எனக்கு அதிர்ச்சியோட சேர்ந்து பெரிய அவமானமும் உண்டாச்சு. உலகம் முழுக்கப் போய் ஆடிட்டு வந்துருக்கேன். கலைஞர் கையால கலைமாமணி விருது வாங்கியிருக்கேன். ஜெயலலிதா இருக்கறப்ப உலகத் தமிழ் மாநாட்டுல பர்ஃபார்ம் பண்ணியிருக்கேன். கலைஞர் அய்யா இருக்கும்போது தஞ்சை பெரிய கோயில் 1,000-வது ஆண்டு சதயவிழா கொண்டாடுனப்ப எனக்குன்னு தனி புரோகிராம் கொடுத்தாங்க. அப்படியிருக்க, இந்த அவமானம் கொடுத்த அதிர்ச்சியிலயிருந்து மீள முடியலை. கடுமையான மன உளைச்சலால் பிரஷர் ஏறிடுச்சு. இது சம்பந்தமாக அமைச்சர் சேகர் பாபு அவர்கள் விசாரணை நடத்த உத்தரவிட்டதோட, எனக்கு போன் செஞ்சு `நடந்ததுக்கு நான் வருத்தம் தெரிவிச்சுக்குறேன். நிச்சயமாக தப்பு செஞ்சவங்க மேல நடவடிக்கை எடுப்போம்’னு சொல்லியிருக்காங்க” என்றார்.

ஜாகிர் உசேன் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட சம்பவத்துக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என கோயில் நிர்வாகம் தரப்பிலிருந்து விளக்கம் கொடுத்துள்ளனர். இது சம்பந்தமாக, அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது எனத் தெரிந்துகொள்ள ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் மாரிமுத்து அவர்களை அழைத்தோம். பலமுறை அழைத்தும், மெசேஜ் அனுப்பியும் அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. அவர்கள் விளக்கம் தரும் பட்சத்தில் உரிய பரிசீலனைக்குப் பின்னர் அதையும் பதிவிடத் தயாராக இருக்கிறோம்.