Published:Updated:

`தமிழுக்குப் பணிசெய்ய கிடைத்த வாய்ப்பு!'- செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய இயக்குநர்

செம்மொழித் தமிழாய்வு
செம்மொழித் தமிழாய்வு

சென்னை தரமணியில் அமைந்துள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் முதல் இயக்குநராக முனைவர் இரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னை தரமணியில் அமைந்துள்ளது. இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தமிழ் மொழியின் விழுமியங்களை, பெருமையை உலகம் முழுவதும் கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 2006-ம் ஆண்டு முதல் மைசூரில் உள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் 'செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்' என்னும் பெயரில் இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது. அதன்பின், 2008-ம் ஆண்டு மே மாதம் அப்போதைய முதல்வர் கருணாநிதி தலைமையில் இது சென்னையில் இயங்கத் தொடங்கியது. சென்னையில் இயங்க ஆரம்பித்த பின்தான் இது 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' எனப் பெயர் மாற்றப்பட்டது. நிறுவனத்தின் ஆட்சிக்குழுவுக்குத் தலைவராகத் தமிழ்நாட்டின் முதல் அமைச்சரே செயல்படுகிறார். தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, தமிழர்களுடைய நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைப் பறைசாற்றும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை இந்நிறுவனம் செயல்படுத்தி வருகிறது. இங்குள்ள நூலகத்தில் 40,000 அரிய பழந்தமிழ் நூல்கள் ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளன.

தமிழ் மொழி
தமிழ் மொழி

இவை மின் நூல்களாகவும் ஓலைச்சுவடிகளாகவும் இதழ்களாகவும் உள்ளன. இவை அனைத்தும் தமிழ் மொழியின் தொன்மை குறித்து ஆய்வு செய்பவர்களுக்கு பேருதவியாக இருக்கின்றன. இந்த நிறுவனத்தின் சார்பில் குறள் பீடம் விருது, தொல்காப்பியர் விருது, இளம் ஆய்வாளர் விருது மற்றும் கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது ஆகியவையும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர கருத்தரங்கங்கள், இந்த நிறுவனம் தொடங்கப்பட்டு 13 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் நிரந்தர இயக்குநராக முனைவர் இரா.சந்திரசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை மத்திய வள மேம்பாட்டுதுறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இவருக்கு தற்போது மூன்று வருட பணிக்காலம் வழங்கப்பட்டுள்ளது. இது மேலும் 2 வருடங்கள் நீட்டிக்கப்படலாம். நிரந்தர இயக்குநர் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்து தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இரண்டுமுறை விழுப்புரம் தொகுதி எம்.பி ரவிக்குமாரும் எதிர்க்கட்சியினரும் வலியுறுத்தி வந்தனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இயக்குநரான முனைவர் இரா.சந்திரசேகரன், காங்கேயம் அரசுக் கலைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இவர் இரண்டு முனைவர் பட்டமும், ஐந்து முதுநிலை பட்டங்களும் பெற்றுள்ளார்.

மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரினன் ட்வீட்
மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரினன் ட்வீட்

மேலும் 18 ஆய்வு புத்தகங்களையும் 13 பாடநூல்களையும் எழுதியுள்ளார். இதோடு 92 ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். தற்போது இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திடம் 2009 - 2010-ம் ஆண்டில் இளம் அறிஞர் பட்டத்தைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் 13 வருடங்களாக இயக்குநர் நியமிக்கப்படாமல் இருந்தது. இதனால் பல பணிகள் முடங்கிக் கிடப்பதாகப் பலரும் குற்றச்சாட்டை முன்வைத்தனர். செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் இனிவரும் காலங்களில் என்ன மாதிரியான செயல்திட்டங்கள் வைத்துள்ளது என்பது குறித்து புதிய இயக்குநர் இரா.சந்திரசேகரனிடம் பேசினோம்.

`தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம். தமிழ் மொழிக்கு பணி செய்வதற்காகத் தமிழன்னை கொடுத்த வாய்ப்பாகக் கருதுகிறேன். எனது பணிக்காலத்துக்குள் தமிழ் மொழியின் பெருமைகளை, இலக்கியங்களை உலகெங்கும் கொண்டு செல்வதற்கான பணிகளை விரைந்து ஆற்றுவேன். சவாலான, மிகப்பெரிய பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2 மாதங்கள் செயல்திட்டங்கள் வகுத்து விரைந்து செயல்படுவேன். மத்திய அரசு தேவையான நிதியை வழங்கத் தயாராக உள்ளது. தமிழ்ப் பேராசிரியர்கள், மொழி சார்ந்து ஆராய்ச்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் பலருக்கும் பயனளிக்கும் வகையில் பயிலரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்படும்.

முனைவர். இரா.சந்திரசேகரன்
முனைவர். இரா.சந்திரசேகரன்

அதுகுறித்து பல அறிஞர்களுடன் கலந்தாலோசித்து வழிசெய்யப்படும். நான் உலக நாடுகள் பலவற்றுக்கும் பயணம் செய்திருக்கிறேன். கிரேக்கம், இலத்தீன் போன்ற செவ்வியல் மொழிகளுக்காக உலக பல்கலைக்கழகங்கள் செய்கின்ற பணிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அதைப் போலவே நம் தமிழ் மொழியின் இலக்கண, இலக்கிய மரபை உலகெங்கும் கொண்டு சேர்க்க வழிவகை செய்யப்படும். பலரும் இந்த நிறுவனம் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தரமான பணிகளைச் செய்வோம். பலரும் பாராட்டத்தக்க வகையில் அந்தப் பணிகள் இருக்கும்" என்றார் நம்பிக்கையுடன்.

அடுத்த கட்டுரைக்கு