Published:Updated:

`பேரறிவாளனுக்கு வைரஸ் காய்ச்சலா?’ - கொதிக்கும் தந்தை குயில்தாசன்!

பேரறிவாளன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியான நிலையில், ‘அவர் நலமுடன் இருக்கிறார். தவறான தகவலைப் பரப்புகிறார்கள்’ எனக் கொதிக்கிறார் அவரின் தந்தை குயில்தாசன்.

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன்
பேரறிவாளனின் தந்தை குயில்தாசன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன் சிறுநீரகப் பிரச்னை, மூட்டு வலி ஆகியவற்றால் கடுமையாக அவதிப்பட்டார். மருத்துவ உதவிக்காக, சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கிருந்தபடியே ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். 

பேரறிவாளன்
பேரறிவாளன்

இந்தநிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தந்தை குயில்தாசனைப் பார்க்கவும் அக்கா அன்புமணியின் மகள் திருமணத்தில், ‘தாய் மாமன்’ என்ற முறையில் கலந்துகொள்வதற்காகவும் தமிழக அரசின் அனுமதி பெற்று 30 நாள்கள் பரோலில் வெளியே வந்தார்.

`தந்தையின் உடல்நிலை; சகோதரி மகளின் திருமணம்!’- மீண்டும் ஒருமாத பரோலில் பேரறிவாளன்

சிறை விதிகளின்படி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை கோவிந்தசாமி தெருவில் உள்ள அவரின் வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு தாய் அற்புதம்மாள் மகிழ்ச்சி பொங்க மகனைக் கட்டி அணைத்துக் கொஞ்சி மகிழ்ந்தார். வீட்டைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பேரறிவாளன் வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்
பேரறிவாளன் வீட்டு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார்

உறவினர்களைத் தவிர வெளியாட்கள் யாரையும் சந்திக்க போலீஸார் அனுமதிப்பதில்லை. தினமும் ஜோலார்பேட்டை காவல் நிலையத்துக்குச் சென்று கையெழுத்துப் போட வேண்டும். பாதுகாப்பு கருதி அந்தக் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசனே நேரடியாக வீட்டுக்கு வந்து பேரறிவாளனிடம் கையெழுத்து வாங்கிச் செல்கிறார்.

பரோலில் வந்த நாள் முதல் நேற்று மாலை 6 மணி வரை உறவினர்கள் 29 பேர் பேரறிவாளனை நேரில் வந்து நலம் விசாரித்துச் சென்றுள்ளதாக, போலீஸார் வருகைப் பதிவேட்டில் குறித்து வைத்துள்ளனர். இந்தநிலையில், பேரறிவாளன் வைரஸ் காய்ச்சலால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவக் குழு ரத்த மாதிரிகளை எடுத்துச் சென்றதாகவும் இன்று காலை முதல் தகவல் பரவிவருகிறது.

மனைவி அற்புதம்மாளுடன் குயில்தாசன்
மனைவி அற்புதம்மாளுடன் குயில்தாசன்

பேரறிவாளனின் தந்தை குயில்தாசனிடம் பேசினோம். ‘‘பேரறிவாளன் நலமுடன் இருக்கிறார். அவருக்குக் கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. அவ்வளவுதானே தவிர காய்ச்சல் வரவில்லை. உடல்நிலையை உள்ளூர் அரசு மருத்துவர்களே பரிசோதனை செய்தனர். உடனே, காய்ச்சல் என்று தகவலை பரப்பியிருக்கிறார்கள். இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உறவினர்கள் வீட்டுக்கு வருவதற்கே அச்சப்படுகிறார்கள். தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன், தவறான தகவலை யாரும் பரப்பாதீர்கள்’’ என்றார் கொதிப்புடன்.