Published:Updated:

கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் காட்டில் வீசப்பட்டதா? -திருச்சி வீடியோவின் பின்னணி

உடலை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்
உடலை எடுத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்

``கொரோனா பாதிக்கப்பட்டால் இந்த ஊரு உலகம் என்னவெல்லாம் பேசுது தெரியுமா? சமூக வலைதளங்களில் இந்த வீடியோவைப் பகிரும் நண்பர்களிடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து என் அப்பாவின் இறப்பை கொச்சைப்படுத்தாதீர்கள்.'’

திருச்சி தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் அனுமதிக்கப்பட்டிருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரை காட்டுப் பகுதியில் தூக்கி எறிந்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது. இந்த வீடியோ பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளதோடு, ``என் தந்தையின் உடலை நாங்கள்தான் அடக்கம் செய்தோம். என் தந்தையின் இறப்பை கொச்சைப்படுத்தாதீர்கள்" என்று அவரது மகன்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

அடக்கம் செய்யப்படும் உடல்
அடக்கம் செய்யப்படும் உடல்

திருச்சி மாவட்டம் இருங்களூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில், பெண்ணாடத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர், மூச்சுத் திணறல் மற்றும் கடுமையான தொண்டை வலி பிரச்னையால், கடந்த 15-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். சிகிச்சை பலனின்றி, அன்று மதியம் 2 மணியளவில் இறந்திருக்கிறார். இந்நிலையில், அவரது உடலை மருத்துவமனை நிர்வாகம் தங்களுடைய ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்று கோட்டைமேடு என்கிற பகுதியில் உள்ள காட்டில் வீசிவிட்டுச் சென்றதாக, ஒரு நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. கொரோனா நோயாளியை மருத்துவமனை தரப்பினர் இப்படித்தான் கையாளுகிறார்களா என்று விசாரிக்கத் தொடங்கினோம்.

வீடியோ உண்மையில்லை

இதுகுறித்து மருத்துவமனையில் இறந்த முதியவரின் மகனிடம் பேசினோம். ``எங்க அப்பா 72 வயது முதியவர். அவருக்குக் கடுமையான தொண்டை வலி மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்ததால், திருச்சியில் உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் சேர்த்தோம். அவர்கள், சில பரிசோதனைகள் எல்லாம் எடுத்து சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அன்று மதியம் 2 மணிக்கெல்லாம் இறந்துவிட்டார். உடலை நாங்கள் எடுத்துச்செல்கிறோம் என்றதும், மருத்துவமனை தரப்பினர் இங்கிருந்து அடுத்த மாவட்டத்திற்கு எடுத்துச்செல்லக்கூடாது. இங்குதான் புதைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் தகவல் அளித்தார்கள். அவர்கள் முன்னிலையில்தான் கடந்த 16-ம் தேதி, தனியார் மருத்துவமனை நிர்வாகத்தினர் ஆம்புலன்ஸில் ஏற்றி எங்க அப்பாவின் உடலை காட்டுப்பகுதியில் புதைத்தோம்.

ஆம்புலன்ஸ்
ஆம்புலன்ஸ்

நானும் என் தம்பி மற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் என மூவரும்தான் அடக்கம் செய்துவிட்டு வந்தோம். காவல்துறையினர் கட்டுப்பாட்டால் எங்க அப்பாவின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. அவ்வளவு அவசர அவசரமாக எங்களை அனுப்பிவைத்தனர். மருத்துவமனை தரப்பில், எங்களிடம் ஒவ்வொன்றையும் கேட்டுக்கொண்டுதான் செய்தார்கள். இந்த நிலையில், என்னையும் எனது குடும்பத்தையும் பெண்ணாடத்தில் உள்ள எங்களது வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள் அதிகாரிகள். கொரோனா பாதிக்கப்பட்டால் இந்த ஊரு உலகம் என்னவெல்லாம் பேசுது தெரியுமா? சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை பகிரும் நண்பர்களிடம் ஒன்றை கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து என் அப்பாவின் இறப்பை கொச்சைப்படுத்தாதீர்கள். உங்களுக்கு புண்ணியமாப் போகும்" என்று தழுதழுத்தார்.

மருத்துவமனை தரப்பில் என்ன சொல்கிறார்கள்?

எஸ்.ஆர்.எம். மருத்துவமனையின் முதல்வர் குமாரிடம் பேசினோம். ``அந்த முதியவரை மருத்துவமனையில் அனுமதித்த மறுகணமே கோவிட் டெஸ்ட் எடுத்துவிட்டோம். சிகிச்சை செய்துகொண்டிருக்கும்போதே அவரது மகன்களிடம் தெளிவாக எடுத்துச் சொன்னோம். இவரை பிழைக்கவைப்பது கடினம். முயற்சிசெய்யலாமா என்று கேட்டதற்கு, அவர்களும் ஒப்புக்கொண்டு கையெழுத்துப் போட்டிருக்கிறார்கள். இந்நிலையில், சிகிச்சையிலிருந்தவர் அன்று மதியம் இறந்து போனதும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாரசாமி மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தோம். பின்னர், அவர்கள் கொடுத்த அறிவுரைக்குப் பின்புதான் கோட்டைமேடு என்ற காட்டுப்பகுதியில், 15 அடி ஆழத்திற்கு ஜே.சி.பி மூலம் குழிதோண்டி, உடலைப் புதைத்ததே அவர்கள் மகன்கள்தான். அவர்களுடன் அதிகாரிகளும் எங்களது ஆம்புலன்ஸ் ஓட்டுநரும் இருந்தனர்.

மருத்துவமனை விளக்கம்
மருத்துவமனை விளக்கம்

இதனை அதிகாரிகள் வீடியோ எடுத்துக்கொண்டார்கள். இப்படி இருக்கும் சூழலில், கொரோனா நோயாளியை இப்படிக் கையாள முடியுமா என்று யோசிக்க வேண்டாமா? திட்டமிட்டு எங்கள் மீது களங்கத்தை ஏற்படுத்துவதற்காக யாரோ சதி செய்திருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்சியர் மற்றும் சைபர் க்ரைம் போலீஸாரிடம் புகார் கொடுக்க இருக்கிறோம். நாங்களும் மருத்துவர்கள்தான். எங்களது உயிரையும் பணயம்வைத்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறோம். உங்களுடைய விருப்பு வெறுப்புக்காக எங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்" என்றார்.

ஹெல்த் இன்ஸ்பெக்டர் முத்துக்குமாராசாமியிடம் பேசினோம். ``இந்த மாதிரியான பிரச்னைக்கு அந்தந்த வி.ஏ.ஓ-க்கள்தான் எங்களிடம் பேசுவார்கள். அவர்களிடம் நாங்கள் எப்படிக் கையாள வேண்டும் என்ற இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுப்போம். அவ்ளவுதான். நான் தனியாக பேட்டிகொடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. உயர் அதிகாரிகளிடம் பேசுங்கள்” என்று முடித்துக்கொண்டார்.

அடுத்த கட்டுரைக்கு