Published:Updated:

ஆழ்துளை குழி மீட்பு கருவி கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு! - ஐ.டி.செயலர் அறிவிப்பு

ஆழ்துளைக் கிணறுகள் மூடியிருக்க வேண்டும். அதற்குள் குழந்தைகள் விழாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் சரிதான். ஆனால், தவிர்க்க முடியாத பட்சத்தில் குழந்தைகள் உள்ளே விழுந்துவிட்டால், அவர்களை உடனடியாக மீட்பதற்கான கருவிகளும் நம்மிடையே இருக்க வேண்டும் .

சுஜித்
சுஜித்

''ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழந்தைகளை வெளியே எடுக்க, சரியான சாதனம் கண்டுபிடித்துத் தருவோருக்கு ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும்'' என தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு ஐஏஎஸ் அறிவித்துள்ளார்.

Sujith
Sujith

கடந்த வெள்ளிக்கிழமை மாலையிலிருந்து தமிழக மக்களின் இதயங்களைப் பிசைந்துகொண்டிருக்கிறான், சிறுவன் சுஜித். ஒவ்வொரு நிமிடமும் 'சுஜித் வெளியே வந்துவிட்டான்... மீட்கப்பட்டுவிட்டான்' என்கிற செய்திக்காக ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

“சுஜித்தை மீட்கும் பணியில் தமிழக அரசு மெத்தனமாக செயல்பட்டுள்ளது. 36 அடி ஆழத்தில் இருந்தபோதே குழந்தையை மீட்டிருக்க முடியும், பேரிடர் மீட்புப் படையை உடனடியாக அழைத்திருக்க வேண்டும். தமிழக அரசு இனிமேல் இதுபோன்று நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” -மு.க.ஸ்டாலின்

ஐந்து நாள்களாக நடைபெற்ற மீட்புப் பணி பலனளிக்கவில்லை. தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உடலிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், அவர் உயிர் இழந்துவிட்டதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

Sujith's Mother Kamala Mary
Sujith's Mother Kamala Mary

உலகத் தமிழர்களின் கூட்டு ஆன்மா ஒருகணம் நொறுங்கிப் போனது. கண்ணுக்கெட்டிய தூரத்தில் இருந்தும், சிறுவன் சுஜித்தை சூழ்ந்திருந்த இருளிலிருந்து அவனை ஆட்கொண்ட துயரிலிருந்து, அவனை மீட்க முடியாத கையறு நிலைக்கு ஆளானோம்.

'அரசு சரியாகச் செயல்படவில்லை' எனப் பல விமர்சனங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. 'முறையான திட்டம் எதுவுமில்லாமல் செயல்பட்டதே சுஜித்தை மீட்க முடியாமல் போனதற்குக் காரணம்' என கரூர் மக்களைவைத் தொகுதி எம்.பி ஜோதிமணி கருத்து தெரிவித்திருந்தார். இப்படி பல விமர்சனங்கள் வந்தாலும், 'இனி ஒரு சுஜித்தை இழக்க வேண்டாம்' என்பதே ஒட்டுமொத்த தமிழகத்தின் ஏக்கமாக, எதிர்பார்ப்பாக இருக்கிறது.

புதிய நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள் இதுபோன்ற மெஷின்களைத் தயாரிக்க ஆர்வமாக இருப்பார்கள். ஆனால், இதுபோன்ற கருவிகளுக்கு சரியான மார்க்கெட் இல்லை. அதனால், பெரிய அளவில் ஈடுபாடு காட்ட மாட்டார்கள். இதுபோன்ற மெஷின்களைத் தனி நபர்களோ நிறுவனங்களோ வாங்க மாட்டார்கள். அதற்கான தேவை அவர்களுக்கு இருக்காது. ஆனால், அரசு நினைத்தால் வாங்கி வைத்துக்கொள்ளலாம். இதுபோல சிக்கிக்கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்காகப் பயன்படுத்தலாம்.
சந்தோஷ் பாபு

அந்த நியாயமான எதிர்பார்ப்பை நிறைவேற்றும் சிறு முயற்சியாக, தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் சந்தோஷ் பாபு ஐஏஎஸ், தனது முகநூல் பக்கத்தில் ஒரு செய்தியைப் பதிவிட்டிருக்கிறார்.

Santhosh babu
Santhosh babu

அதில், ''இந்த வருடம் தீபாவளி நமக்கு ஒரு துக்க நாளாக அமைந்துவிட்டது. சுஜீத்தின் இறப்பே கடைசியாக இருக்க வேண்டும். நமக்கு ஒரு அவசரமான தீர்வு தேவைப்படுகிறது. ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழும் குழந்தைகளை மீட்க நம்மிடம் சரியான கருவிகள் இல்லை என்பது குற்றவுணர்வாக இருக்கிறது. இனியாவது விழித்துக்கொள்வோம். ஆழ்துளைக் கிணற்றிலிருந்து குழந்தைகளை வெளியே எடுக்க சரியான சாதனம் கண்டுபிடித்துத் தருவோருக்கு, அதற்கான முறையான ஆலோசனை வழங்கும் நிறுவனங்கள், தனிநபர்களுக்கு ரூபாய் 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும்'' எனப் பதிவு செய்திருந்தார். அவரது இந்தப் பதிவு, பல தரப்பிலும் பகிரப்பட்டு பாராட்டப்பட்டுவருகிறது.

Fb post
Fb post

சந்தோஷ் பாபு ஐஏஎஸ்ஸிடம் பேசினோம்...

