Published:Updated:

`பென்னிகுயிக் வாழ்ந்த இல்லத்தை இடித்து நூலகமா?' தி.மு.க vs அ.தி.மு.க; யார் சொல்வது உண்மை?

பென்னி குயிக் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் இல்லம்
பென்னி குயிக் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் இல்லம்

பென்னிகுயிக் மீது உணர்வு ரீதியாக மதிப்பு வைத்துள்ள மதுரை, தேனி மாவட்ட விவசாயிகள் மத்தியில் தற்போது யார் சொல்வது உண்மை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் வாழ்ந்த இல்லத்தை அழித்து, அந்த இடத்தில் கலைஞர் பெயரில் நூலகம் அமைப்பதாக எழுந்துள்ள சர்ச்சை தமிழக அரசியல் தளத்தில் சூடு பிடித்துள்ளது.

சென்னையில் அண்ணா நூலகம் அமைக்கப்பட்டதுபோல் மதுரையில் கலைஞர் பெயரில் சர்வதேச தரத்தில் அனைத்து வசதிகளுடன் 70 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட நூலகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார்.

உயர் கல்வி கற்கும், போட்டித் தேர்வுகளைச் சந்திக்கும், வேலை தேடும் தென் மாவட்ட இளைஞர்களுக்கு இந்த நூலகம் பயனுள்ளதாக இருக்கும் என்று அனைவராலும் வரவேற்கப்பட்டது. நூலகம் அமைக்க மதுரையில் அரசுக்குச் சொந்தமான பல இடங்களை அமைச்சர்களும் அதிகாரிகளும் ஆய்வு செய்தார்கள். அதில் கடைசியாக மதுரையிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறைக்குச் சொந்தமான 2 ஏக்கர் கொண்ட வளாகத்தைத் தேர்வு செய்துள்ளனர்.

பென்னி குயிக் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் வீடு
பென்னி குயிக் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் வீடு

இடம் தேர்வு செய்யப்பட்ட தகவல் வந்தபோது மதுரையிலுள்ள அ.தி.மு.க-வினரோ, வேறு அமைப்புகளோ எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

சில நாள்களுக்கு முன் விவசாயிகள் சிலர், ``5 மாவட்ட விவசாயிகளை வாழ வைக்கும் கடவுளான ஜான் பென்னிகுயிக்கின் பெயரை பிள்ளைகளுக்கு வைக்கிறோம். பூஜையறையில் அவர் படத்தை வைத்திருக்கிறோம். கல்லணை அமைத்த கரிகாலன் போன்றவர் அவர். அப்படிப்பட்டவர் மதுரையில் வாழ்ந்த இல்லம், நினைவில்லமாக உள்ள நிலையில், அதை அழிக்கும் வகையில் அங்கு கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கலாமா? மதுரையில் நூலகம் அமைக்க வேறு இடம் இல்லையா? அங்கு நூலகம் அமைத்தால் தென் மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடுவோம்" என்று கலெக்டரிடம் மனு அளித்தனர்.

அப்போதிருந்து இந்தப் பிரச்னை சூடுபிடிக்கத் தொடங்கியது. மனு அளித்த விவசாய சங்க நிர்வாகிகள் அ.தி.மு.க ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட்டது.

உடனே மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் வெளியிட்ட அறிக்கையில், ``தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் எட்டுத் தளங்களுடன் 6 லட்சம் புத்தகங்களுடன் அனைத்து வசதிகள் நிறைந்த நூலகமாக அமைய உள்ளது.

கலெக்டர் அனீஷ் சேகர்
கலெக்டர் அனீஷ் சேகர்

இதற்காக மதுரை மாநகருக்குள் 7 இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இறுதியாக நத்தம் சாலையிலுள்ள பொதுப்பணித்துறையின் நீர்வாள ஆதாரத்துறை பொறியாளர்கள் குடியிருப்பு வளாகம் அனைத்து வசதிகளுடன் இருந்ததால் தேர்வு செய்யப்பட்டது.

கலைஞர் நினைவு நூலகம் அமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்திலுள்ள குடியிருப்பில் முல்லைப்பெரியாறு கட்டிய கர்னல் ஜான் பென்னி குயிக் வாழ்ந்ததாகக் கூறப்படும் நிலையில், இதுகுறித்து ஆய்வு செய்தோம். பென்னி குயிக் 15.01.1841-ல் பிறந்து 09.03.1911-ல் மரணமடைந்துள்ளார்.

