Published:Updated:

``டெஸ்ட் எடுக்காதவரை உள்ள தூக்கிப் போட்டுட்டாங்க!” - வைரல் வீடியோவும் உண்மை பின்னணியும்

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

பரிசோதனையே செய்யாத ஒருவரை ஏன் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் வைக்க வேண்டும்? இவர் பரிசோதனையே செய்யவில்லை என்றால் அவரது போன் நம்பர் மற்றும் பெயர் உள்ளிட்ட விவரங்கள் எப்படி மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியவரும்?

`இந்த நீதிமன்றம் விசித்திரமான பல வழக்குகளைச் சந்தித்துள்ளது' என்ற பராசக்தி பட வசனத்தைப்போல, சென்னை மாநகராட்சியும் ஸ்டான்லி மருத்துவமனையும் தற்போது ஒரு விசித்திரமான சிக்கலை எதிர்கொண்டிருக்கின்றன. கொரோனா பரிசோதனையே செய்யாத தன் தம்பியை மருத்துவமனையில் அடைத்துவிட்டதாகவும் கேட்டால் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைச் சொல்லி சுற்றவிடுவதாகவும் சென்னையைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் சமூகவலைதளத்தில் பதிவிட்ட வீடியோதான் இந்தப் பிரச்னைக்கான காரணம். 26-ம் தேதி சமூகவலைதளத்தில் வெளியான அந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

வீடியோவில் பிரகாஷ்
வீடியோவில் பிரகாஷ்

செல்போன் கடைக்குள்ளிருந்து முகக்கவசம் அணிந்தபடி வீடியோவில் பேசும் அந்த நபர், ``என் பேரு பிரகாஷ். சென்னை சௌகார்பேட்டையிலிருந்து பேசுறேன். என் தம்பி பேரு தர்காராம். பக்கத்துலதான் கடை வெச்சுருக்கான். நேத்து ஸ்டான்லி ஹாஸ்பிடல்ல இருந்து அவனுக்கு போன் பண்ணி, உங்களுக்கு டெஸ்ட் எடுக்கணும், உடனே வாங்கன்னு கூப்பிட்டாங்க. அவனும் ஹாஸ்பிட்டலுக்குப் போயிருக்கான். அங்க போனா உங்களுக்கு கொரோனா இருக்குன்னு சொல்லி உள்ளே தூக்கிப் போட்டுட்டாங்க. அவனை யாருக்கும் போன் பண்ண விடலை.`டெஸ்ட்டே எடுக்கலை. என்னை ஏன் உள்ள போட்டீங்கனு கேட்டதுக்கு, எங்களுக்கு ரிப்போர்ட் வந்திருக்கு; பத்து நாள் நீங்க இங்க இருந்துதான் ஆகணும்னு சொல்லிருக்காங்க. அவன் சொல்றதை யாரும் கேட்கலை.

அதுக்கு அப்புறம் என் தம்பி எனக்கு அங்கிருந்து எனக்கு போன் பண்ணி நடந்ததைச் சொன்னான். `டெஸ்ட் எடுத்தியா?’ன்னு கேட்டேன். `டெஸ்ட்டெல்லாம் எடுக்கலை. ஆனா, உள்ள தூக்கிப் போட்டுட்டாங்க’ன்னு சொன்னான். சரி, இருடா நான் விசாரிக்கிறேன்னு சொல்லிட்டு கார்ப்பரேஷன்காரங்ககிட்ட விசாரிச்சேன். நாங்க டெஸ்ட் எடுக்கலை. ஆனா, தர்காராம்ங்கிற பேருக்கு மயிலாப்பூர் லேப்ல இருந்து கொரோனா பாசிட்டிவ்னு ரிப்போர்ட் வந்திருக்கு. அந்த ரிப்போர்ட்டை வெச்சுதான் உள்ள வெச்சுருப்பதா சொன்னாங்க. சரி, மயிலாப்பூர் லேப் நம்பர் இருந்தா கொடுங்க நான் கேட்கிறேன்னு கேட்டதுக்கு, அதெல்லாம் தர முடியாதுன்னு சொல்லிட்டாங்க. அடுத்து கார்ப்பரேஷன் ஆபீஸ்க்கு போனேன். அங்கே செக் பண்ணிட்டு, இது மயிலாப்பூர் கிடையாது. ஆண்டர்சன் டயக்னாஸ்டிக் லேப்னு சொன்னாங்க.