''சுஜித் போன்று ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கி குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகிவருகிறது. நிலாவுக்கு, செவ்வாய்க்கு ஆட்களை அனுப்ப முயற்சிசெய்து கொண்டிருக்கிறோம். ஆனால், நம் கண் முன்னே நிகழும் இது போன்ற மரணங்களைத் தடுக்க முடியவில்லை. குழந்தைகளை மீட்பதற்கு சரியான கருவிகள் இல்லாமல் இருக்கிறோம்.

இந்தப் பிரச்னைக்கு இரண்டு விஷயங்களை நான் தீர்வாகக் கருதுகிறேன்.

குழந்தைகள் உள்ளே விழுவதை நான் ஆதரிக்கவில்லை. ஆழ்துளைக் கிணறுகள் மூடியிருக்க வேண்டும். அதற்குள் குழந்தைகள் விழாமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் சரிதான். ஆனால், தவிர்க்க முடியாத பட்சத்தில் குழந்தைகள் உள்ளே விழுந்துவிட்டால், அவர்களை உடனடியாக மீட்பதற்கான கருவிகளும் நம்மிடையே இருப்பதும் முக்கியம்.
சந்தோஷ் பாபு

ஒன்று, போருக்காக குழிகள் தோண்டப்படும்போதும், வேலை முடிந்து அதை மூடிவிட்டார்களா என்பதையும் அதிகாரிகள் ஆய்வுசெய்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும். எந்த நில அமைப்பில் கிணறு தோண்டப்பட்டிருக்கிறது என்கிற தகவலையும் பதிவேற்றினால், ஒருவேளை குழந்தைகள் விழுந்துவிட்டால் மீட்பதற்கு வசதியாக இருக்கும்.

Recovery process
Recovery process

உதாரணமாக, நாம் வேர்க்கடலை சாப்பிட்டு அது மூச்சுக்குழாய்க்குள் சிக்கிக்கொள்ள, மருத்துவர்களிடம் சென்றால் உடலுக்குள் ப்ரோங்கோஸ்கோப் (Bronchoscope) செலுத்துவார்கள். அது, மிக நீளமான பைப் போன்று உடலுக்குள் செல்லும். எந்த இடத்தில் கடலை சிக்கிக்கொண்டிருக்கிறதோ அங்கு மட்டும் ஐந்து கைகள் போன்று விரிந்து, அதை அப்படியே வெளியே எடுக்கும். இதேபோன்ற தொழில்நுட்பம்தான், இந்த ஆழ்துளைக் கிணற்றுக்குள் சிக்கிக்கொள்ளும் குழந்தைகளை மீட்பதற்கும் தேவைப்படுகிறது.

ஆழ்துளைக் கிணறு அமைக்கும்போது கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள், அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வழிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகின்றனவா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதிசெய்ய வேண்டும். இதில் கவனக்குறைவு ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
எடப்பாடி பழனிசாமி

அந்த வகையில்தான், குழந்தைகளை மீட்பதற்கான நவீன தொழில்நுட்பத் திட்டங்களுடன், கருவிகளுடன் வருவோருக்கு 5 லட்சம் தருவதாக அறிவித்தேன். அரசுக்கு அதற்கான ஆவணத்தை அனுப்பியிருக்கிறேன். இதற்கு முன்பாக, மணிகண்டன் என்பவர் மெஷின் கண்டுபிடித்திருப்பதாக அறிந்துகொண்டேன். நான் இன்னும் அந்த மெஷினைப் பார்க்கவில்லை. அவர் வந்தாலும் பரிசீலனை செய்யலாம்.

இதுபோன்ற விஷயங்களில் மிகவிரைவாக முடிவெடுக்க வேண்டிய தேவையிருக்கிறது. அரசு என் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையும் இருக்கிறது. இனி ஒரு சுஜித்தை இழக்க வேண்டாம் என்பதே என் விருப்பம். அதற்காகத்தான் இவ்வளவு அவசரம்'' என்றார் அவர்.

Recovery process
Recovery process

தீ விபத்தில் 94 பிஞ்சுக் குழந்தைகள் கருகிய பின்னர்தான் தனியார் பள்ளிகள்மீது அரசின் கவனம் திரும்பியது.

ஸ்கூல் வேனில் இருந்த ஓட்டைக்குள் விழுந்து டயர் ஏறி, பிஞ்சுக் குழந்தை ஸ்ருதியின் உயிர் பறிபோன பின்னர்தான், பள்ளி வாகனங்கள் மீதான அரசின் கெடுபிடி அதிகரித்தது.

பேனர் தலையில் விழுந்து சுபஶ்ரீ உயிரிழந்த பின்னர்தான், பேனருக்குத் தடை என்கிற அறிவிப்பு வந்தது.

அதன் தொடர்ச்சியாக, கிணற்றுக்குள் விழுந்து இரண்டு வயது பாலகன் சுஜீத் இறந்த பின்னர்தான், ஆழ்துளைக் கிணறுகள் மூடுவது குறித்தும், மீட்பதற்கான புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் விவாதிக்கத் தொடங்கியிருக்கிறோம். பரவாயில்லை, இப்பொழுதாவது விழித்துக்கொள்வோம்.

இனியும் தாமதித்தால், இழப்புகள் தாங்குவதற்கில்லை.

`சுஜித்தின் சடலத்தை மீட்டது எப்படி?' - கலங்கும் புதுக்கோட்டை தீயணைப்பு அலுவலர் செழியன்