Published:Updated:

பெருமழை பாதிப்பு: சென்னையை `கவனித்த’ அளவுக்கு மற்ற மாவட்டங்களை கவனிக்கவில்லையா? - நிலவரம் என்ன?!

மழை வெள்ளம்

``திமுக ஆட்சிக்கு வந்த 24 மாதங்களில் சென்னையை மழை பாதிப்பிலிருந்து காத்திருக்கிறது. அதேபோல் மற்ற மாவட்டங்களிலும் நிரந்தர தீர்வைக் காண குழுக்கள் அமைக்கப்படும்.”

பெருமழை பாதிப்பு: சென்னையை `கவனித்த’ அளவுக்கு மற்ற மாவட்டங்களை கவனிக்கவில்லையா? - நிலவரம் என்ன?!

``திமுக ஆட்சிக்கு வந்த 24 மாதங்களில் சென்னையை மழை பாதிப்பிலிருந்து காத்திருக்கிறது. அதேபோல் மற்ற மாவட்டங்களிலும் நிரந்தர தீர்வைக் காண குழுக்கள் அமைக்கப்படும்.”

Published:Updated:
மழை வெள்ளம்

சென்னை உட்பட பல பகுதிகளிலும் பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக, கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம் கொள்ளிடம், அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு எனப் பல இடங்களிலும் மழை வெள்ள பாதிப்பு தீவிரமாக இருக்கிறது.

பருவமழைக் காலங்களில் சென்னை மாவட்டத்துக்கு திமுக அரசு கொடுத்த முக்கியத்துவத்தை மற்ற மாவட்டங்களுக்குக் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதில் சென்னையைத் தவிர்த்து, மேலே குறிப்பிட்ட பகுதிகளில் மழையால் பலதரப்பு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாவட்ட மக்களில் சிலரும், சென்னைக்கு அளித்த முக்கியத்துவம் மற்ற மாவட்டங்களுக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள்.

சென்னை மழை
சென்னை மழை
வி.ஸ்ரீனிவாசலு

கடலூர், மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறை மாவட்டம் இந்த மழையால் வெள்ள பூமியாக மாறியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீர்காழியில் 44 செ.மீ மழையும், கொள்ளிடத்தில் 32 செ.மீ மழையும் சிதம்பரத்தில் 31 செ.மீ மழையும் பெய்திருக்கிறது. இதனால் அங்கிருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.

மழைநீரில் மூழ்கிய பயிர்கள்
மழைநீரில் மூழ்கிய பயிர்கள்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் சுமார் 2,00,000 ஏக்கருக்கு அதிகமான பயிர்கள் மழை வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. சீர்காழி பகுதியில் உப்பனாற்றில் உடைப்பு ஏற்பட்டதன் விளைவாக வெள்ளநீர் ஊருக்குள் புகுந்திருக்கிறது. இதனால், மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். நெற்பயிர்கள் அனைத்தும் கடந்த 25 நாள்களுக்கு முன்பு நடப்பட்டவை என்பதால், முழுமையாக நீரில் மூழ்கி அழுகியிருப்பதாக அங்குள்ள விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். அழுகிய நெற்பயிர்களை அகற்றிவிட்டு புதிதாக நடுவதைத் தாண்டி தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் கூறுகின்றனர்.

