Published:Updated:

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இ-பாஸ் நிறுத்தம்? -கொரோனா பரவலால் `திடீர்' நடவடிக்கை

இ-பாஸ்
இ-பாஸ்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு இ-பாஸ் வழங்குவதை நிறுத்த வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஜூன் 10-ம் தேதி நிலவரப்படி 36,841 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், 19,333 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தமிழகத்தின் பெரும்பான்மையான பாதிப்பு சென்னையிலேயே உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதனால், சென்னையில் நோய்ப் பரவலைத் தடுக்க நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.

 சென்னை
சென்னை
`ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 31 மருத்துவப்  பணியாளர்களுக்கு கொரோனா!' -சென்னையில் தொடரும் அதிர்ச்சி

சென்னையைத் தனிமைப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகள் மட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து தலைமைச் செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, ``சென்னை முழுவதையும் தனிமைப்படுத்துவது தொடர்பாக முதல்கட்ட விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் உத்தரவு பிறப்பிக்கப்படலாம். சென்னையைத் தனிமைப்படுத்துவது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளும் தீவிரமாகப் பேசி வருகின்றனர். கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் மாவட்டங்களில், தெருவுக்குத் தெரு விஜிலென்ஸ் கமிட்டி போடப்பட்டது போல, சென்னையிலும் தீவிரமாக அமல்படுத்துவது குறித்தும் பேசப்பட்டு வருகிறது’’ என்றனர்.

அதேபோல், சென்னையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு உத்தரவை தீவிரமாக அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வழக்குகள் பட்டியலிடப்பட்டு விசாரிக்கப்பட்டன.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இன்று பட்டியலிடப்பட்ட வழக்குகளை விசாரித்து முடித்த பின்னர் நீதிபதிகள், தமிழக அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணனிடம், `தமிழகத்தில் கொரோனா தொற்று 36,000-த்துக்கும் அதிகமானோருக்கு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக சென்னையில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன?’ என்று கேள்வி எழுப்பினர். தாமாக முன்வந்து வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதிகள் குடிமகனாக, பொதுமக்களின் நலனின் அக்கறை கொண்டு இந்தக் கேள்வியை எழுப்பியதாகத் தெரிவித்தனர்.

மேலும், சென்னையில் ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தத் திட்டம் இருக்கிறதா என்றும் ஊரடங்கு தொடர்பாக தற்போதைய நடவடிக்கைகளில் மாற்றம் எதுவும் செய்யப்பட இருக்கிறதா என்றும் கேள்வியை முன்வைத்தனர். இதுதொடர்பாக அரசிடம் விளக்கம் கேட்டு நாளை பதிலளிக்கும்படி அரசு வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் அவகாசம் கொடுத்தனர்.

சென்ட்ரல் ரயில் நிலையம் - சென்னை
சென்ட்ரல் ரயில் நிலையம் - சென்னை

இந்தநிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் இ-பாஸ் வழங்குவதை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு இந்த மாவட்டங்களில்தான் அதிகம் என்பதால், இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சென்னைக்குள் நுழைய, வெளியேறத் தடையா... இ பாஸ் நிறுத்தமா? - நிஜ நிலவரம் என்ன?

இதுதொடர்பாக, துறை அதிகாரிகளுக்கு இந்த உத்தரவு வாய்மொழியாகவே பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் சொல்கிறார்கள். நான்கு மாவட்டங்களில் இ-பாஸ் வழங்குவது நிறுத்தம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

சென்னை
சென்னை

தமிழகத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. உணவுப் பொருள்கள், அவசரத் தேவை உள்ளிட்டவைகள் தவிர மற்றவர்கள் இ-பாஸ் வாங்க வேண்டியது அவசியம். தற்போதைய சூழலில், இறப்பு, திருமணம், மருத்துவத் தேவை மற்றும் வெளியூரிலிருந்து வேலைக்காக வந்து சிக்கிக்கொண்டவர்கள் என நான்கு பிரிவுகளில் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், குறிப்பிட்ட இந்த 4 மாவட்டங்களில் மருத்துவத் தேவை தவிர பிற தேவைகளுக்காக இ-பாஸ் வழங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு