Published:Updated:

சத்துணவை மாணவர்களின் வீடுகளுக்கே கொடுப்பது சாத்தியமா?  - ஓர் அலசல்!

சத்துணவுத் திட்டம்
சத்துணவுத் திட்டம்

அவசரக்கால ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி ஏற்படும்போது அதற்கேற்றவாறு திட்டமிட்டு அரசாங்கம் செயல்பட வேண்டாமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சீனாவில், தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம், தற்போது சர்வதேசப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த நோய் தாக்கத்தால் இதுவரை உலகம் முழுவதும் 360 மில்லியனுக்கும் மேற்பட்ட, குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை என யுனெஸ்கோ ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவுத் திட்ட அமைப்பும், 300 மில்லியன் குழந்தைகள் சத்துணவுத் திட்டத்தின்படி உணவு கிடைக்காமல் இருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளன. அந்த குழந்தைகளுக்கு வீட்டுக்கே சென்று உணவுகளை வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நோய் தாக்கத்திலிருந்தும், பாதுகாக்க அவர்களுக்கு ஊட்டச்சத்துள்ள உணவை, அந்தந்த நாடுகள் வழங்க வேண்டிய, அவசியம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் சத்துணவுப் பொருள்களை வீட்டுக்கே சென்று வழங்கி வருகின்றன. இதில் கேரள அரசு 1000 இடங்களில் உணவுகளைத் தயாரித்துக் குறைந்த விலையில் வழங்கி வருகின்றன. இதேபோன்ற திட்டத்தைத் தமிழக அரசு தொடர வேண்டும் என்று கல்வியாளர்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள் செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தேவநேயன்
தேவநேயன்
`கொரோனா விடுமுறையை பிள்ளைகள் இப்படிப் பயன்படுத்தலாம்!’ - அரசுப் பள்ளி தலைமையாசிரியரின் யோசனை

இதுகுறித்துப் பேசிய, குழந்தைகள் உரிமை செயற்பாட்டாளர் `தோழமை' தேவநேயன், ``தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அங்கன்வாடி மையங்களில் மட்டும் குழந்தைகளுக்கான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளதைச் செய்தித்தாள்களில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். அப்படி என்றால், மற்ற குழந்தைகளின் நிலை என்ன? பெரும்பாலும் கிராமப்புற மாணவர்கள் மற்றும் நகர்ப்புற குடிசை வாழ் மாணவர்கள் எனப் பலரும் சத்துணவுத் திட்டத்தை நம்பியுள்ளனர். அவர்களுக்கும் சத்தான ஊட்டச்சத்துள்ள உணவை இந்த நேரத்தில் வழங்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மேலும், பட்டினியாக அந்தக் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்துவிடும். அதனால், எளிதில் அவர்களுக்கு இந்த வைரஸ் தாக்கும் என்ற அச்சம் உள்ளது. எனவே, இதற்காகத் தமிழக அரசு புதியதாக ஒரு திட்டத்தை வகுத்து, நடைமுறைப்படுத்துவதைவிட, ஒரு பள்ளியில் எத்தனை மாணவர்கள், சத்துணவை நம்பி இருக்கிறார்கள் என்ற பட்டியலைத் தயாரித்து அதற்கேற்றவாறு ரேஷன் கடைகள் அல்லது பள்ளிகள் மூலமாக உணவுப்பொருள்களை வழங்கலாம்.

கை கழுவும் விழிப்புணர்வை ஏற்படுத்திவிட்டால் போதுமா? அவசரகால ஒரு மெடிக்கல் எமர்ஜென்சி ஏற்படும்போது அதற்கேற்றவாறு திட்டமிட்டு அரசாங்கம் செயல்பட வேண்டாமா?

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கும்போதே, இந்தத் திட்டத்தையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். கேரளா போன்ற மாநிலங்களில் நடைமுறையாகும் போது ஏன் தமிழகத்தில் மட்டும் சாத்தியமில்லை. யாரை முதலில், இந்த நோய்த் தாக்கத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து அரசாங்கத்துக்குத் தெரியாதா? எனவே, வளரும் இளம் பருவத்தினரின் நலனை உணர்ந்து, அவர்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை" என்றார்.

டெய்ஸி
டெய்ஸி

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.டெய்சி பேசுகையில், ``தமிழகம் முழுவதும் சுமார் 54,000 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. கொரோனா காரணமாக இந்த மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு அடுத்த 15 நாள்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு , எண்ணெய் மற்றும் முட்டைகள் உள்ளிட்ட உணவுப் பொருள்களை வழங்கி இருக்கிறோம்" என்றார்.

சுந்தரம்மாள்
சுந்தரம்மாள்

இது குறித்துப் பேசிய தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநிலத்தலைவர் ப.சுந்தரம்மாள், `கொள்முதல் செய்யப்பட்ட முட்டைகள் வீணாகும் என்பதால், உடனடியாக மாணவர்களுக்கு வழங்கும்படி உத்தரவு வந்தது. இதையடுத்து, மாணவர்களை வரவழைத்து முட்டைகளை வழங்கியுள்ளோம். அங்கன்வாடியில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களை வழங்கியுள்ளது அரசு. அங்கன்வாடி மட்டுமல்லாது பள்ளியிலும் வழங்கும்படி அறிவுறுத்தப்பட்டால் அந்தப்பணியைச் செய்வோம்" என்றார்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு பேசுகையில், ``சத்துணவை நம்பியுள்ள மாணவர்களைக் கண்டறிந்து ரேஷன் கடைகள் மூலம் உணவுப் பொருள்கள் வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடியில் உணவுப் பொருள்கள் வழங்கும்போது பள்ளியிலும் வழங்க முடியும். எனவே, அதற்கான உத்தரவைத் தமிழக அரசு வழங்க வேண்டும்" என்றார்.

சத்துணவுத் திட்டம்
சத்துணவுத் திட்டம்

இது குறித்து பள்ளிக் கல்வித்துறைச் செயலர் தீரஜ்குமாரிடம் பேசியபோது, ``சத்துணவுத் திட்டத்தை சமூக நலத்துறை தான் செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக அந்தத் துறையில் எங்களுடன் இதுவரை ஆலோசனை செய்யவில்லை. இது குறித்து அரசின் உயர் மட்டத்தில் பேசுகிறேன்" என்றார்.

இதைத் தொடர்ந்து சமூகநலத்துறை அமைச்சர் வி.சரோஜாவைத் தொடர்புகொண்டபோது அவர் நமது அழைப்பை ஏற்கவில்லை. இந்த நிலையில் அத்துறைச்செயலரைத் தொடர்புகொள்ள முயன்றும் அழைப்பை ஏற்கவில்லை. அவர்கள் பதிலளித்தால் பிரசுரிக்கத் தயாராகவே உள்ளோம்.

``கொரோனாவால் வீட்டில் தனிமை... உருவாகும் மனஅழுத்தம்!"- எதிர்கொள்வது எப்படி? #FightCovid19
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு