Published:Updated:

பிரதமர் மோடிமீது திடீர்ப் பாசம்! - பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறாரா விஷால்?

நடிகர் விஷால்

கங்கையைப் புதிப்பிக்கத் திட்டங்களை அறிமுகம் செய்த மோடியை வாழ்த்தியிருக்கிறார் நடிகர் விஷால். இதனால் பாஜக-வில் அவர் இணையவிருப்பதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன.

பிரதமர் மோடிமீது திடீர்ப் பாசம்! - பாஜக ஆதரவு நிலைப்பாடு எடுக்கிறாரா விஷால்?

கங்கையைப் புதிப்பிக்கத் திட்டங்களை அறிமுகம் செய்த மோடியை வாழ்த்தியிருக்கிறார் நடிகர் விஷால். இதனால் பாஜக-வில் அவர் இணையவிருப்பதாகப் பேச்சுகள் எழுந்துள்ளன.

Published:Updated:
நடிகர் விஷால்

கடந்த சில தினங்களாகவே விஷால் குறித்து, பரபரப்பான செய்திகள் வெளிவந்துகொண்டேயிருக்கின்றன. அவற்றில் முக்கியமாக, அவருக்கும் நடிகை அபிநயாவுக்கும் திருமணம் நடைபெற்றதாக வதந்திகள் பரவின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு படத்தில் தானும் விஷாலும் கணவன், மனைவியாக நடிப்பதாகவும், அதிலிருந்து வெளியான புகைப்படம் தற்போது சர்ச்சையாக மாறியிருப்பதாகவும் இந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நடிகை அபிநயா. தற்போது காசிக்குக் குடும்பத்துடன் பயணம் மேற்கொண்டிருக்கும் விஷால் அங்கு கங்கையில் நீராடிய பிறகு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அன்புள்ள மோடி ஜி, அற்புதமான தரிசனம். பூஜை செய்து கங்கைநதியின் புனிதநீரைத் தொட்டேன். கோயிலைப் புதுப்பித்து, அதை இன்னும் அற்புதமாகவும், எளிதாக எவரும் தரிசனம் செய்வதற்காக நீங்கள் செய்த மாற்றத்துக்காகவும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக. உங்களுக்கு தலை வணங்குகிறேன்" என குறிப்பிட்டிருக்கிறார்.

கங்கை நதி
கங்கை நதி

ஒருவேளை விஷால் பாஜக-வில் இணைவதற்காக இது போன்ற கருத்துகளைத் தெரிவிக்கிறாரோ என்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

தென்னிந்திய நடிகர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கம்

முன்னதாக, நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார் நடிகர் விஷால். அதன் பிறகு தமிழக அரசியலிலும் கால்பதிக்க வேண்டும் என்று எண்ணிய அவர், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு, தேர்தல் ஆணையத்தால் நிராகரிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் அவரால் போட்டியிட முடியாமல் போனாலும், அரசியலில் அவருக்கு ஆர்வம் இருந்தது அப்போது உறுதியானது.

அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம், கடப்பாவிலுள்ள அமீன் பீர் என்னும் தர்காவில் வழிபட்டார். அப்போது அரசியல் வருகை குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோது, `சமூகநலனுக்காக ரூ.100 செலவழித்தாலே அவர்கள் அரசியலுக்கு வந்ததாகவே அர்த்தம். அப்படிப் பார்த்தால் நான் எப்போதோ அரசியலுக்கு வந்துவிட்டேன்’ எனக் கூறினார். இந்த நிலையில்தான், அவர் பிரதமர் மோடியைப் பாராட்டிய செய்தி கவனம் பெற்றது.

கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
sentinelassam

இப்படி விஷாலின் அரசியல் வருகை குறித்த யூகங்கள் எழுதுவது இது முதன்முறை அல்ல. கடந்த 2020-ம் ஆண்டில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் மகாராஷ்டிரா அரசை விமர்சித்ததற்காக அவர் அலுவலகத்தை இடித்தது அந்த மாநில அரசு. அதை எதிர்த்த கங்கனாவுக்கு ஆதரவாகப் பேசினார் விஷால். இதனால் அவர் பாஜக-வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. பாஜக கொள்கைகளுக்கு கங்கணா ஆதரவாகப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அப்போது வைக்கப்பட்ட இந்த விமர்சனத்தை முற்றிலுமாக மறுத்தார் நடிகர் விஷால்.

விஷால்
விஷால்

தற்போது மோடிக்கு ஆதரவாகக் கருத்தை வெளியிட்டிருப்பதால் பாஜக-வில் அவர் இணையவிருப்பது உறுதி என்பது போன்ற கருத்துகள் கூறப்பட்டுவருகின்றன.

அதேநேரம், தற்போது தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் திமுக-வின் இளைஞர் அணிச் செயலாளரான உதயநிதி ஸ்டாலினுடன் நெருங்கிய நட்புடன் இருக்கிறார் விஷால். அவர் நடித்த `லத்தி’ படத்தின் டீசர் வெளியீட்டுவிழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

இப்படி திமுக, அதன் முக்கியத் தலைவருடன் நெருக்கமாக இருப்பதை உறுதிசெய்யும் விஷால், அதற்கு எதிர்த் துருவத்தில் இருக்கும் பாஜக-வில் இணைந்து அவர்களை விமர்சிக்க வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது. `தற்போது, விஷால் கங்கை தூய்மையாக இருப்பதைப் பாராட்டினாரே தவிர, அவர் பாஜக-வில் சேருவது என்பது சந்தேகமே’ என அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.