பெரும்பாலான பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது வடிகால்கள் தூர்வாரப்படாமல் இருந்ததுதான். இந்த நிலை தொடர்ந்தால் இனி வரும் மழைக்காலத்திலும் வெள்ள பாதிப்புகள் அதிகரிக்கும் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கிறது. கடந்தகால மழையின்போது தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பாதிப்பு அதிகமாக இருந்தது. எனவே, திமுக அரசு சென்னை பாதிப்புகளைக் குறைக்கக் கூடுதல் கவனத்தைச் செலுத்தியது. அதேநேரத்தில், மற்ற மாவட்டங்களில் மழை பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பாதிப்புகள் அதிகரித்திருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இடிந்து விழுந்த வடிகால் பாலம்.
இடிந்து விழுந்த வடிகால் பாலம்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களான மயிலாடுதுறை, சீர்காழி, கடலூருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வுசெய்தார். சீர்காழியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், மழையால் கால்நடைகளை இழந்தவர்களுக்கு ரூ.30,000, வீடுகள் இழந்தவர்களுக்கு ரூ.97,000 வரை இழப்பீடு வழங்கவிருப்பதாக தமிழக பேரிடர்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும் பருவமழை தொடரும் என எதிர்பார்க்கும் மாவட்டங்களான நீலகிரி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, தேனி, கடலூர், சென்னை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பேரிடர் மேலாண்மைக்குழுக்கள் தயாராக உள்ளன. இந்த மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேலான முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.

கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

கடந்த அக்டோபர் மாதமே மயிலாடுதுறையில் பருவமழை தொடங்குவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது. அதில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு வடிகால் வாய்க்கால்கள் துரிதமாக தூர்வாரப்பட்டு, வெள்ள பாதிப்புகள் தடுக்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் அதற்கு நேர் மாறாக தாழ்வான பல பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியிருக்கிறது. இது வெறும் பெயரளவில் மட்டும் நடத்தப்பட்ட கூட்டமா... பாதிப்புகள் இங்கு அதிகரிக்கக் காரணம் என்ன?

இது தொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் சிவ ஜெயராஜிடம் பேசினோம். ``மற்ற மாவட்டங்களைக் கவனிக்காமல் சென்னைக்கு மட்டும் கூடுதல் கவனம் கொடுக்கப்பட்டது  என்று கூறுவது முற்றிலும் தவறு. வானிலை ஆய்வு மையம் பருவமழை குறித்து அறிவிப்பு வெளியிட்டவுடனே மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளைக் தடுக்க மூன்று முறை கூட்டங்கள் நடத்தப்பட்டன. குறிப்பாக மாவட்டத்திலுள்ள பேரிடர் மேலாண்மைக்குழுவையும் மாநிலப் பேரிடர் மேலாண்மைக் குழுவையும் ஒருங்கிணைத்து பாதிப்புகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிவ ஜெயராஜ்
சிவ ஜெயராஜ்

தமிழகத்தில் ஒன்றிரண்டு மாவட்டங்களில் பெய்த மழையை வைத்து, அதை பூதாகரமான பிரச்னையாக உருவாக்கி, திமுக-மீது பழிபோடும் செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதேபோல், மழையால் விவசாய நிலங்கள் மற்றும் பயிர்கள் பாதிப்புகளைத் தடுக்க பருவமழை அறிவிப்பு வந்தவுடனே வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பயிர் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்காதவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவித்தார். அமைச்சர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்துவருகின்றனர்.

தற்போது மத்திய அரசின் குழுவை தமிழகத்துக்கு வரவழைத்து பாதிப்புகளைச் சீர்செய்ய நிவாரண நிதி பெறும் முயற்சிகளைத் தமிழக அரசு எடுத்துவருகிறது. சீர்காழியைப் பொறுத்தவரை வரலாற்றில் இல்லாத அளவு 44 செ.மீ மழை பொழிந்திருக்கிறது. இதனால் அங்கு பாதிப்புகள் கூடுதலாக இருக்கலாம். மற்ற இடங்களில் கடந்த 10  ஆண்டுகளாக அதிமுக அரசு தூர்வாரும் பணிகளை மேற்கொள்ளவில்லை. இதனால் அங்கு பாதிப்பு அதிகரித்திருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த 24 மாதங்களில் சென்னையை மழை பாதிப்பிலிருந்து காத்திருக்கிறது. அதேபோல் மற்ற மாவட்டங்களிலும்  நிரந்தரத் தீர்வுகாண குழுக்கள் அமைக்கப்படும்” என்றார்.