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி
அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

உடனே அந்த போன் நம்பர் வாங்கி அங்கே விசாரிச்சேன். இங்க அப்படி யாரும் டெஸ்ட் எடுக்கலைன்னு சொல்லிட்டாங்க. நான் மறுபடியும் கார்ப்பரேஷன் ஆபீஸுக்கு போன் பண்ணேன். அப்போ, தப்பா சொல்லிட்டோம் சார். உங்க தம்பிக்கு அயனாவரத்துல இருந்து ரிசல்ட் வந்திருக்குன்னு சொன்னாங்க. அப்புறம் அங்க விசாரிச்சேன்… இங்க யாரும் எடுக்கலைன்னு சொன்னாங்க. அங்கிருந்து திரும்பவும் கார்ப்பரேஷனுக்கு போன் அடிச்சா… சார் திரு.வி.க நகரில் இருந்து வந்திருக்குனு சொன்னாங்க. `என்ன சார் ஆள சுத்தவிடறீங்க. அவனுக்கு டெஸ்ட் எடுக்கல கேட்டா மயிலாப்பூர், அயனாவாரம், திரு.வி.க நகர்னு சொல்றீங்கனு கேட்டேன். அதுக்கு, `சார்… நாங்க எங்க கடமையைத்தான் செய்யறோம். என்னை எதுவும் கேட்காதீங்க'ன்னு சொல்லிட்டு வெச்சுட்டார்.

உடனே நான் சி-5 ஸ்டேஷன் கொத்தவால் சாவடியில போய் கம்ப்ளைன்ட் கொடுக்கப்போனேன். ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்ல ஒரு ஆர்.எம்.ஓ இருக்காரு. நீங்க அங்கபோய் ஒருமுறை விசாரிச்சுட்டு வந்து கம்ப்ளைன்ட் கொடுங்கன்னு சொன்னாங்க. உடனே ஸ்டான்லி ஹாஸ்பிட்டல்ல போய் விசாரிச்சேன். இது எங்க கையில கிடையாது. உங்க ஏரியா கார்ப்பரேஷன் ஆபீஸர் ரிப்போர்ட் அடிப்படையிலதான் இங்க வெச்சுருக்கோம். அப்புறம் கொஞ்ச நேரம் கழிச்சு கார்ப்பரேஷன் ஆபீஸ்ல இருந்து எனக்குப் போன் பண்ணி, `சார் உங்க தம்பி வந்து ரெண்டு மூணு நாள் இருக்கட்டும். திங்கள்கிழமை வந்துடுவார்னு சொன்னாங்க.

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சி

`சார், அவன் டெஸ்ட்டே எடுக்கலை. அவனை ஏன் சார் அடைச்சு வெச்சுருக்கீங்க? நீங்க வேணும்னா இப்போ டெஸ்ட் எடுங்க ரிப்போர்ட் வந்தா உள்ள தூக்கிப் போடுங்க, இல்ல ஹோம் க்வாரன்ட்டீன்ல வையுங்க'ன்னு சொன்னேன். இல்ல சார் ஏதோ தப்பு நடந்துபோச்சு. இப்போ ஒண்ணும் பண்ண முடியாது. மூணு நாள் இருந்துதான் ஆகணும்னு சொல்லிட்டாங்க. காலையில இருந்து சுத்திகிட்டு இருக்கேன். ஆனா, எந்த சப்போர்ட்டும் கிடைக்கலை. இது நாளைக்கு உங்களுக்கும் நடக்கலாம். என் தம்பி மனைவி இரண்டு நாளா சாப்பிடாம அழுதுகிட்டிருக்காங்க. இதை எல்லாருக்கும் ஷேர் பண்ணுங்க. எல்லாருக்கும் தெரிய வையுங்க என் தம்பிக்கு நியாயம் கிடைக்கணும்” என்கிறார்.