பொதுப்பணித் துறை ஆவணங்களை ஆய்வு செய்ததில் 1912-ல் தொடங்கி 1913-ல் இந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அவர் மறைவுக்குப் பின் கட்டப்பட்டது என்பதால் அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை" எனத் தெரிவித்திருந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், ``பென்னி குயிக் நினைவு இல்லத்தை அகற்றி, கலைஞர் நூலகமாக மாற்ற தி.மு.க அரசு நினைப்பது சரித்திரத்தை சிதைப்பதற்குச் சமம்" என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்தும், பா.ஜ.க தலைவர் அண்ணாமலையும் அறிக்கை விட பரபரப்பு ஏற்பட்டது.

எடப்பாடி - ஓ.பி.எஸ் 
எடப்பாடி - ஓ.பி.எஸ் 
Vikatan

தென் தமிழ்நாட்டின் உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை பல இடையூறுகளுக்கு இடையே உருவாக்கி மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த ஜான் பென்னிகுயிக் வாழ்ந்த இல்லம் தமிழக அரசால் பாதுகாக்கப்பட்டு வந்த நிலையில், நூற்றாண்டுக்கும் மேற்பட்ட அந்த நினைவு இல்லத்தை இடித்துவிட்டு கலைஞர் நூலகம் அமைக்க தி.மு.க அரசு திட்டமிட்டு இருப்பதாகவும் அதை உறுதிப்படுத்தும் வகையில் மதுரை கலெக்டரின் அறிக்கை உள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. ஒரு வரலாற்றை அழித்து ஒரு வரலாற்றை எழுத நினைப்பது கண்டிக்கத்தக்கது. எதிர்ப்பை மீறி நூலகம் அமைத்தால் விவசாயிகளுக்கு ஆதரவாக அ.தி.மு.க போராட்டத்தில் குதிக்கும்" என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதற்கு தி.மு.க தரப்பில், `கதை கற்பனை, அறியாமை அடங்கிய அறிக்கை' என்று அமைச்சர் எ.வ.வேலு மூலம் அறிக்கை விடுத்துள்ளனர்.

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

அதில், ``மதுரை கலெக்டர் தெளிவாகத் தெரிவித்துள்ளார். ஆனால், திடீரென ஒரு புரளியைக் கிளப்பிவிட்டு, இப்போது அறிக்கை வடிவில் வெளியிட்டு மதுரைக்கு வரும் நூலகத்தைத் தடுத்துவிட வேண்டும் என்று அ.தி.மு.க மலிவு அரசியலை நடத்துகிறது.

இளைஞர்கள் கல்வி அறிவு பெறுவது பிடிக்கவில்லை. தென் தமிழ்நாட்டு மக்கள் பயன்பெறும் இந்த நூலகம் சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் அமைவதும் பிடிக்கவில்லை. அதனால் கங்கணம் கட்டிக்கொண்டு விஷத்தைக் கக்குகிறார்கள். பென்னி குயிக் சிலை வைத்து அழகு பார்த்தவர் கலைஞர். அதனால் கதை அளக்க வேண்டாம். மதுரையில் கலைஞர் பெயரிலான நூலகம் கம்பீரமாக எழும்" என்று தெரிவித்துள்ளார்.

பென்னிகுயிக் மீது உணர்வு ரீதியாக மதிப்பு வைத்துள்ள மதுரை, தேனி மாவட்ட விவசாயிகள் மத்தியில் தற்போது யார் சொல்வது உண்மை என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது பற்றி வரலாற்று ஆய்வு எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனிடம் கேட்டேன்.

எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்
எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன்

``பென்னி குயிக் சம்பந்தமாக மதுரை கலெக்டர் தெரிவித்துள்ளது சரியானது. எனக்கு தெரிந்து வேறு ஆதாரம் இருப்பதாகத் தெரியவில்லை. இதை மறுத்து பென்னிகுயிக் அந்த வீட்டில்தான் வாழ்ந்தார் என்று சொல்பவர்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்டட்டும். தற்போது மதுரைக்கு சர்வதேச தரத்தில் நூலகமும், கீழடியில் அருங்காட்சியகமும் விரைந்து வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்" என்றார்.

அதேநேரம், `அ.தி.மு.க தலைமை, உண்மையை அறியாமல் அவசரப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளது' என்று ஒரு தரப்பினரும், `தி.மு.க கொண்டு வரும் ஒவ்வொரு திட்டமும் ஏதாவது வகையில் சர்ச்சையை ஏற்படுத்திவிடுகிறது என்று' மற்றொரு தரப்பினரும் பேசி வருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு