கேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர், கூடுதலாக டெலிவரி சார்ஜ் கேட்டால் கொடுக்கலாமா? #DoubtOfCommonMan

வீட்டில் காஸ் சிலிண்டர் Door delivery செய்யும்போது delivery charge என்ற பெயரில் பணம் கேட்கிறார்கள். delivery charge நுகர்வோர் கொடுக்க வேண்டுமா அல்லது காஸ் ஏஜென்சி கொடுக்க வேண்டுமா?
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில், ``வீட்டில் காஸ் சிலிண்டர் Door delivery செய்யும்போது delivery charge என்ற பெயரில் பணம் கேட்கிறார்கள். delivery charge நுகர்வோர் கொடுக்க வேண்டுமா அல்லது காஸ் ஏஜென்சி கொடுக்க வேண்டுமா?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார் வாசகர் ஆறுமுகப்பெருமாள். அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.
நாடு முழுவதும் மானியமில்லாத காஸ் சிலிண்டரின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களில் எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் விலை உயர்த்தப்படுவது இது ஆறாவது முறையாகும். கடைசியாகக் கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று மானியமில்லாத சிலிண்டரின் விலை 19 ரூபாய் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன்படி, சென்னையில் கடந்த மாதம் முழுவதும் மானியமில்லா சிலிண்டர் விலை 734 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் சென்னையில் சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் 147 ரூபாய் உயர்த்தப்பட்டு 881 ரூபாயாக உயர்ந்துள்ளது. சமையல் காஸ் சிலிண்டர் விலை வரலாறு காணாத உச்சம் தொட்டிருக்கும் நிலையில் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவரும் மானியமும் முறையாகக் கிடைப்பதில்லை என நுகர்வோர் மத்தியில் குற்றச்சாட்டுகளும் நிலவி வருகின்றன.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, வீட்டுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை டெலிவரி செய்யும் நபருக்கு பில்லில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகையைத் தாண்டி கூடுதல் டெலிவரி சார்ஜ் கொடுக்க வேண்டுமா, வேண்டாமா? இல்லையென்றால் டெலிவரி சார்ஜை அந்த நபருக்கு யார் தர வேண்டும் நுகர்வோரா இல்லை ஏஜென்சியா என்ற கேள்வி மக்கள் மனதில் நீண்ட காலமாக நிலவிவருகிறது.
இந்தக் கேள்வியை `Consumer Association of India' அமைப்பின் துணை இயக்குநர் M.R.கிருஷ்ணனிடம் கேட்டோம், ``சமையல் காஸ் டோர் டெலிவரிக்கு (Door Delivery) நுகர்வோர் தரப்பில் எந்த டெலிவரி சார்ஜும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பில்லில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டும் செலுத்தினாலே போதுமானது. சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு டெலிவரி சார்ஜ் எதுவும் கிடையாது அது `Free Delivery'தான். நுகர்வோர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் ஆரம்பத்தில் கொடுத்து பழக்கப்படுத்திவிட்டனர். அது தற்போது இயற்றப்படாத சட்டமாகிவிட்டது.
பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த தொகையில் டெலிவரி சார்ஜும் அடங்கும். எனவே, தனியாக எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

டெலிவரி செய்யும் நபருக்கு பில்லில் குறிப்பிட்டுள்ள தொகையை மட்டும் அளித்தால் போதும். பில்லில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த தொகையில் டெலிவரி சார்ஜும் அடங்கும். எனவே, தனியாக எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. மேலும், காஸ் சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு அவரவர் பணி புரியும் காஸ் ஏஜென்சிகள் கொடுக்கும் சம்பளத்தில் அந்த டெலிவரி தொகையும் அடங்கும்.
நுகர்வோர் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் டெலிவரி சார்ஜ் கொடுக்கலாம். ஆனால், எந்த வகையிலும் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அப்படி யாரேனும் டெலிவரி சார்ஜ் கேட்டு நுகர்வோரைக் கட்டாயப்படுத்தினால், நுகர்வோர் சட்ட ரீதியாக வழக்கு தொடரலாம். அதற்கு சட்டத்தில் இடம் உண்டு" என்றார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவு செய்யுங்க!