வரி ஏய்ப்பு; தவறான நிதி மேலாண்மைப் புகார்! - பால் தினகரனுக்குச் சொந்தமான 28 இடங்களில் ஐ.டி ரெய்டு

தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்குச் சொந்தமான 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்திவருகின்றனர்.
`இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் மிஷனரி நடத்திவருபவர் பால் தினகரன். இவரது கிறிஸ்தவ மிஷனரி வெளிநாட்டிலிருந்து வந்த நிதியைத் தவறாகப் பயன்படுத்தியது, வரி ஏய்ப்பில் ஈடுபட்டது எனப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து பால் தினகரனுக்குச் சொந்தமான சென்னை, கோயம்புத்துர் உள்ளிட்ட 28 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர்.
சென்னை அடையாறிலுள்ள `இயேசு அழைக்கிறார்’ மிஷனரியின் தலைமை அலுவலகம், சென்னை பாரிஸிலுள்ள அலுவலகம், பால் தினகரனின் வீடு, அலுவலகங்கள், கோயம்புத்தூரிலுள்ள பால் தினகரனுக்குச் சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம், காருண்யா கிறிஸ்தவப் பள்ளி, தமிழகம் முழுவதும் `இயேசு அழைக்கிறார்’ மிஷனரிக்குச் சொந்தமான கட்டடங்கள், பிரார்த்தனைக் கூடங்கள் ஆகியவற்றில் இந்தச் சோதனை நடைபெற்றுவருகிறது.
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை இரண்டு நாள்களுக்கு நீடிக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. `இயேசு அழைக்கிறார்’ மிஷனரி, மறைந்த டி.ஜி.எஸ்.தினகரனால் கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது மதபோதகர் பால் தினகரன், அவரது குடும்பத்தினரால் அந்த மிஷனரி நிர்வகிக்கப்பட்டுவருகிறது.

அவர்களின் இணையதளத் தகவலின்படி, கிறிஸ்தவ மத பிரசங்கங்களைத் தமிழகம் முழுவதும் மேற்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல், `இயேசு அழைக்கிறார்’ தொலைக்காட்சி மூலம் மாதந்தோறும் 10 வெவ்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.