Published:Updated:

`இது கொரோனாவை ஒழிக்காது.. ஆனா, புது நம்பிக்கை கொடுக்கும்!’ - கரூர் பெண்களின் புது முயற்சி

விளக்கேற்றும் சிறுமி
விளக்கேற்றும் சிறுமி ( நா.ராஜமுருகன் )

நாங்கள் இப்படிச் செய்வதால், கொரோனா ஒழிந்துவிடும் என்று நினைக்கவில்லை. தற்போதைக்கு நம் அனைவருக்கும் வேண்டிய மிகப்பெரிய மருந்து நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கு இதுபோன்ற சிறிய காரியங்களை மேற்கொண்டு வருகிறோம்.

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸை அழிக்க இன்னமும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால், கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள பெண்கள் தினமும் மாலை நேரத்தில், வீட்டுவாசலில் ஒரு பாத்திரத்தில் மஞ்சள் கரைத்து வைத்து, அதன்மீது வேப்பிலையை வைத்து, விளக்கேற்றி விநோத வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

விளக்கேற்றி வழிபாடு
விளக்கேற்றி வழிபாடு
நா.ராஜமுருகன்

`இது கொரோனாவை ஒழிக்காது; ஆனா, கொரோனாவை நாம் அனைவரும் சேர்ந்து துரத்தி அடிக்க முடியும் என்ற நம்பிக்கை இதனால் கிடைக்கிறது' என்று அதற்கு காரணமும் சொல்கிறார்கள்.

`கொரோனா வைரஸ்.. கேரள எல்லையான தேனியில் தீவிர கண்காணிப்பு!’ - தயார் நிலையில் மருத்துவக்குழு

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுக்க பரவி, உலக மக்களை தூக்கமில்லாமல் செய்துகொண்டிருக்கிறது. பாரதப் பிரதமர் மோடி அதை தேசிய பேரிடராக அறிவித்ததோடு, நேற்று இரவு 12 மணியிலிருந்து, அடுத்து வரும் 21 நாள்களுக்கு ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். அதோடு தமிழக அரசு, எல்லா மாவட்ட எல்லைகளையும் மூடி சீல் வைத்துள்ளது. உலகளாவிய விஞ்ஞானிகள், கொரோனாவை ஒழிக்க மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். அதோடு, `இப்போதைக்கு சமூகத்திலிருந்து நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வதுதான் கொரோனா வைரஸ் வராமல் தடுக்க ஒரே வழி' என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மஞ்சள் கரைத்த குடத்தின் மீது வேப்பிலை
மஞ்சள் கரைத்த குடத்தின் மீது வேப்பிலை
நா.ராஜமுருகன்

இந்த நிலையில்தான், கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், வெள்ளியணை, புங்கோடை குளத்துப்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள், ஒரு விநோத முயற்சியை கொரோனா வைரஸுக்கு எதிராகச் செய்து வருகிறார்கள். வைரஸுக்கு எதிராக தங்களது குடும்பத்தினருக்கும் அக்கம்பக்கத்தில் இருக்கும் மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில், வாசல் முழுவதும் கிருமிநாசினியாக உள்ள மஞ்சள் கலந்த நீர் தெளித்து கோலமிட்டு, ஒரு குடம் அல்லது சொம்பு முழுவதும் மஞ்சள் நீரில் வேப்பிலையை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். அதோடு, சாணியில் பிள்ளையார் பிடித்து வைப்பது, அருகில் விளக்கேற்றி வழிபாடு நடத்துவது என்று அவர்கள் புது முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள்.

இதுகுறித்து, கரூர் நொய்யல் அருகே உள்ள புங்கோடை குளத்துபாளையத்தைச் சேர்ந்த கலா என்பவரிடம் பேசினோம். ``நாங்கள் இப்படிச் செய்வதால், கொரோனா ஒழிந்துவிடும் என்று நினைக்கவில்லை. தற்போதைக்கு நம் அனைவருக்கும் வேண்டிய மிகப்பெரிய மருந்து நம்பிக்கைதான். அந்த நம்பிக்கையை வளர்ப்பதற்கு இதுபோன்ற சிறிய காரியங்களை மேற்கொண்டு வருகிறோம்.

விளக்கேற்றி வழிபாடு
விளக்கேற்றி வழிபாடு
நா.ராஜமுருகன்

விளக்கேற்றி வழிபடும்போது, நம்மைச் சுற்றி இருக்கும் கெட்ட சக்திகள் விலகுவதாக உணர்கிறோம். அதனால், இதை தினமும் செய்து வருகிறோம்" என்றார்.

அடுத்து, கரூர் அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்ற இல்லத்தரசியிடம் பேசினோம். ``கொரோனா வைரஸ் பாதிப்புகள் உலகம் முழுவதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள சூழ்நிலையில், அரசு நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. அதை ஏற்று மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக, இதுபோன்ற இல்லத்தின் முன்பு கோலமிட்டு வேப்பிலை வைத்து தீபம் ஏற்றி அனைவரையும் காக்க வழிபாடு நடத்துகிறோம். வீடுகளைச் சுற்றி வேப்பிலைகளைக் கட்டி வைத்திருக்கிறோம்.

வீடு முழுக்க வேப்பிலை
வீடு முழுக்க வேப்பிலை
நா.ராஜமுருகன்

இதன் மூலம், அனைவரின் வீட்டின் முன்பும் தூய்மை கடைப்பிடிக்கப்படும். இந்த நம்பிக்கையில், சுய ஊரடங்கு உத்தரவை இன்னும் இருபது நாள்களுக்கு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திக் காட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு