Published:Updated:

`புதுக்கோட்டையில் 100 அடி ஆழக் கிணற்றுக்குள் விழுந்த ஜல்லிக்கட்டுக் காளை!’- ஒருமணி நேரத்தில் மீட்பு

காளை மீட்கும் பணி
காளை மீட்கும் பணி

100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் விழுந்து வெளியே வர முடியாமல் காளை தவித்துக்கொண்டிருந்தது. விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் காளையை மீட்கும் பணிகளில் இறங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோனார். இவருக்குப் புதூர் ஆதம்பட்டி காலனி அருகே விவசாய நிலம் உள்ளது. அங்கு பசு மாடுகள், ஆடுகள் முதலிய கால்நடைகளை வளர்த்து வருகிறார். மேலும், ஜல்லிக்கட்டுக் காளைகளை விரும்பி வளர்த்து வருகிறார். தற்போது ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற்று வருவதால், காளைகளுக்குத் தொடர்ந்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், பயிற்சிக்காக ஜல்லிக்கட்டுக் காளையை அவிழ்த்துவிட்டு, அவசர வேலையாக அவர் வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.

காளை மீட்கும் பணி
காளை மீட்கும் பணி

இந்த நிலையில்தான் அவிழ்த்துவிடப்பட்ட காளை மேய்ச்சலுக்காக செல்லும்போது, எதிர்பாராத விதமாக அவரது விவசாய நிலத்தில் இருந்த 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் கால்தவறி விழுந்துவிட்டது. கிணற்றுக்குள் அதிகளவு தண்ணீர் உள்ளது. காளை கிணற்றுக்குள் விழுந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். உள்ளே விழுந்த காளை வெளியே வர முடியாமல் தவித்துக் கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதைக் கண்ட அந்தப்பகுதி இளைஞர்கள் சிலர் காளையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களின் முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதையடுத்து, இலுப்பூர் தீயணைப்புத்துறையினருக்குப் பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த தீயணைப்புத்துறை அதிகாரிகள் உடனே சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் 100 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் இறங்கி காளையின் உடம்பில் கயிறு கட்டினார்கள்.

மீட்கப்பட்ட காளை
மீட்கப்பட்ட காளை

கயிற்றின் உதவியுடன் காளையை மெள்ள, மெள்ள மேலே தூக்கினர். 1 மணி நேரம் தொடர் போராட்டத்துக்குப் பிறகு காளையை உயிருடன் பத்திரமாக மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். காளை கிணற்றுக்குள் விழுந்த தகவல் தெரிந்த உடனே சம்பவ இடத்துக்கு வந்து, லாவகமாக காளையை மீட்ட தீயணைப்புத்துறை வீரர்கள் மற்றும் உதவியாக இருந்த இளைஞர்களையும் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

பின் செல்ல