பரிசோதனையே செய்யாத ஒருவரை ஏன் வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் வைக்க வேண்டும்? இவர் பரிசோதனையே செய்யவில்லை என்றால் அவரது போன் நம்பர் மற்றும் பெயர் உள்ளிட்ட விவரங்கள் எப்படி மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியவரும்? இப்படி ஏராளமான குழப்பங்கள் நிலவ இதுகுறித்து ஸ்டான்லி மருத்துவமனையின் டீன் பாலாஜியிடம் கேட்டோம், ``அந்தச் செய்தி முற்றிலும் பொய்யானது. இதுகுறித்து காவல்நிலையத்திலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தர்காராம் மாகநகராட்சியில் கொரோனா பரிசோதனை செய்திருக்கிறார்.

Swab Test
Swab Test
`உரிமைத் தொகை ரூ.1,000 எல்லோருக்கும் கிடைக்காதா?' காயத்ரி ரகுராம் ட்வீட்; உண்மை என்ன?

ஆனால், அதுகுறித்து குடும்பத்தினரிடம் தெரிவிக்கவில்லை. அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் இல்லை. ஸ்டான்லி மருத்துவமனை கண்காணிப்பில் உள்ள கொரோனா கேர் சென்டரில்தான் இருக்கிறார். தர்காராமுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்ற பரிசோதனைகளில் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆகையால், அவர் ஹோம் க்வாரன்ட்டீனுக்கு அனுப்பப்படவிருக்கிறார். இதற்கிடையில் தவறான தகவலை சமூகவலைதளத்தில் பரப்பியதால் பிரகாஷ்மீது அவதூறு பரப்புவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது” என்றதுடன் அதற்கான ஆவணங்களையும் அனுப்பினார்.

இதற்கடுத்து தர்காராமை தொடர்புகொண்டு விசாரித்தோம். ``நான் கொரோனா பரிசோதனையே செய்யவில்லை” என்று அடித்துச் சொன்னார்.

இதற்கடுத்து நகர சுகாதார அதிகாரியான ஜெகதீசனிடம் பேசினோம்.``டெஸ்ட் எடுக்காத ஒருவரை நாங்கள் ஏன் அழைத்து வர வேண்டும்? நீங்களே யோசித்துப்பாருங்கள். அவருடைய போன் நம்பரும் பெயரும் எங்களுக்கு எப்படித் தெரியும்? டெஸ்ட் கொடுக்கும்போதே அவர் வேறொரு முகவரியைக் கொடுத்திருக்கிறார். போன் அடித்து விசாரித்ததும்தான் உண்மையான முகவரியைக் கூறியுள்ளார். இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது தனக்கு கொரோனா இருப்பது தெரிந்தால் வீட்டில் ஏதாவது சிக்கல் ஆகிவிடுமோ என்ற அச்சத்தில்தான் அவர் அப்படிச் சொல்லியிருக்கக் கூடும். மற்றபடி அந்த வீடியோவில் கூறப்பட்டுள்ளதைப்போல எதுவும் நடக்கவில்லை” என்றார்.

பரிசோதனை செய்யாமல் எப்படி போன் நம்பரும் பெயரும் தெரியும் என்று கேட்டால், தன் கஸ்டமர்கள் யாராவது விசிட்டிங் கார்டைப் பார்த்து சொல்லியிருக்கலாம் எனப் பதிலளிக்கிறார் தர்காராம்.

அவதூறு பரப்பியதாக புகார்
அவதூறு பரப்பியதாக புகார்
Covid Questions: ஆரோக்கியமான டயட்; வெளியேவும் செல்வதில்லை; நானும் தடுப்பூசி போடவேண்டுமா?

யாரோ ஒரு கஸ்டமர் எதற்கு கொரோனா பரிசோதனை செய்துவிட்டு தர்காராமின் போன் நம்பரையும் பெயரையும் கொடுத்துவிட்டு வர வேண்டும். தவிர, பிரகாஷ் வீடியோவில் சொல்லும்படி கொரோனா கேர் சென்டரில் போன் பேசக்கூடாது, யாரிடமும் பேசக் கூடாது என்று தடுப்பார்களா... இப்படிப் பல கேள்விகள் எழவே செய்கின்றன. இன்னொருபுறம் பிரகாஷ் போன் செய்தபோது மாநகராட்சி அதிகாரிகள் ஏன் மாற்றி மாற்றிச் சொன்னார்கள் என்றும் கேள்வி எழுகிறது.

அடுத்த கட்டுரைக்கு