Published:Updated:

கிராம சபைக் கூட்டங்களில் ஆர்வத்துடன் பங்கேற்கிறார்களா மக்கள்? கள நிலவரம் இதுதான்!

கிராம சபைக் கூட்டம் என்றால் என்ன? இதை எப்படி நடத்துகிறார்கள், கிராம மக்கள் இதை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராம மக்களிடம் பேசினோம். மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்போம் வாருங்கள்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`கிராமங்கள்தான் இந்தியாவின் ஆன்மா' என்றார் மகாத்மா காந்தி. கிராம சுயராஜ்ஜியம், கிராம தன்னிறைவு எனப் பல விஷயங்களைப் பற்றியும் அவர் பேசியுள்ளார். அவரின் நினைவாகவே கிராமங்களுக்கு தன்னாட்சி வழங்கும்பொருட்டு கிராம மக்கள் தங்களின் கோரிக்கைகளைப் பேசும் ஓர் இடமாக இருந்து வருகிறது கிராம சபைக் கூட்டம். இந்தக் கிராம சபைக் கூட்டம், கொரோனா ஊரடங்கு தொடங்கிய பிறகு தமிழ்நாட்டில் எங்கும் நடைபெறவில்லை. கோயில் விழாக்கள், அரசியல் கட்சி கூட்டங்கள், தேர்தல் எனப் பல விஷயங்கள் கொரோனா காலகட்டத்தில் நடத்தப்பட்டாலும் கிராம சபைக் கூட்டத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமல் இருந்துவந்தது. இதை எதிர்த்து பலரும் குரல் எழுப்பினர். நீதிமன்றத்தில் வழக்கும் தொடுக்கப்பட்டது. பலரின் கோரிக்கைகளுக்குப் பிறகே அக்டோபர் 2-ம் தேதி கிராம சபைக் கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

கிராம சபை
கிராம சபை
`வேளாண் சட்டங்களுக்கு எதிராக கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்!' - விவசாயிகளின் வேண்டுகோள்

பலநாள் கோரிக்கைகளுக்குப் பிறகு கிடைத்திருக்கும் இந்த அனுமதியை கிராம மக்கள் எப்படி பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதைப் பொறுத்தே இதன் வெற்றி அடங்கியிருக்கிறது. இந்நிலையில் கிராம சபைக் கூட்டம் என்றால் என்ன? இதை எப்படி நடத்துகிறார்கள், கிராம மக்கள் இதை எப்படி பார்க்கிறார்கள் என்பது பற்றி புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள கிராம மக்களிடம் பேசினோம். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகமாக இருக்கிறது. கிராம மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்போம் வாருங்கள்...

கிராம சபைக் கூட்டம் பற்றி தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களின் கருத்து:

பால்ராஜ், எருமலைநாயக்கன்பட்டி.

``கொரோனா காலத்துக்குப் பிறகு, நடக்கப்போகும் முதல் கிராம சபைக் கூட்டம் என்பதால் எங்கள் பகுதி மக்கள் அக்டோபர் 2-ம் தேதி நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்க ஆர்வமாக உள்ளனர். கிராம சபைக் கூட்டத்தை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

பால்ராஜ்
பால்ராஜ்

கடைசியாக நடந்த கூட்டத்தில் குடிநீர் பிரச்னைக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, உடனடியாகத் தீர்வு காணப்பட்டது. எங்கள் ஊராட்சியில் ஒலிபெருக்கி மூலம் கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவது குறித்து அறிவிப்பு வெளியிடப்படும். இதனால் ஒவ்வொரு வார்டிலும் உள்ள தங்கள் பிரச்னைகள் குறித்து பேசுவதற்கு கூட்டத்தில் கலந்துகொள்வார்கள்'' என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெற்றிவேல், டி.வாடிப்பட்டி.

``எங்கள் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் முறையாக நடத்தப்படுவதே இல்லை. அறிவிப்பும் செய்யப்படுவது இல்லை. தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வு நடத்த முடிந்த பிறகு, அருகே பழைய பேனரை விரித்து சிலர் மட்டும் அமர்ந்து கூட்டத்தை முடித்துவிடுவார்கள்.

வெற்றிவேல்
வெற்றிவேல்

பெயரளவுக்கு நடத்தப்படும் கூட்டங்களிலும் வரவு செலவு குறித்து கூட விளக்குவது இல்லை. கடந்த கூட்டங்களில் நூலகம், சாலை வசதி குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நடவடிக்கை இல்லை'' என்றார்.

முத்துக்குமார், சில்வார்பட்டி.

``கிராம சபைக் கூட்டத்தில் தவறாமல் பங்கேற்று வருகிறேன். அடிப்படை வசதிகள் குறித்துதான் அதிக கோரிக்கைகள் வரும். அவை பதிவு செய்யப்பட்டு விரைவில் தீர்வு காணப்பட்டு வருகின்றன.

முத்துக்குமார்
முத்துக்குமார்

கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவதை அறிந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் நூறு நாள் வேலை செய்வோர்கள், தூய்மைப் பணியாளர்களை வைத்துதான் கூட்டம் நடத்தப்படுகிறது'' என்றார்.

பரமேஸ்வரன், ஜெயமங்கலம்.

``ஜெயமங்கலம் ஊராட்சியில் கொரோனா காலத்தில் மட்டும்தான் கிராம சபைக் கூட்டம் நடக்கவில்லை. மற்றபடி அனைத்துக் காலங்களிலும் கிராம சபைக் கூட்டம் முறையாக நடத்தப்பட்டு வருகிறது.

பரமேஸ்வரன்
பரமேஸ்வரன்

கூட்டம் நடத்தப்படுவதை அனைவரும் அறியும் வகையில் போஸ்டர் ஒட்டுவது, நோட்டீஸ் வழங்குவது, தண்டோரா போடுவது போன்ற நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படும். கூட்டத்துக்கு அதிகமானோர் கலந்து கொள்வார்கள்'' என்றார்.

கணேசன், ஜி.கல்லுப்பட்டி.

``தேனி மாவட்டத்தின் கடைசி ஊராட்சி ஜி.கல்லுப்பட்டி. இங்கு கிராம சபைக் கூட்டம் நடத்தப்படுவது குறித்து போஸ்டர் அடித்து முக்கிய இடங்களில் ஒட்டப்படும். இதில் கிராம மக்கள் பெரும்பாலும் கலந்துகொள்வது இல்லை. ஊராட்சி அலுவலகத்தில் நடக்கும் அல்லது அருகே உள்ள சாவடியில் வைத்து நடத்தப்படும்.

கணேசன்
கணேசன்

ஆனால், இந்தக் கூட்டம் பெரும்பாலும் கண்துடைப்புக்காக மட்டுமே நடத்தப்படுகிறது. 2019-ல் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் ஜி.கல்லுப்பட்டியில் இருந்து கண்டமனூர் விலக்கு வரை அரசுப் பேருந்து இயக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போது வரை பேருந்து இயக்க எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதுபோல பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை என்ன ஆனது என்பது இதுவரை தெரியவில்லை'' என்றார்.

கிராம சபைக் கூட்டம் பற்றி புதுக்கோட்டை மாவட்ட மக்களின் கருத்து:

தாமரைச் செல்வன், மறமடக்கி:

``கிராம நிர்வாகம் சார்ந்த வரவு செலவு அறிக்கை, பொதுச் சுகாதாரம் உள்ளிட்ட கிராமம் சார்ந்த திட்டங்கள், வளர்ச்சி குறித்துப் பேசி, விவாதிப்பதற்குத் தான் கிராமசபைக்கூட்டம் நடத்தப்படுகிறது. ஒரு கிராமத்தில் 2,000 பேர் வரையிலும் இருக்கிறார்கள் என்றால், குறைந்தபட்சம் 200 பேர் வரையிலுமாவது கலந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதில், எடுக்கும் முடிவு சட்டப்படி செல்லுபடியாகும்.

கிராம சபை கூட்டம் [கோப்பு படம்]
கிராம சபை கூட்டம் [கோப்பு படம்]

ஆனால், அப்படி எந்த கூட்டமும் நடப்பதில்லை. 50-பேர் கூட கலந்துகொள்ள மாட்டார்கள். குடியரசு தினம், காந்தி ஜெயந்தி எனச் சில தினங்கள் மட்டுமே நடக்கிறது. அதுகுறித்த விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக, இளைஞர்களிடம் இல்லை என்பதுதான் வருத்தம். நான் கிராமத்தில் எப்போது நடந்தாலும் அப்போது ஆஜராகி விடுவேன்" என்றார்.

கண்ணம்மாள் குளமங்கலம் தெற்கு:

``கிராம சபைக்கூட்டம் பொது இடத்துலதான் போடுவாங்க. உங்களுக்குக் குறை இருக்கான்னு கேட்பாங்க. எங்க ஊராட்சியில் தண்ணீயில இருந்து எல்லா அடிப்படை வசதிகளையும் செஞ்சுக்கொடுத்திருக்காங்க. அதனால, நான் கலந்துகிடுறதில்லை" என்றார்.

சீனிவாசன், பரவாக்கோட்டை:

``வரும் 2-ம் தேதி அரசு நடத்தச் சொல்லி அனுமதி கொடுத்திருக்காங்க. ரொம்ப வரவேற்க கூடிய விஷயம். கடந்த முறை ஊராட்சி சார்பில் கிராமத்திற்கு என்ன செய்திருக்கிறார்கள், என்ன செய்யவிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்கான, விவாதிக்கக் கூடிய இடம் கிராம சபைக்கூட்டம். இப்போ தைலமர பிரச்சினை தீவிரமா போயிக்கிட்டு இருக்கு. தைலமரங்களை அகற்றுதல், நீர் நிலைகளைத் தூர்வாருதல் போன்ற பொது பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்குக் கிராம சபைக்கூட்டம்தான் சரியான இடம். வரும் கூட்டத்தில் கலந்துகொண்டு பேச இருக்கிறேன். நான் இதுவரைக்கும் எனக்கு விவரம் தெரிய எந்த கூட்டத்தையும் தவிர்த்ததில்லை. எல்லா கூட்டத்திலயும் கலந்துக்குவேன். பொதுமக்கள் எல்லாரும் கண்டிப்பா கலந்துக்கணும்" என்றார்.

கிராம சபை
கிராம சபை
எஸ். தேவராஜன்.
வரும் உள்ளாட்சி தேர்தலில் இளைஞர்களின் பங்களிப்பு ஏன் முக்கியம்? தரவுகள் சொல்லும் உண்மை!

கஸ்தூரி, குளமங்கலம் தெற்கு:

``2-ம் தேதி கூட்டம் போட்டால், நாங்கள் போவோம். கூட்டத்தில் கடந்தாண்டின் ஆய்வறிக்கையை சமர்ப்பிப்பார்கள். நாங்கள் எங்களின் கோரிக்கைகளை வைப்போம். இதுவரை நாங்கள் வைத்த கோரிக்கைளை நிறைவேற்றியுள்ளனர். பெண்கள் குறைவாகத்தான் கலந்துகொள்வார்கள். ஆனால் பெண்கள் அதிகமாக கலந்துக்கணும்" என்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு